பதிவு செய்த நாள்
09 பிப்2021
10:20

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், விவசாயம், தொழில் துறை அடுத்து, சரக்கு போக்குவரத்து முக்கிய அங்கம் வகிக்கிறது. கொரோனா ஊரடங்கு சமயத்தில், பொது போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டாலும், அத்தியாவசிய பொருட்களுக்கான சரக்கு போக்குவரத்து தொடர்ந்து வருகிறது.
இப்படிப்பட்ட சூழலில், போக்குவரத்துக்கு முக்கிய மூலதனமான பெட்ரோல், டீசல் விலையும் இதுவரை இல்லாத வகையில் எகிறி வருகிறது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் உற்பத்தி, விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன.பெட்ரோல், டீசல் மீது, அரசின் வரி விதிப்பால் சுமையும் அதிகரிக்கிறது. இந்த வரிப்பளுவை குறைத்திட, பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி., வரம்புக்குள் கொண்டு வரவேண்டும். அதற்கு மேல் எந்தவொரு கூடுதல் வரியையும் விதிக்கக்கூடாது என்பது, வர்த்தகர்கள், லாரி உரிமையாளர்கள், பொது மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வருகிறது.
ஊரடங்கால், கடந்தாண்டு, மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல் விலையை உயர்த்தி வருகின்றன. தற்போது, பெட்ரோல் லிட்டருக்கு, 90 ரூபாயை எட்டவுள்ளது; டீசல், 82 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.மூலப்பொருட்கள் விலையேற்றத்தால் தவித்துவரும் தொழில் துறைக்கு, போக்குவரத்து செலவும் கூடி வருவது தலைவலியை ஏற்படுத்தி வருகிறது. பெட்ரோலிய பொருட்களின் விலையேற்றம் என்பது, தொழில் துறைக்கு மட்டுமின்றி, பொது மக்களையும் பாதிக்கும் அம்சமாக உள்ளது.
கேரளா, கர்நாடகா போன்ற அண்டைய மாநிலங்களுடன் காய்கறி போக்குவரத்து அதிகம் நடந்து வரும் நிலையில், உணவுப்பொருட்களின் விலை அதிகரிக்கவும் வழிவகுக்கிறது. பெட்ரோலிய பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்தால், இதனால் வீண் தலைவலியை அனைவரும் சந்திக்க நேரிடும்.
விலைவாசி குறையும்
கோயம்புத்துார் சரக்கு போக்குவரத்து சங்க செயலாளர் கமலக்கண்ணன் கூறியதாவது: உற்பத்தி பொருட்களை நாடு முழுவதும் கொண்டு செல்வதில், சரக்கு போக்குவரத்துக்கு முக்கிய இடம் உண்டு. பெட்ரோல், டீசல் உட்பட பெட்ரோலிய பொருட்கள் வரலாறு காணாத விலை உயர்வை சந்தித்து வருகின்றன.இதனால், லாரி வாடகை உயர்வு உட்பட காரணங்களால், கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக பல நுாறு கோடி ரூபாய் வருவாய் இழப்பை, சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் சந்தித்துள்ளன. டீசல் விலை உயர்வால், வேறு வழியின்றி சரக்கு போக்குவரத்து கட்டணத்தை, 20 சதவீதம் தற்போது உயர்த்தியுள்ளோம். காய்கறி உள்ளிட்டவற்றின் விலையும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும், நம் நாட்டில் பெட்ரோலிய பொருட்களின் விலை குறையவில்லை.
உள்நாட்டில் உற்பத்தியாகும் பெட்ரோலிய பொருட்களை உள்நாட்டுத் தேவை போக ஏற்றுமதி செய்ய வேண்டும். குறிப்பாக, பெட்ரோலிய பொருட்களை, ஜி.எஸ்.டி., வரம்புக்குள் கொண்டு வந்தால் விலை கட்டுக்குள் இருக்கும்.டீசல், பெட்ரோல் விலை குறைந்தால் விலைவாசியும் குறையும்; இந்திய பொருளாதாரமும் மேம்படும். மத்திய, மாநில அரசுகள் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|