பதிவு செய்த நாள்
09 பிப்2021
03:23

புதுடில்லி : தனியார்மயமாக்கலை விரைவுபடுத்தும் வகையில், மத்திய அரசு, அதன் கீழ் உள்ள, 300 நிறுவனங்களை, 12 ஆக குறைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
மத்திய நிதியமைச்சர், தன் பட்ஜெட் உரையில், பொதுத் துறை நிறுவன பங்கு விலக்கல் குறித்து குறிப்பிட்டிருந்தார். அதில், ‘வரி செலுத்துவோரின் பணம் சரியான முறையில் செலவழிக்கப்பட வேண்டும். எனவே, அரசு குறிப்பிட்ட சில பொதுத் துறை நிறுவனங்களை மட்டும் வைத்துக் கொண்டு, மற்ற நிறுவன பங்குகளை விற்க முடிவெடுத்துள்ளது’ என, தெரிவித்திருந்தார்.அதன் தொடர்ச்சியாக, தற்போது முக்கியமான துறை சார்ந்த நிறுவனங்கள் தவிர்த்து, பிற பெரும்பாலான நிறுவனங்களிலிருந்து அரசு வெளியேற திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இது குறித்து, உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:பட்ஜெட் அறிவிப்புகளை அடுத்து, எந்தெந்த நிறுவனங்களில் பங்கு விலக்கலை மேற்கொள்ளலாம் என்பது குறித்த பட்டியலை தயாரிக்கும் பணியில், ‘நிடி ஆயோக்’ இறங்கி உள்ளது. இதன் பரிந்துரைகள் குறித்து, மத்திய அமைச்சரவை குழு இறுதி முடிவெடுக்கும்.இப்போதைய நிலையில், 300 நிறுவனங்களை 12 ஆக குறைத்துவிட திட்டமிடப்பட்டுள்ளது.
அணுசக்தி, விண்வெளி, பாதுகாப்பு, போக்குவரத்து, தொலை தொடர்பு, மின்சாரம், பெட்ரோலியம், நிலக்கரி மற்றும் பிற கனிமங்கள், வங்கி, காப்பீடு மற்றும் நிதி சேவைகள் ஆகிய துறைகளில், அரசுக்குச் சொந்தமாக, குறைந்த அளவிலான நிறுவனங்களே இருக்கும்.மீதி நிறுவனங்கள், தனியார்மயமாக்கப்படும் அல்லது மூடப்படும்.இந்த முறை தனியார்மயமாக்கல் குறித்து, மிகவும் தெளிவான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இனி, தனியார் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், தேவையான முதலீடுகளை மேற்கொண்டு, நிறுவனங்களின் செயல்பாடுகளை மேம்படுத்துவதோடு, கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்பதற்கு, அரசுக்கு உதவிகரமாகவும் இருப்பர். கடந்த, 2019ம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி, மொத்தம், 348 மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் நாட்டில் உள்ளன. இவற்றில், 249 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், 86 நிறுவனங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. 13 நிறுவனங்களை மூடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|