பதிவு செய்த நாள்
03 ஜன2021
21:44

வெளிநாட்டு பங்குகள், டெப்ட் பண்ட் அணுகுமுறையில் மாற்றம் உள்ளிட்ட புதிய போக்குகள், மியூச்சுவல் பண்ட் துறையில் தாக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றன.
மியூச்சுவல் பண்ட் துறையை பொறுத்தவரை, கடந்த ஆண்டு சவாலான ஆண்டாக அமைந்தது. கொரோனா தொற்று துவக்கத்தில் சமபங்கு சார்ந்த மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு அதிகரித்தது. அதன்பின், சமபங்கு திட்டங்களின் நிகர வெளியேற்றம் அதிகரித்தது. இந்த கால கட்டத்தில் பங்குச்சந்தை எழுச்சி அடைந்ததை அடுத்து, மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்கள் பலரும் நேரடி பங்கு முதலீட்டில் கவனம் செலுத்தியதாக கருதப்படுகிறது.
இந்த காலகட்டத்தில், புதிய டிமெட் கணக்குகளும் அதிகம் துவங்கப்பட்டன. வேறு பல சிக்கல்களையும் மியூச்சுவல் பண்ட் துறை எதிர்கொண்ட நிலையில், இந்த ஆண்டு மியூச்சுவல் பண்ட் முதலீட்டில் தாக்கம் செலுத்தக்கூடிய முக்கிய போக்குகளை பார்க்கலாம்.
வெளிநாட்டு பங்குகள்
சர்வதேச பங்குகள் முதலீடு செய்யும் வாய்ப்பு குறித்து, நிதித்துறையில் அண்மை காலமாக விவாதிக்கப்படுகிறது. இது அதிக நிகரமதிப்பு கொண்டமுதலீட்டாளர்களுக் கானது என்றாலும், மியூச்சுவல் பண்ட்களில், சில வெளிநாட்டு பங்குகளில் முதலீடு செய்யும் முறையை பின்பற்றலாம் எனக் கருதப்படுகிறது. பி.பி.எப்.ஏ.எஸ்., மியூச்சுவல் பண்ட் தன் திட்டம் ஒன்றில், 35 சதவீதம் வரை வெளிநாட்டு பங்குகளின், எஞ்சியவற்றை இந்திய பங்குகளிலும் முதலீடு செய்தது. வேறு சில நிறுவனங்களும் இந்த முறையை பின்பற்ற துவங்கியுள்ளன. சர்வதேச பங்கு மூலமான பரவலாக்கம், இதன் சாதகமான அம்சமாக அமைகிறது.
இதே போல, டெப்ட் பண்ட் எனப்படும் கடன்சார் நிதிகளிலும் முக்கிய மாற்றம் நிகழ்ந்து வருகிறது. பொதுவாக, வைப்பு நிதி போன்றவற்றுக்கு மாற்றாக டெப்ட் பண்ட்கள் கருதப் பட்டாலும், குறிப்பிட்ட பலனை உறுதி செய்ய முடியாதது, இதன் பாதகமான அம்சமாக வழக்கமான முதலீட்டாளர்களால் பார்க்கப்படுகிறது. எனவே, மரபான அணுகுமுறை கொண்ட முதலீட்டாளர்கள், நிலையான பலன் அளிக்கும் முதலீடுகளை நாடுகின்றனர். இதை எதிர்கொள்ளும் வகையில் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள், ரோல் டவுன் மெச்சூரிட்டி எனும் யுக்தியை பின்பற்ற துவங்கியுள்ளன.
சுற்றுச்சூழல் முதலீடு
எதிர்பார்த்த பலன் அளிக்க கூடிய, ‘பிக்சட் மெச்சூரிட்டி பிளான்’ திட்டங்களின் நீட்சியாக இந்த யுக்தி கருதப்படுகிறது. இதன்படி, மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள், குறிப்பிட்ட இலக்கு காலத்தை கொண்டு, அதற்கேற்ப பத்திரங்களில் முதலீடு செய்யும். பலனை உறுதி செய்ய முடியாவிட்டாலும், குறிப்பிட்ட காலம் வரை வைத்திருந்தால், கிடைக்க கூடிய பலனை எதிர்பார்க்கலாம்.
மேலும், இடைப்பட்ட காலத்தில் வெளியேறும் வாய்ப்பு கொண்டதாகவும் இந்த நிதிகள் அமைந்து இருக்கும். வரி நோக்கிலும் இவை ஏற்றதாக அமையும் என்பதோடு, பத்திரங்கள் தரமானவையாக இருந்தால், பலனும் அதிகமாக இருக்கும்.சுற்றுச்சூழல் தாக்கம் உள்ளிட்ட சமூக பொறுப்புணர்வு அம்சங்களின் அடிப்படையில், நிறுவனங்களில் முதலீடு செய்யும், இ.எஸ்.ஜி., வகை மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் கடந்த ஆண்டு அறிமுகமாயின.
இந்த வகை நிதிகள் மேலும் அதிகம் அறிமுகம் ஆக வாய்ப்புள்ளது. நீண்ட கால நோக்கில் இவை முதலீட்டாளர்களுக்கு பலன் அளிக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இவை தவிர, மியூச்சுவல் பண்ட்களின் இடர் தன்மையை குறிக்க பயன்படும் ரிஸ்கோமீட்டரும் மேம்பட்ட அம்சங்களுடன் பயன்பாட்டுக்கு வருவது, முதலீட்டாளர்களுக்கு பயனுள்ளதாக அமையும்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|