பதிவு செய்த நாள்
28 பிப்2021
20:38

‘நெட்பிளிக்ஸ், யுடியூப், அமேசான் பிரைம்’ போன்ற ஓ.டி.டி., தளங்களைக் கட்டுப்படுத்தும் வரையறைகளை மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் இந்த வேளையில், நாளிதழ்கள், செய்திகள், உள்ளடக்கம் தொடர்பாக எழுந்திருக்கும் ஒரு கோரிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.
நீங்கள், ‘கூகுள்’ தேடுபொறி வழியாக செய்திகளை வாசிப்பவரா? ‘வாட்ஸ் ஆப், பேஸ்புக்’ போன்ற வலைதளங்கள் வழியாகவும் செய்திகளைப் பெறுகிறீர்களா? அப்படியானால், நீங்கள் தான் கூகுளுக்கும், பேஸ்புக்குக்கும் படியளக்கும் பெருமாள். உங்களுடைய விருப்பங்கள், தேர்வுகள் ஆகியவற்றின் அடிப்படையில் தான், செய்திகள் உங்களுக்கு வழங்கப்படும். இதன் ஊடாக வெளியிடப்படும் விளம்பரங்களின் மூலமே, இப்பெரிய வலைதள நிறுவனங்கள் பணம் சம்பாதிக்கின்றன.
ஆனால், ஒரு விஷயம் தெரியுமா? உங்கள் செய்தி தேவையை பூர்த்தி செய்வது கூகுளோ, பேஸ்புக்கோ அல்ல. உலகெங்கும் கொட்டிக் கிடக்கும் ஆங்கில மற்றும் பிராந்திய மொழி பத்திரிகைகள் தான், உங்கள் மனம் கவரும் செய்திகளைக் கொடுத்துக் கொண்டு இருக்கின்றன.
காப்புரிமை மீறல்
கூகுள் ஒரு தேடுபொறி; இணையத்தில் கொட்டிக் கிடக்கும் செய்திகளை துழாவி எடுத்து வந்து, வரிசைப்படுத்தி, உங்களுக்குக் காண்பிக்கும் ஒரு தொழில்நுட்ப தொகுப்பாளன். கூகுளோ, பேஸ்புக்கோ தாமே செய்திகளை உற்பத்தி செய்வதில்லை.ஆக, கடைத் தேங்காயை எடுத்து, வழிப் பிள்ளையாருக்கு உடைத்துக் கொண்டு இருக்கிறது, கூகுளும், பேஸ்புக்கும், இதர சமூக ஊடகங்களும்.
இந்நிறுவனங்களுக்கு செய்திகளால் கிடைக்கும் லாபம் மிக மிக அதிகம். ஆனால், செய்திகளின் ஊற்றுக்கண்ணாக இருக்கும் நாளிதழ்களுக்கும், அதற்காக ரத்தத்தை வியர்வையாக சிந்திக்கொண்டு இருக்கும் பத்திரிகையாளர்களுக்கும் எந்தப் பயனும் இல்லை. இதில்,இன்னொரு பிரச்னையும் இருக்கிறது.அது காப்புரிமை.
நம் இதழில் வரும் செய்திகளை, நாம் சிரத்தையெடுத்து செம்மைப்படுத்தி, அழகுற அச்சிடுகிறோம். செய்தி ஒன்றாக இருந்தாலும், அதற்கான மேம்படுத்தல்கள் நம்முடையது. இத்தகைய உள்ளடக்கத்துக்கு, நமக்குத் தான் காப்புரிமை உள்ளது. இதை கூகுள் எடுத்து, மற்றவர்களுக்கு விளம்புகிறது. அது காப்புரிமை மீறல்.இந்த இடத்தில் தான், அச்சு ஊடக நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்து, கூகுள், பேஸ்புக் போன்ற நிறுவனங்கள், உள்ளடக்கத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதன் மூலம் கிடைக்கும் லாபத்தில் பங்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதற்கு, ஆஸ்திரேலிய அரசு ஒரு சட்டத் திருத்தமே கொண்டு வந்துள்ளது. அவர்கள் நாட்டு ஊடகங்களில் வெளிவரும் செய்திகளை, கூகுளும், பேஸ்புக்கும் பயன்படுத்தும்போது, அதற்கு உரிய லாபப் பங்கை, பதிப்பாளர்களோடு பகிர்ந்துகொள்ள வலியுறுத்துகிறது, இந்தச் சட்டம்.
வேறொரு சிக்கல்
இதே போன்ற நிலை, இந்தியாவிலும் வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இருக்கிறார், இந்திய நாளிதழ்கள் சங்கத் தலைவர், எல்.ஆதிமூலம். இங்கே வேறொரு சிக்கலும் இருக்கிறது. கூகுள் செய்திகளைப் பயன்படுத்தி கொள்ளும் போது, ஒரு தொகையை பதிப்பாளர்களுக்கு வழங்குகிறது. ஆனால், அது எத்தனை செய்திகளைப் பயன்படுத்திக் கொண்டதற்கான தொகை, எப்படி அந்தத் தொகை கணக்கிடப் பட்டது என்பதெல்லாம் மூடுமந்திரமாகவே உள்ளது.அதனால், கூகுள் இன்னும் வெளிப் படையாக நடந்துகொள்ள வேண்டும் என்பதோடு, செய்திகள் மூலம் வரும் வருவாயில், 85 சதவீதத்தை, பதிப்பாளர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார் எல்.ஆதிமூலம்.
உண்மையில், இந்த விவகாரத்தை முற்றிலும் வேறு பார்வையில் பார்க்க வேண்டும். ஒவ்வொரு நாளிதழ் நிறுவனமும் உற்பத்தி செய்யும் கச்சா பொருளான செய்திகள் என்பது இல்லை என்றால், கூகுள் மற்றும் பேஸ்புக்குக்கான தேவையே இல்லை. ஆனால், அந்த உற்பத்தியாளருக்கு எந்த மதிப்பும், மரியாதையும் இல்லை என்றால், அதைச் சுரண்டல் என்ற சொல்லைத் தவிர, வேறு என்ன சொல்லால் குறிப்பிட முடியும்?
ஆஸ்திரேலிய அரசு செய்தது போல், இந்திய அரசு, செய்திகளையும், கட்டுரைகளையும், ‘டிஜிட்டல்’ நிறுவனங்கள் எடுத்துப் பயன்படுத்தும்போது, அதற்கு உரிய லாபப் பங்கை பதிப்பாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று சட்டத் திருத்தம் கொண்டு வருவதே சரியாக இருக்கும். ஓ.டி.டி., தளங்களோடு, செய்தித் தளங்கள் சந்திக்கும் பிரச்னையையும் மத்திய அரசு கவனிக்க வேண்டும்.
ஆர்.வெங்கடேஷ்
pattamvenkatesh@gmail.com
98410 53881
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|