பதிவு செய்த நாள்
09 பிப்2021
20:51

புதுடில்லி:வங்கிகள் புதிய புதிய சேவைகளை ஒருபுறம் அறிமுகம் செய்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம்சேவைகள் குறித்த வாடிக்கையாளர்களின் புகார்களும் மலையாக அதிகரித்து வருகின்றன.
இதை உறுதி செய்யும் விதமாக, ரிசர்வ் வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் பொதுத்துறை வங்கிகளை விட, தனியார் வங்கிகளில் புகார்கள் அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.வங்கிகளின் சேவை குறித்த வாடிக்கையாளர்களின் புகார்கள், 57 சதவீதம் அளவுக்கு அதிகரித்து இருப்பதாக, அண்மையில் வெளியிடப்பட்ட ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, ஜூன் 30ம் தேதி வரையிலான காலத்தில், வங்கிகளுடைய சேவைகள் குறித்து, வாடிக்கையாளர்கள் கொடுத்த புகார்கள் எண்ணிக்கை, மூன்று லட்சத்தை தாண்டி இருப்பதாக அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள, ‘குறை தீர்ப்பாளர் திட்ட ஆண்டு அறிக்கை’யில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நுகர்வோர் தரப்பில் தெரிவிக்கப்பட்ட புகார்களில், ஐந்தில் ஒரு புகார், ஏ.டி.எம்., அல்லது டெபிட் கார்டு சேவைகள்சம்பந்தமாக பெறப்பட்டுள்ளது.‘மொபைல் பேங்கிங்’ அல்லது, ‘எலக்ட்ரானிக் பேங்கிங்’ சம்பந்தமாக வந்திருக்கும் புகார்களின் எண்ணிக்கை, மொத்த புகார்களில், 13.38 சதவீதமாக உள்ளது.எப்.பி.சி., எனும், நியாயமான நடைமுறை கோட்பாட்டை கடைப்பிடிக்காதது குறித்த புகார்கள், மூன்றாவது இடத்தை பிடித்துள்ளன.
மேலும், கடமைகளை நிறைவேற்றத் தவறியது, அறிவிப்பு இல்லாமல் கட்டணம் வசூலித்தல், விதிமுறைகளை சரியாக பின்பற்றாதது, கிரெடிட் கார்டுகள் ஆகியவை தொடர்பான புகார்களும், இதற்கு முந்தைய ஆண்டை விட அதிகரித்துள்ளன.மேலும், நேரடி விற்பனை முகவர்கள் மற்றும் வசூல் முகவர்கள் தொடர்பான புகார்களின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளன.
புகார்களை தீர்க்கும் விகிதம், 2018 – 19ல், 94.03 சதவீதமாக இருந்த நிலையில், மதிப்பீட்டு ஆண்டில் சற்று குறைந்து, 92.36 சதவீதமாக உள்ளது.புகார்கள் அதிகரித்து வரும் நிலையில், அதே எண்ணிக்கையிலான ஊழியர்களே கையாள வேண்டிய நிலை உள்ளது, இதற்கு காரணமாக அமைந்துள்ளது.வங்கி சாரா நிதி நிறுவனங்கள் குறித்த புகார்கள், 386 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளன. மதிப்பீட்டு காலத்தில், 19 ஆயிரத்து, 432 புகார்கள் பெறப்பட்டு உள்ளன. குறைகளை தீர்க்கும் விகிதம், 95.34 சதவீதமாக உள்ளது.
டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை குறித்து, 2,481 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில், 43.89 சதவீத புகார்கள், ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை பின்பற்றாதது குறித்த புகார்களாகும். பொதுத்துறை வங்கிகள் மீதான புகார்களின் எண்ணிக்கை, 61.90 சதவிதத்திலிருந்து, 59.65 சதவீதமாக குறைந்துள்ளது. ஆனால், அதேசமயம் தனியார் வங்கிகள் மீதான புகார்கள் அதிகரித்துள்ளன.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாடு; ஒரு குறை தீர்ப்பாளர்
தற்போது வங்கி, வங்கி சாரா நிதி நிறுவனங்கள், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் என மூன்று குறை தீர்ப்பாளர் திட்டங்கள் நடைமுறையில் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த 5ம் தேதியன்று வெளியிடப்பட்ட ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு அறிக்கையில், இந்த மூன்றையும் ஒன்றிணைத்து, ‘ஒரு நாடு; ஒரு குறை தீர்ப்பாளர்’ என, மையப்படுத்தப்பட்ட சேவையை அறிமுகப்படுத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|