பதிவு செய்த நாள்
28 பிப்2021
20:43

முதல் முறை முதலீட்டாளர்கள் பங்கு முதலீட்டில் ஈடுபடும் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றி ஒரு பார்வை.
பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்தை மீறி, புதிய முதலீட்டாளர்களை ஈர்த்து வருகிறது. முதலீடு தொடர்பாக ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாக, சம்பாதிக்கத் துவங்கும் இளைஞர்களில் பலர் பங்குச்சந்தை நோக்கி வருகின்றனர்.
இணையம் மற்றும் செயலி வழியே முதலீடு செய்யும் வாய்ப்பு உள்ளிட்ட அம்சங்களும், இளைஞர்களின் பங்கு முதலீடு ஆர்வத்தை ஊக்குவிப்பதாக அமைகின்றன. நீண்ட கால நோக்கில் செல்வ வளத்தை உருவாக்கி கொள்வதில் சமபங்கு முதலீடு முக்கிய பங்கு வகித்தாலும், முதலீட்டாளர்கள் அடிப்படையான அம்சங்களை மனதில் கொள்ள வேண்டும்.
அதிலும் குறிப்பாக, சந்தையின் ஏற்றம் அல்லது சரிவால் முதலீடு முடிவு பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும். அந்த வகையில், முதல் முறை முதலீட்டாளர்கள் பங்கு முதலீட்டில் மனதில் கொள்ள வேண்டிய அம்சங்களை பார்க்கலாம்.
முதலீடு அணுகுமுறை
முதலீடு செய்வதற்கான பங்குகளை தேர்வு செய்வதில் முறையான ஆய்வு தேவை. பங்கு நிறுவனத்தின் செயல்பாடுகள் தொடர்பான அடிப்படை அம்சங்களை பரிசீலிக்க வேண்டும் என்பதோடு, முக்கியமாக நண்பர்கள், உறவினர்கள் அளிக்கும் பரிந்துரைகள் அடிப்படையில் பங்குகளை வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
பலரும் வழக்கமாக செய்யும் தவறு இது என வல்லுனர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நண்பர்கள் அளிக்கும் குறிப்புகளை வைத்து பங்குகளை வாங்கி பலர் நஷ்டம் அடைந்துள்ளனர்.அதே போல, முதலீட்டாளர் தனக்கு எல்லாம் தெரியும் எனும் அணுகுமுறையையும் கொண்டிருக்க கூடாது. பங்குகள் தொடர்பான செய்திகள், கட்டுரைகள், வலைப்பதிவுகள் ஆகியவற்றை படிப்பதால், அதிக தகவல்கள் கையில் இருக்கும் நம்பிக்கையில் மட்டும் பங்கு முதலீடு தொடர்பான முடிவுகளை மேற்கொள்ளக்கூடாது. தேவை எனில் தொழில்முறை ஆலோசனையை நாடவும் தயங்கக் கூடாது.
முதலீடு செய்யும் தொகையிலும் கவனமாக இருக்க வேண்டும். கையில் உள்ள தொகை அனைத்தையும் மொத்தமாக முதலீடு செய்யாமல், படிப்படியாக முதலீடு செய்ய வேண்டும். இது, சரியான வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள உதவும்.
முதலீடு காலம்
சரியான பங்குகளை தேர்வு செய்வது முக்கியம் என்பது போல, முதலீட்டிற்கான கால அளவும் முக்கியம். முதலீட்டாளர்கள் தங்கள் நிதி இலக்குகளுக்கு ஏற்ப, முதலீட்டிற்கான கால அளவையும் தீர்மானித்திருக்க வேண்டும். சந்தையின் போக்கால், இடையே பதற்றம் அடைந்து முதலீட்டில் இருந்து வெளியேறுவது போன்ற தவறுகளை செய்யாமல் இருக்க இது உதவும்.
பங்கு முதலீடு என்பது நீண்ட கால நோக்கிலானது என்பதை உணர வேண்டும். ஏற்ற இறக்கம் குறுகிய கால பாதிப்பாக அமைந்தாலும், நீண்ட கால நோக்கில் நல்ல பலன் அளிப்பதை மனதில் கொள்ள வேண்டும்.பங்கு முதலீடு தொடர்பான அணுகுமுறை சீராக இருக்க வேண்டும். பங்குகளை எப்போது வாங்குவது, எப்போது வெளியேறுவது போன்ற விஷயங்களை அறிந்திருக்க வேண்டும். முதலீட்டாளர்கள் பல்வேறு அணுகுமுறையை பின்பற்றுவது அல்லது இடையே தங்கள் அணுகுமுறையை மாற்றிக்கொள்வது பாதகமாக அமையலாம்.
பங்குச்சந்தை இடர் கொண்டது என்றாலும், அதற்கேற்ப பலன் அளிக்க கூடியது. இதற்கு, முதலீடு உத்தி சீரானதாக இருப்பது முக்கியம். சந்தையை கணித்து செயல்படுவதை தவிர்த்து, நிதி இலக்குகளை வழிகாட்டியாக கொள்ள வேண்டும்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|