பதிவு செய்த நாள்
09 பிப்2021
10:19

கோவை மாவட்டத்தில், 3,000க்கும் மேற்பட்ட சிறு, குறு மோட்டார் பம்ப் செட் உற்பத்தியாளர்கள் உள்ளனர். இவர்களை நம்பி, 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ‘ஆர்டர்’ எடுத்து தொழில் நடத்தி வருகின்றனர். தொழிற்சாலை, வீடு, விவசாயம் என, பல்வேறு தேவைகளுக்கு மோட்டார் பம்ப் செட்கள் இங்கிருந்து உற்பத்தியாகின்றன.
தமிழகம் மட்டுமின்றி அண்டைய மாநிலங்களான, ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் வடமாநிலங்களுக்கு கோவையில் இருந்து தான் மோட்டார் பம்ப் செட்கள் அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. சமீபகாலமாக, மூலப்பொருட்களின் தொடர் விலையேற்றம் இதன் உற்பத்தியை பாதியாக குறைந்து விட்டது.மோட்டார் பம்ப் செட் தொழிலுக்கு முக்கிய மூலதனமான ‘காப்பர்’, ஸ்டீல் ராடு, காந்த அலை தகடுகள் எனும் ‘ஸ்டாம்பிங்’, பிளாஸ்டிக் உள்ளிட்டவற்றின் விலை, தற்போது, 20 சதவீதம் கூடியுள்ளதால், தொழில் நடத்த முடியாமல் சிறு, குறு பம்ப்செட் உற்பத்தியாளர்கள் திணறுகின்றனர்.தற்போது, ‘ஆர்டர்’, நல்ல ‘மார்க்கெட்’ இருந்தும் மூலப்பொருட்கள் விலையேற்றம் என்பது, குறு, சிறு தொழில் நிறுவனங்களின் உற்பத்தியையும், வாடிக்கையாளர்களிடம் நுகர்வையும் குறைத்து வருகிறது. இதனால், மோட்டார் பம்ப் செட் விற்பனை என்பது, தினமும், 25 சதவீதமாக குறைந்து விட்டதாக உற்பத்தியாளர்கள் புலம்புகின்றனர்.
கோவை பம்ப்செட் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் மணிராஜ் கூறியதாவது: கோவையில் இருந்து அண்டைய மற்றும் வடமாநிலங்களுக்கு, ‘சீசன்’ சமயத்தில் தினமும், 25 ஆயிரம் மோட்டார் பம்ப் செட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வந்தன. மூலப்பொருட்கள் விலையேற்றம் உற்பத்தியையும், விற்பனையும் பாதித்து வருகிறது. டீலர்கள் பலர், பழைய விலைக்கு கேட்பதால் தற்போதைக்கு விற்பனை செய்ய முடியவில்லை.தற்போது, கோவையில், 25 சதவீதத்துக்கும் குறைவாக மட்டுமே (6,000 எண்ணிக்கை) விற்பனையும், ஏற்றுமதியும் நடந்து வருகிறது. முதலீடு அதிகம் செய்யும் பெரிய நிறுவனங்களுடன் எங்களால் போட்டியிட முடியாது. இந்நிலையில், மத்திய அரசு மூலப்பொருட்கள் விலையேற்றத்தை கட்டுப்படுத்தினால் மட்டுமே, எங்களால் பழைய நிலைக்கு திரும்ப முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|