தங்க பத்திர வெளியீடு நாளை துவங்குகிறது தங்க பத்திர வெளியீடு நாளை துவங்குகிறது ...  தங்க இ.டி.எப்., முதலீட்டில் ஆர்வம் தங்க இ.டி.எப்., முதலீட்டில் ஆர்வம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ரிசர்வ் வங்கி அறிவிப்பு: கைகூடுமா வீட்டுக் கனவு?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 அக்
2020
21:56

கொரோனா கொள்ளை நோயால் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சரிவு எனும் அரக்கனை நோக்கி, இந்திய ரிசர்வ் வங்கி தன்னுடைய அம்புறாத்துாணியில் இருந்து இன்னொரு அஸ்திரத்தை எடுத்து நாணேற்ற, மத்தியமர்கள் பயங்கரக் குஷியாகி விட்டனர். இது என்ன புது அஸ்திரம்?

கடந்த வெள்ளிக் கிழமை, 25வது நிதிக் கொள்கை குழுவின் முடிவுகளை மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுனர் சக்திகாந்த தாஸ் அறிவித்தார். ரெப்போ விகிதங்களைக் குறைக்க வில்லை என்பதோடு, எண்ணற்ற நிதித் துறை திருத்தங்களையும் அறிவித்தார். அப்போது தான் வீட்டுக் கடன் தொடர்பான அறிவிப்பு ஒன்று வந்தது. வீட்டுக் கடனுடைய, ‘இடர் மதிப்பீடு’ எனும், ‘ரிஸ்க் வெயிட்’டை கணக்கிடும் அலகான, அசல் மதிப்புக்கும் கடனுக்கும் இடையிலான விகிதமுறை மாற்றப்பட்டுள்ளது.


இடர் மதிப்பீடு

நீங்கள், 1 கோடி ரூபாய் மதிப்புள்ள பிளாட்டை வாங்குகிறீர்கள் என்று கருதிக் கொள்வோம். வங்கியில் கடன் கேட்கிறீர்கள். உங்களுடைய சம்பளம், இதர வருவாய், வேறு கடன்கள் ஆகியவற்றைப் பற்றித் தெரிந்துகொள்வார்கள். கூடவே, நீங்கள் வாங்கும் பிளாட்டின் மதிப்பையும், அதற்கு நீங்கள் கோரும் கடன் தொகையையும் குறித்துக் கொள்வார்கள். நீங்கள், 80 லட்சம் ரூபாய் கடன் கேட்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.பிளாட்டின் அசல் மதிப்புக்கும் கடனுக்கும் இடையிலான விகிதம், 80 சதவீதம். இதைத் தான், ‘லோன் டு வேல்யூ விகிதம்’ என்று அழைப்பர். சுருக்கமாக, ‘எல்.டி.வி.,’ விகிதம்.


இந்தக் கடனில் ‘இடர்’ அதிகம். ஏனெனில், நீங்கள் நினைப்பது போல், பிளாட்டின் மதிப்பு உயராமல் போகலாம். இதை எதிர்கொள்வதற்கு, வங்கிக்குள் ஒரு நடைமுறையும் உண்டு. உங்கள் கடனுக்கான இடர் மதிப்பீட்டுக்கு ஏற்ப, ஒரு குறிப்பிட்ட சதவீதத் தொகையை, வங்கி ஒதுக்கி வைக்க வேண்டும். உங்களால் கடன் கட்ட முடியாமல் மோசம் போய், வாராக் கடன் ஆகிவிட்டால், அதைத் தாங்குவதற்கான வலிமை வங்கிக்கு வேண்டுமல்லவா? அதற்காகத் தான் இந்த காபந்து தொகை ஒதுக்கீடு.


மாற்றம்

இது தொடர்பாக ஜூன், 2017 முதல் இருந்துவரும் நடைமுறையைப் பார்ப்போம். 30 லட்சம் ரூபாய் வரைக்குமான வீட்டுக் கடனுக்கு, 80 சதவீதத்துக்கும் குறைவான, எல்.டி.வி., இருக்குமானால், அங்கே இடர் மதிப்பீடு, 35 சதவீதம். 90 சதவீதம் வரை, எல்.டி.வி., விகிதம் இருக்குமானால் அங்கே இடர் மதிப்பீடு, 50 சதவீதம்.30 முதல் 75 லட்ச ரூபாய் வரையான வீட்டுக் கடனுக்கு, 80 சதவீதம் வரைக்குமான எல்.டி.வி.,க்கு, இடர் மதிப்பீடு, 35 சதவீதம்.75 லட்ச ரூபாய்க்கு மேலான கடன்களுக்கு, இடர் மதிப்பீடு, 50 சதவீதம்.

இங்கே இரண்டு அலகுகள் சேர்த்து எடுத்துக்கொள்ளப்பட்டன. ஒன்று கடன் தொகை, இரண்டு இடர் மதிப்பீடு.தற்போது, புதிய அறிவிப்பில், கடன் தொகை முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. லோன் டு வேல்யூ சார்ந்த இடர் மதிப்பீடு மட்டுமே பரிந்துரைக்கப்பட்டுள்ளது.அதாவது, 80 சதவீத எல்.டி.வி., இருக்குமானால், அதன் இடர் மதிப்பீடு, 35 சதவீதம். 80க்கு மேல், 90 சதவீதத்துக்குள் எல்.டி.வி., இருக்குமானால், இடர் மதிப்பீடு, 50 சதவீதம்.இங்கே கடன் தொகை என்ற வரையறை முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது.இது மார்ச், 31, 2022 வரை வழங்கப்படும் புதிய கடன்களுக்கே பொருந்தும்.

அர்த்தம் என்ன?

இனி பெரிய கடன்கள் கொடுக்கும்போது, அதற்கு இணையாக கூடுதல் தொகையை வங்கிகள் ஒதுக்கிவைக்க வேண்டிய தேவை இல்லை. இதனால், வங்கிகளிடம் கூடுதல் பணம் மிச்சமாகும். அதைக் கொண்டு, அவர்கள் தங்கள் வட்டி விகிதத்தைக் குறைத்துக்கொள்ள முடியும். அல்லது கூடுதல் நபர்களுக்குக் கூடுதலாக வீட்டுக் கடன் கொடுக்க முடியும்.

வீட்டின் மதிப்பு அதிகமாகவும், வாடிக்கையாளர் கோரும் கடன் தொகை குறைவாகவும் இருக்குமானால், அங்கே எல்.டி.வி., விகிதம் குறைவாக இருக்கும். அந்த மாதிரியான சந்தர்ப்பங்களில், வாடிக்கையாளருக்கு வட்டி விகிதத்தை வழக்கத்தை விடக் குறைவாகவே நிர்ணயிப்பதற்கான வாய்ப்பும் இருக்கிறது.

மாற்றம் ஏன்?

சமீபத்திய புள்ளிவிபரம் ஒன்றின்படி, இந்தியாவின் எட்டு பெரிய நகரங்களில், 75 லட்சம் ரூபாய்க்கு மேல் விலையுள்ள, 10 லட்சம் பிளாட்டுகள் விற்பனை ஆகாமல் இருக்கின்றன. ஒரு சின்ன கணக்கைப் பார்ப்போம். வீட்டுக் கடனுக்குச் செலுத்தக்கூடிய மாதாந்திர தவணைத் தொகை, அந்த வீட்டில் இருந்து பெறக்கூடிய வாடகைக்குச் சமமாகவேனும் இருக்கவேண்டும். இன்றைக்கு நிலைமை அப்படி இல்லை.


வாடகையை விட, இ.எம்.ஐ., இரண்டு மடங்கேனும் அதிகமாக இருக்கிறது. அதாவது, மத்தியமர்களால் வாங்க முடியாத அளவுக்கு, ரியல் எஸ்டேட் விலைகள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளன. கொரோனா கொள்ளை நோய் காலத்திலும், ரியல் எஸ்டேட் விலைகள் சரியவில்லை. ஒருபக்கம் வீட்டைக் கட்டிவிட்டு, கொள்வாரின்றி காத்திருக்கிறார்கள் பில்டர்கள்.


இன்னொரு பக்கம், வாங்கமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் மத்தியமர்கள். இரு தரப்பையும் இணைப்பதற்கு, கடன் வசதியைச் செய்து தரவேண்டிய வங்கிகளோ, தனக்குத் தானே கால்கட்டு ஒன்றைப் போட்டுக்கொண்டு தவித்து வந்தது. தற்போது, ஆர்.பி.ஐ., அந்தக் கால்கட்டை அவிழ்த்துவிட்டுள்ளது.

யாருக்கு உதவும்?

ரியல் எஸ்டேட் துறையில் இருந்த ஒரு சிக்கல் தீர்ந்திருக்கிறது. ஆனால், பத்திரப்பதிவு கட்டணம் முதற்கொண்டு, பல்வேறு சிக்கல்கள் அப்படியே தான் இருக்கின்றன.நீங்கள் முதல் வீடு வாங்கக்கூடியவர் என்றால், இந்த மாற்றம் உங்களுக்கு உதவும். எட்டாக்கனியாக இருக்கும் வீட்டுக் கனவைத் தொடுவதற்கு ஒரு துறட்டுக்கோல் கிடைத்திருக்கிறது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)