பதிவு செய்த நாள்
25 அக்2020
21:24

மறுமுதலீடு செய்யும் போது, வைப்பு நிதியை புதுப்பிக்க தேர்வு செய்யும் வழிமுறை உள்ளிட்ட அம்சங்களில் முதலீட்டாளர்கள் கவனம் செலுத்துவது அவசியம்.
இந்தியர்கள் மத்தியில், வைப்பு நிதி மிகவும் பிரபலமான முதலீடாக இருக்கிறது. வைப்பு நிதி பாதுகாப்பானதாக கருதப்படுவதோடு, எளிதானதாகவும் இருப்பதே இதற்கு முக்கிய காரணம். வங்கி வைப்பு நிதிகளில் முதலீடு செய்யும் போது, வட்டி விகிதம், வட்டி பலனை பெறும் கால அளவு, முதலீடு காலம் ஆகிய அம்சங்களை மட்டும் தேர்வு செய்தால் போதுமானது.
வைப்பு நிதி அளிக்கும் பலன் நிலையானது என்பதால், மற்ற கணக்குகள் அவசியம் இல்லை. தேவை எனில், வைப்பு நிதியை மறுமுதலீடு செய்து கொள்ளலாம். மேலும், தானாக புதுப்பிக்கும் வசதியை தேர்வு செய்தால், முதிர்வடையும் காலத்தில் வைப்பு நிதி முதலீட்டை தொடரலாம். எனினும், இப்படி தானாக புதுப்பிக்கும் வாய்ப்பை நாடுவது, சிறந்த வாய்ப்பாக அமையாது என்பதை உணர வேண்டும்.
தொடர் முதலீடு
வைப்பு நிதி தொகையை முதிர்வடையும் காலத்தில் விலக்கிக் கொள்ளலாம் அல்லது தொடர்ந்து முதலீடு செய்யலாம். ஓய்வூதியதாரர்கள் உள்ளிட்டவர்கள் வைப்பு நிதியை தொடர்ந்து மறுமுதலீடு செய்யும் வழிமுறையை நாடுகின்றனர். எனினும், குறித்த காலத்தில் வைப்பு நிதியை மறுமுதலீடு செய்யத் தவறினால், அந்த தொகை சேமிப்பு கணக்கில் செலுத்தப்பட்டு, அதன் மூலம் கிடைக்கக் கூடிய வட்டி வருமானத்தை தவறவிடலாம்.
இதை தவிர்ப்பதற்காக, வைப்பு நிதி தானாக புதுப்பிக்கப்படும் வசதி வங்கிகளால் அளிக்கப்படுகிறது.‘ஆட்டோ ரென்யூவல்’ எனப்படும், தானாக புதுப்பிக்கப்படும் வாய்ப்பை தேர்வு செய்து கொண்டால், முதிர்வடையும் காலத்தில், வைப்பு நிதி தொகை தானாக புதுப்பிக்கப்படும். இதன் மூலம், முதலீட்டை தடையின்றி தொடரலாம்.
மறதி காரணமாக வைப்பு நிதியை புதுப்பிக்கத் தவறுவதையும் தவிர்க்கலாம் என்பதோடு, வங்கி கிளைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லாமலேயே முதலீட்டை தொடரலாம். ஒன்றுக்கு மேற்பட்ட வைப்பு நிதி வைத்திருப்பவர்களுக்கு, இந்த வாய்ப்பு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது.
வட்டி விகித பலன்
எனினும், வைப்பு நிதி நிர்வாகத்தில் கவனம் செலுத்த விரும்புகிறவர்கள், தானாக புதுப்பிக்கும் வாய்ப்பை நாடுவதை விட, வங்கி கிளைக்கு சென்று முதலீட்டை புதுப்பிக்க தீர்மானிப்பதே சிறந்த வழியாக அமையும். வங்கி தரப்பில் புதுப்பிக்கப்படும் போது, முதலீட்டாளருக்கு சிறந்த வட்டி விகிதம் கிடைக்காமல் போகலாம் என்பதே இதற்கு காரணம். ஏனெனில், வைப்பு நிதியை புதுப்பிப்பதற்கான நடைமுறை வங்கிக்கு வங்கி மாறுபடலாம்.
ஒரு சில வங்கிகள், ஏற்கனவே முதலீடு செய்யப்பட்ட காலத்திற்கு மறுமுதலீடு செய்யலாம். சில வங்கிகள் ஒரு ஆண்டு காலத்திற்கு புதுப்பிக்கலாம். இந்த தேர்வுகள், முதலீட்டாளருக்கு ஏற்றதாக இருக்கும் என சொல்வதற்கில்லை.வைப்பு நிதி மூலம் அதிக வட்டி விகித பலன் பெறுவதற்கு, சரியான முதலீட்டு காலத்தை தேர்வு செய்ய வேண்டும். தானாக புதுப்பிக்கப்படும் போது இது சாத்தியம் இல்லை.
ஆனால், முதலீட்டாளரே நேரில் சென்று புதுப்பிக்கும் போது, சிறந்த வட்டி விகித பலனை அளிக்கும் கால அளவை தேர்வு செய்யலாம். தற்போது, வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதம் குறைவாக உள்ள சூழலில் இது மேலும் முக்கியமாகிறது. குறித்த காலத்தில் முதலீட்டை தொடர, முதிர்வு காலத்தை நினைவூட்ட, நிதி நிர்வாக செயலிகளை பயன்படுத்தலாம்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|