பதிவு செய்த நாள்
18 அக்2020
21:44

வங்கதேசத்தின் தனிநபர் வருமானம், இந்தியாவை விஞ்சப் போகிறது என்று ஐ.எம்.எப்., எனும் பன்னாட்டு நிதியம் தெரிவித்த கருத்து, பெரும் சர்ச்சையைஏற்படுத்தியுள்ளது. எதை எப்படி ஒப்பிட வேண்டும்? எந்தப் பின்னணியில் இருந்து இந்தத் தகவலை புரிந்துகொள்ள வேண்டும்?
சமீபத்தில் ஐ.எம்.எப்., ‘உலகப் பொருளாதார மதிப்பீடு’ எனும் அறிக்கையை வெளியிட்டது. அதில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 2020ல், 10.3 சதவீதம் சரியும் என்று தெரிவித்தது. ஜூன் மாதம், 4.4 சதவீதமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்ட சரிவு, தற்போது இரு மடங்கு அதிகமாகிஉள்ளது.
இந்த விபரத்தோடு, இன்னொரு செய்தியையும் தெரிவித்தது. 2020ல் இந்தியாவின் தனிநபர் வருமானம், வங்கதேசத்தின் தனிநபர் வருமானத்தை விடக் குறைவாக இருக்கும்.ஆனால், 2021ல், இந்த நிலைமை மாறும் என்று சொன்னது ஐ.எம்.எப்., கடந்த, 5 ஆண்டுகளுக்கு முன்பு, வங்கதேச தனிநபர் வருமானத்தை விட, 25 சதவீதம் கூடுதலாக இருந்த இந்தியா, தற்போது பின்தங்கி உள்ளதாக கருதப்படுகிறது.
பிரச்னை
இந்தத் தகவல் பொருளாதார மட்டத்தில் மட்டுமல்ல; அரசியல் தளத்திலும் அலைகளை ஏற்படுத்தி, விவாதப் பொருளாக மாறியுள்ளது.பிரச்னை, வெறும் எண்களையும் சதவீதத்தை மட்டுமே எடுத்துக்கொண்டு ஒப்பிடும்போது தான் ஏற்படுகிறது. முதலில் தனிநபர் வருமானம் என்பதைப் புரிந்துகொள்வோம்.ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை, அங்கே இருக்கும் மக்களின் எண்ணிக்கையால் வகுக்கும்போது கிடைப்பதே, ‘தனிநபர் வருமானம்.’ இரண்டு அலகுகள் இங்கே சம்பந்தப்பட்டுள்ளன.
இரண்டுமே மாறுதலுக்குரியவை. 2020ல் இந்தியாவின் தனிநபர் வருமானம், 1,876.53 டாலராக இருக்க, வங்கதேசத்தின் தனிநபர் வருமானம் 1,887.97 டாலராக இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. 2021ல் இந்த நிலைமை மாறும். அப்போது இந்திய தனிநபர் வருமானம் 2030.62 டாலராக இருக்க, வங்கதேசத்தின் தனிநபர் வருமானம் 1,989.85 டாலராக இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளது, ஐ.எம்.எப்.,இதை எப்படி புரிந்துகொள்ள வேண்டும்?
கடந்த, 2004ம் ஆண்டு முதல் வங்கதேசம் மிகவேகமாக வளர்ந்தது என்பது உண்மை தான். 2004 முதல், 2016 வரையான காலகட்டத்தில் பெரும் ஏற்றத்தாழ்வு ஏற்படவில்லை. காரணம், அப்போது, இந்தியா, வங்கதேசத்தை விட வேகமாக வளர்ந்தது. 2017க்கு பின், இந்தியாவின் வளர்ச்சி வேகத்தில் சுணக்கம் ஏற்பட, வங்கதேசம் முந்தியது.
இதே, 15 ஆண்டு காலகட்டத்தில், இந்தியாவின் மக்கள் தொகை, 22 சதவீதம் பெருகியிருக்க, வங்கதேசத்தின் மக்கள்தொகையோ கிட்டத்தட்ட, 19 சதவீதம் மட்டுமே உயர்ந்தது.அதாவது இந்தியாவின் மக்கள்தொகை, 112.96 கோடியில் இருந்து, 138 கோடியாக பெருக, வங்கதேசத்தின் மக்கள்தொகையோ, 13.7 கோடியில் இருந்து, 16.4 கோடியாக மட்டுமே உயர்ந்தது.
இப்படி பார்க்கும்போது, வங்கதேசத்தையும் இந்தியாவையும் எப்படி ஒப்பிட முடியும்? இதைவிட, ‘வாங்கும் திறன் சமநிலை’ எனப்படும், ‘பர்சேசிங் பவர் பாரிட்டி’ என்ற அலகு இன்னும் பொருத்தமாக இருக்கும். அதன் அடிப்படையில் மதிப்பிடப்படும் ஜி.டி.பி.,யில் இந்தியா, வங்கதேசத்தை விட, 11 மடங்கு அதிகமாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகரான அரவிந்த் சுப்பிரமணியமும் இதைத் தான் தெரிவித்தார். சரியான பொருளாதார அலகுகளோடு ஒப்பிடும்போது, வங்கதேசம் இந்தியாவை முந்தவில்லை என்பது அவரது கருத்து.பிரச்னை இங்கே நிற்கவில்லை.வங்கதேசத்தின் வளர்ச்சி மாதிரியோடு இந்தியாவை ஒப்பிட்டு, நாம் தவறவிட்ட வாய்ப்புகள் என்னென்ன என்பதைச் சர்வதேச வணிக இதழ்கள் வரிந்துகட்டிக் கொண்டு எழுதுகின்றன.
வங்கதேசம் பல ஆசிய நாடுகளைப் போல ஏழைத் தொழிலாளர்களை மையமாக வைத்து, எளிமையான வேலைவாய்ப்புகளை உருவாக்கியது.குறிப்பாக அந்த நாட்டில் ஐந்தில் இரண்டு பெண்கள் வேலைக்குப் போகிறார்கள்.அவர்களைக் கொண்டு ஏராளமான ஏற்றுமதி சரக்குகளை உருவாக்கியுள்ளனர். இதனால், அங்கே வேலைவாய்ப்புகள் பெருகியுள்ளன, வருவாய் பெருகியுள்ளது. இந்தியாவோ இதையெல்லாம் செய்யவில்லை.
இங்கே ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியோ, காலணிகள் தயாரிப்போ பெருமளவு மேற் கொள்ளப்படவே இல்லை. மென்பொருள் ஏற்றுமதி மட்டும் இல்லையென்றால், இந்தியாவின் நிலையே வேறு மாதிரி மாறியிருக்கும் என்று தெரிவிக்கின்றன சர்வதேச இதழ்கள். சீனாவும், வியட்நாமும் இதற்கான கலங்கரை விளக்கமாகச் சுட்டிக்காட்டப்படுகின்றன.
அதாவது, இங்கே போதிய தொழில் திறனற்ற ஏழை உழைப்பாளர் உள்ளனர். சீனா மற்றும் வியட்நாமைப் போல் நாம் ஏன் அவர்களுடைய உழைப்பைச் சுரண்ட வில்லை, சீரழிக்க வில்லை என்று கேட்கிறார்கள்.மேற்குலகுக்குச் சேவகம் செய்யும் கொத்தடிமைகளை ஏன் உருவாக்கவில்லை என்று வினவுகிறார்கள். இது தான் ஏழை நாடுகளின் வளர்ச்சி மாதிரி, இதைத் தானே நீயும் பின்பற்றியிருக்க வேண்டும் என்று இந்தியாவைக் காலில் போட்டுத் தேய்கிறார்கள்.
தேவையில்லை
இந்த அணுகுமுறையைப் பின்பற்றியிருந்தால், இந்தியாவின் ஏழை எளியவர்களுக்கு வேலை கிடைத்திருக்கும். நகரங்களை நோக்கி நகரும் இடப்பெயர்வு தவிர்க்கப்பட்டிருக்கும். உள்ளூர் பொருளாதாரம் பிழைத்திருக்கும் என்று ஆருடம் சொல்கிறார்கள்.இவர்கள் எல்லாரும் வசதியாக மறந்துவிட விரும்பும் பல விஷயங்கள் உண்டு. வங்கதேசத்தையே எடுத்துக்கொள்வோமே.
அங்கே தொழிலாளர் சட்டங்கள் கடுமையாக இல்லை.பாதிப்புகள் ஏற்பட்டால் இழப்பீடோ, பாதுகாப்போ ஒன்றுமே கிடையாது.குறிப்பாக பல ஆயத்த ஆடை தொழிலகங்களில் உயிர் பாதுகாப்பே கிடையாது. 2012 தீ விபத்தில், 117 பலி, 2013 நடைபெற்ற மிகப்பெரிய கட்டட சரிவில், 1,100 பலி; 2016ல் ஒரு ஸ்வெட்டர் தொழிற்சாலையில் அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், 7 பேர் பலி. ஷிப்டு துவங்கி யிருந்தால் அங்கே, 6,000 பேர் இருந்திருப்பர்.
இந்த பாதிப்புகள் வெளியே தெரியவந்தவுடன், மேற்குலக நிறுவனங்கள் நீலிக் கண்ணீர் வடித்தன.உடனடியாக, ‘உங்களிடம் இருந்து சரக்குகள் வாங்குவதில்லை, நாங்கள் மனித உயிர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள்’ என்று பல பெரிய நிறுவனங்கள், வங்கதேச ஆயத்த ஆடை நிறுவனங்களோடு போட்டுக்கொண்ட ஒப்பந்தங்களை ரத்து செய்தன.ஆனால், ஒருசில ஆண்டுகளில், மீண்டும் பழைய குருடி, கதவைத் திறடி என்று அங்கேயே போய் விழுந்து, ஏழைத் தொழிலாளர்களின் குருதியிலும் வியர்வையிலும், டாலர் சிரிப்பு சிரிக்கத் துவங்கிவிட்டன.
இதைத் தான் நாம் செய்ய வில்லை, வாய்ப்புகளைத் தவறவிட்டுவிட்டோம் என்று எழுதுகின்றன மேலைநாட்டு இதழ்கள். இப்படிச் செய்வது தான் வளர்ச்சி என்றால் அந்த வளர்ச்சி நமக்குத் தேவையே இல்லை.இதன்மூலம் ஒரு நாடு, நம்மைவிட தனிநபர் வருமானத்தில் உயர்ந்திருக்கிறது என்றால், அந்த உயரம் மனிதாபிமானமற்றது; அது நமக்குத் தேவையே இல்லை. ‘கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கிடில், கைகொட்டிச் சிரியாரோ?’
ஆர்.வெங்கடேஷ்
pattamvenkatesh@gmail.com9841053881
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|