பதிவு செய்த நாள்
20 டிச2020
21:09

தங்கம், இந்த ஆண்டு அதிக பலன் அளித்த நிலையில், 2021ம் ஆண்டில் தங்கம் அளிக்கும் நிலை எப்படி இருக்கும் என்பது பற்றி ஒரு அலசல்.அண்மை காலமாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்திற்கு உள்ளாகி இருக்கிறது. பங்குகள் மீது முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டும் நிலையில், தங்கத்தின் விலை இனி எவ்விதம் அமையும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தங்கத்தின் மதிப்பு உச்சம் தொட்ட நிலையில், அதன் பிறகு லேசான சரிவுக்கு உள்ளாகியது. எனினும் இந்த ஆண்டு தங்கம், 25 சதவீத பலன் அளித்து உள்ளது. பொருளாதார தேக்கம் நிலவிய, 2008ம் ஆண்டுக்கு பிறகு, தங்கம் அளிக்கும் பலனில் இது இரண்டாவது சிறந்த ஆண்டாக கருதப்படுகிறது.
சர்வதேச சூழல்
தங்கம் அதிக பலன் அளித்ததற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. பொதுவாகவே, சர்வதேச அளவில் நெருக்கடியான சூழலில், தங்கம் பாதுகாப்பான முதலீட்டாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு துவக்கத்தில் உலகை உலுக்கிய கொரோனா பெருந்தொற்று சூழலுக்கு மத்தியில், பாதுகாப்பான அம்சம் காரணமாக தங்கம் முதலீடு நோக்கில் ஈர்த்தது. தங்கத்தின் மதிப்பு உயர இது முக்கிய காரணமாக அமைந்தது.
மேலும், கொரோனாவை கட்டுப்படுத்த அமல் செய்யப்பட்ட பொது முடக்கம், பொருளாதார நிச்சயமற்ற சூழல் ஆகியவையும் தங்கத்தின் நிலைக்கு வலு சேர்த்தன.பங்குச்சந்தை ஏற்ற இறக்கம் காரணமாகவும், முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீட்டை நாடும் போக்கு காணப்பட்டது. எனினும், கொரோனா தடுப்பூசி முயற்சியில் ஏற்பட்டு வரும் முன்னேற்றம் காரணமாக, பொருளாதார மீட்சி தொடர்பான நம்பிக்கை பரவலாக காணப்படுகிறது. சந்தையில் பணமாக்கும் தன்மை அதிகரித்து இருப்பது மற்றும் அமெரிக்க தேர்தல் தொடர்பான நிச்சயமற்ற தன்மை விலகியதும், முதலீட்டாளர்கள் மத்தியில் தாக்கம் செலுத்துகிறது.
விலைப்போக்கு
இந்த பின்னணியில், பங்கு முதலீடு தொடர்பான இடர் குறைந்திருப்பதாக முதலீட்டாளர்கள் கருதும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே, கிரிப்டோ நாணயமான பிட்காயின் மதிப்பும் திடீரென அதிகரிக்கத் துவங்கியுள்ளது, தங்கத்தின் பளபளப்பை குறைத்திருப்பதாக வல்லுனர்கள் கருதுகின்றனர்.பிட்காயின் தங்கத்திற்கு மாற்றாக அமையும் என்பது தொடர்பான விவாதமும் நடைபெற்று வருகிறது. இந்த அம்சங்கள் தங்கத்தின் விலை மீது தாக்கம் செலுத்துகின்றன.
இந்நிலையில், தங்க முதலீட்டை தொடர்வது ஏற்றதா, லாபம் பார்ப்பது சரியானதா போன்ற கேள்விகள் இயல்பாக எழுகின்றன.தங்கத்தின் விலைப்போக்கு தொடர்பாக பலவித கணிப்புகள் நிலவினாலும், அதன் மதிப்பை தீர்மானிக்கும் அடிப்படை அம்சங்கள் மாறிவிடவில்லை என்பதை கவனிக்க வேண்டும். இந்த சூழலில், லாப நோக்கில் தங்கத்தை அணுகுபவர்கள் இந்த போக்குகளால் கவலை அடைந்தாலும், முதலீடு நோக்கில் தங்கத்தை அணுகுபவர் நிதானம் காக்க வேண்டும் என வல்லுனர்கள் கருதுகின்றனர்.
மொத்த முதலீடு தொகுப்பில் தங்கத்தின் அளவு, 10 முதல் 15 சதவீதம் இருக்கலாம் எனும் உத்தியை பின்பற்றலாம் என்று பரிந்துரைக்கின்றனர். இதை, 20 சதவீதம் வரை அதிகரிக்கலாம் என்றும் சிலர் பரிந்துரைக்கின்றனர். விலை குறையும் போது வாங்குவதும் நல்ல உத்தியாக இருக்கும் என்கின்றனர். தங்க சேமிப்பு பத்திரங்கள், தங்க இ.டி.எப்., ஆகிய வாய்ப்புகளையும் பரிசீலிப்பது ஏற்றதாக இருக்கும்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|