பதிவு செய்த நாள்
20 டிச2020
20:49

கடந்த ஒரு மாதத்தில் மட்டும், நாடெங்கும், சரக்கு மற்றும் சேவை வரியைச் செலுத்தாமல் ஏய்ப்பவர்கள் மீதான ஏராளமான கைது நடவடிக்கைகள். ஏன் இத்தகைய கைது?
டில்லியிலும், ஹிமாச்சல பிரதேசத்திலும், 4,839 போலி நிறுவனங்கள் மீது, 1,488 வழக்குகள் பதியப்பட்டு, அதில், 140 பேர் கைது; சென்னை நிறுவனத்தைச் சேர்ந்த மூவர் கைது. இவர்கள் எல்லாரும், ஜி.எஸ்.டி., வரியைச் செலுத்துவதில் பல தில்லுமுல்லுகள் செய்ததாக, மறைமுக வரிகள் துறை சொல்கிறது.
தகிடுதத்தங்கள்
போலி நிறுவனங்கள், இன்வாய்ஸ்கள், சர்க்குலர் டிரேடிங் என்றெல்லாம் மோசடி கும்பல்கள் புறப்பட்டுள்ளன. உள்ளீட்டு வரியைக் கூடுதலாகப் பெறுவதற்கு செய்யப்பட்ட தகிடுதத்தங்கள் இவை. அதாவது, அரசுக்குச் செலுத்த வேண்டிய வரியைக் கட்டாமல் ஏய்ப்பது, வர்த்தகம் நடந்ததாக போலி ஆவணங்களைத் தயாரித்து, அரசிடம் இருந்து கூடுதல் தொகை பெற முயற்சிப்பது ஆகியவை அடிப்படை.ஜி.எஸ்.டி., சிஸ்டத்தை ஏமாற்றி, கல்லா கட்டிவிட முடியும் என்று நினைத்த சாகசக்காரர்களுக்கு, ஒரு விஷயம் புரியவில்லை.
இந்த சிஸ்டத்துக்குப் பின்னே இயங்குவது மிக நவீனமான செயற்கை நுண்ணறிவு மென்பொருட்கள். ஒவ்வொரு ‘பில்’லையும் அதன் ஆதியோடு அந்தமாக அது வரிசைப் படுத்தி, தவறைத் துல்லியமாக காட்டிக்கொடுத்துவிடும். அதனால், தவறு செய்பவர்கள் மாட்டிக் கொள்வதில் வியப்பே இல்லை.
பின்விளைவுகள்
ஆனால், வியப்பு வேறு இடத்தில்இருக்கிறது. ஜி.எஸ்.டி., அமல் செய்யப்பட்டபோது, இதில் தவறு செய்கிறவர்களை கைது செய்யும் அதிகாரம், ஜி.எஸ்.டி., அதிகாரிகளுக்கு வழங்கப் பட்டதை, அப்போதே பலரும் ஆட்சேபித்தனர். நம் நாட்டில் மிகப் பெரிய பொருளாதாரக் குற்றவாளிகள் கூட, ஜாலியாக வெளியே உலவியபடி இருக்கும்போது, ஜி.எஸ்.டி., வரி ஏய்ப்பு செய்தவர்களை கைது செய்ய முயற்சிப்பது,வேறு பின்விளைவுகளையே ஏற்படுத்திவிடும்.
வரி ஏய்ப்பு செய்தால், ஏமாற்றினால், கூடுதலாக அபராதங்கள் போடுங்கள். அதைச் செலுத்த முடியாதவர்கள் நீதிமன்ற படியேறி, வாழ்க்கை முழுதும் கேஸ் நடத்தி நடுத்தெருவுக்கு வரட்டும். ஆனால், ஜி.எஸ்.டி., அதிகாரிகளே கைது செய்ய முடியும் எனும்போது, அந்த அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம்.
கடந்த ஆண்டே, இது தொடர்பான வழக்கு ஒன்று மும்பை நீதிமன்றத்துக்கு வந்தபோது, குற்றம் சாட்டப்பட்ட சிலருக்கு ஜாமின் வழங்கியதோடு, ஜி.எஸ்.டி., அதிகாரிகளை விமர்சித்தனர் நீதிபதிகள். தற்போது, மேலும் பலர் டில்லி, மும்பை, ஒடிசா, உத்தரகண்ட் உயர் நீதிமன்றங்களை அணுகி, பரிகாரம் தேட முனைந்துள்ளனர்.வருவாய் இழப்பு ஏற்படுத்த முனையும் எவரையும் விட்டுவிட வேண்டும் என்று சொல்லவில்லை.ஆனால், ஜி.எஸ்.டி.,யே இன்னும் புரியாத பல நிறுவனங்கள் உள்ளன. இதில் ஏராளமான படிவங்கள், உத்தரவுகள், தெளிவுகள், மறு உத்தரவுகள் என்று ஆவணங்கள் அணிவகுக்கின்றன.
கைது பீதி
இந்நிலையில், பலரும் தெரியாமல் செய்யும் தவறுகள் ஏராளம். அவர்கள் எல்லாருக்கும் எங்கே நாமும் கைது செய்யப்பட்டு விடுவோமோ என்ற பீதி உருவாகியிருக்கிறது. கைது செய்யப்பட்டால், தனிப்பட்ட மரியாதை மட்டுமல்ல, சந்தையில் தங்களுடைய நிறுவனத்துக்கு இருக்கும் மரியாதையும் குலைந்து போய்விடுமே என அஞ்சுகின்றனர்.
இதன் விளைவு என்ன தெரியுமா? படிப்படியாக, தொழில் செய்யும் ஆர்வத்தையே இழந்து விடுவர் என்பது தான்.வருமான வரியையே எடுத்துக் கொள்ளுங்கள். அதில் உள்ள எளிமையும், தெளிவும் இன்னும் ஜி.எஸ்.டி., விஷயத்தில் கிடைக்கவில்லை. அதை நோக்கி அணுகுமுறையை நகர்த்த வேண்டியது தான் முக்கியம்.
நுண்ணறிவு உத்திகள்
மேலும், செயற்கை நுண்ணறிவுஉத்திகளை கையாண்டு, மறைமுக வரிகள் துறை, அதில் முன்னேற்றத்தைக் கொண்டு வந்து, தவறு செய்வோரை மட்டும் குறிப்பிட்டு கண்டுபிடிக்க முடியுமே! ஜி.எஸ்.டி., நடைமுறையில் ஓட்டைகள்இருந்தால் அவற்றை அடைக்க முடியுமே!
ஆக்கப்பூர்வமான வழிகளே இந்திய சிறு, குறு, நடுத்தரத் தொழிலதிபர்களைக் காக்கும்; முறையாக ஜி.எஸ்.டி.,செலுத்தவும் துாண்டும், வருவாயும் பெருகும். இவர்கள் பொன் முட்டையிடும் வாத்துகள். அரவணைத்தால் தொடர்ந்து முட்டை கிடைக்கும்; அடித்தால் வாத்து காணாமல் போகும்!
ஆர்.வெங்கடேஷ்
pattamvenkatesh@gmail.com98410 53881
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|