பதிவு செய்த நாள்
31 ஜன2021
21:18

எளிமையான ஆண்டளிப்பு திட்டமாக அமையும், ‘சரல் பென்ஷன்’ திட்டம், சரண்டர் செய்வது, கடன் வசதி உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது.இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி, எளிமையாக்கப்பட்ட ஆண்டளிப்பு திட்டம், வரும் ஏப்ரல் மாதம் முதல் அறிமுகம் ஆக உள்ளது.
சரல் பென்ஷன் திட்டம் என அழைக்கப்படும் இந்த திட்டத்தை, அனைத்து ஆயுள் காப்பீடு நிறுவனமும் வழங்க வேண்டும். ஓய்வு காலத்திற்கான ஆண்டளிப்பு திட்டங்களில் எளிமையானதாக அமைந்திருக்கும் இந்த திட்டத்தின் சிறப்பம்சங்கள் மற்றும் பலன்களை பார்க்கலாம்.
தெளிவான திட்டம்
ஆண்டளிப்பு திட்டங்கள், ஓய்வு காலத்தில் சீரான வருமானம் பெற வழி செய்யும் வகையில் காப்பீடு நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன. சந்தையில் பல்வேறு ஆண்டளிப்பு திட்டங்கள் இருந்தாலும், இவை பல்வேறு வாய்ப்புகளை கொண்டிருப்பதால், இவற்றை புரிந்து கொள்வது சிக்கலாக இருக்கிறது.
உடனடியாக பலன் பெறும் வசதி, காத்திருந்து பலன் பெறும் வசதி மற்றும் பல்வேறு விதமான தேர்வுகள் உள்ளன.இந்நிலையில், எளிதாக புரிந்து கொள்ளக்கூடிய வகையில் ஒரே விதமான தன்மை கொண்ட ஆண்டளிப்பு திட்டத்தை, ‘சரல் பென்ஷன் யோஜனா’ எனும் பெயரில் காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் அறிமுகம் செய்து, இதற்கான நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
இந்த திட்டம், மொத்தமாக ஒரு முறை பிரிமியம் செலுத்தும் தன்மை கொண்டது; 40 வயது முதல், 80 வயதானவர்கள் வரை இந்த பாலிசியை பெறலாம். குறைந்தபட்சமாக மாதம், 1,000 ரூபாய் பெறும் வகையில் திட்டம் அமைந்துள்ளது. இதை காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டு அடிப்படையில் பெற்றுக் கொள்ளலாம்.இரண்டு விதமான ஆண்டளிப்பு வாய்ப்பை அளிக்கிறது.
முதல் வாய்ப்பின் படி, ஆண்டளிப்பு பெறுபவர், வாழ்நாள் முழுவதும் குறிப்பிட்ட தொகையை பெறலாம்.அவரது மரணத்திற்கு பின், ‘நாமினி’ அல்லது சட்டப்பூர்வ வாரிசுக்கு, ‘பர்சேஸ் பிரைஸ்’ எனப்படும் பாலிசி தொகை வழங்கப்படும்.
‘சரண்டர்’ வசதி
திட்டத்தின் இரண்டாம் வாய்ப்பின்படி, கூட்டாக ஆண்டளிப்பு பெறலாம். முதன்மை ஆண்டளிப்பு பெறுபவர் இறந்துவிட்டால், அவரது வாழ்க்கை துணைக்கு ஆண்டளிப்பு தொடர்பு; அவரது மறைவுக்கு பின், வாரிசுதாரருக்கு வழங்கப்படும். குழப்பம் இல்லாமல் தேர்வு செய்யும் வகையில் எளிமையாக அமைந்திருப்பது இந்த திட்டத்தின் முக்கிய பலமாக கருதப்படுகிறது.
மேலும், மற்ற திட்டங்களில் இல்லாத அம்சங்களும் இதில் உள்ளன.பொதுவாக ஆண்டளிப்பு திட்டங்களில் இடையே விலக முடியாது. இந்த திட்டத்தில், குறிப்பிட்ட சூழல்களில் இது சாத்தியம். பாலிசிதாரர் அல்லது வாரிசுகளுக்கு புற்றுநோய் போன்ற நோய் பாதிப்பு உள்ளிட்ட சூழல்களில், பாலிசியை ‘சரண்டர்’ செய்தால், 95 சதவீத தொகை அளிக்கப்படும்.
திட்டம் துவங்கிய ஆறு மாதத்திற்கு பிறகு இது சாத்தியம். இதே போல, பாலிசி மீது கடன் வசதி பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் உள்ளது.இந்த அம்சங்களால் இத்திட்டம் ஈர்ப்புடையதாக அமைகிறது.
ஓய்வு கால பாதுகாப்பிற்கு இந்த திட்டம் கைகொடுக்கும். எனினும், ஆண்டளிப்பு திட்டங்களின் வட்டி விகிதம் குறைவு என்பதை மனதில் கொள்ள வேண்டும். மேலும் வரி விதிப்பும் பொருந்தும். எனவே, அதிக வட்டி தரும் சிறுசேமிப்பு திட்டங்கள் போன்றவற்றுடன் சேர்த்து திட்டமிட்டு, அதற்கேற்ப இதில் முதலீடு செய்வது பலனுள்ளதாக அமையும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|