பதிவு செய்த நாள்
27 மார்2021
20:06

வாஷிங்டன்:வெளிநாட்டு மின்னணு நிறுவனங்களுக்கு மத்திய அரசு விதித்துள்ள ‘டிஜிட்டல்’ வரிக்கு பதிலடியாக, இந்திய பொருட்கள் இறக்குமதிக்கு கூடுதல் வரி விதிக்க, அமெரிக்கா பரிசீலித்து வருகிறது.
வெளிநாடுகளைச் சேர்ந்த மின்னணு நிறுவனங்கள், வலைதளம் வாயிலாக இந்தியாவில் விற்பனை செய்யும் பொருட்கள், அளிக்கும் சேவைகள் ஆகியவற்றுக்கு, 2 சதவீத டிஜிட்டல் வரி விதிக்கப்படுகிறது.கடந்த ஆண்டு, ஏப்ரலில் இந்த வரி விதிப்பு அமலுக்கு வந்தது. இதே போல, இத்தாலி, துருக்கி, பிரிட்டன், ஸ்பெயின், ஆஸ்திரியா ஆகிய நாடுகளும், டிஜிட்டல் வரியை அமல்படுத்தியுள்ளன.
அமெரிக்க அரசு, இந்த வரி விதிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துஉள்ளது; இது, அமெரிக்க நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கை என, குற்றஞ்சாட்டியுள்ளது.இதை மறுத்துள்ள இந்தியா, உள்நாடு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் இடையே, சந்தையில் சரிசமமான போட்டியை பராமரிக்கவே டிஜிட்டல் வரி விதிக்கப்பட்டதாக தெரிவித்தது. கடந்த ஆண்டு, இந்த விவகாரம் தொடர்பாக, இந்தியா – அமெரிக்கா இடையே, இரு கட்ட பேச்சு நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, சில தினங்களுக்கு முன், மத்திய நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன், ‘‘வெளிநாட்டு மின்னணு நிறுவனங்கள், இந்தியாவில் நிறுவனத்தை துவக்கி அவற்றின் மூலம் அளிக்கும் சேவைகளுக்கு டிஜிட்டல் வரி விலக்கு அளிக்கப்படும். ஆனால், வெளிநாட்டில் உள்ள நிறுவனங்களின் விற்பனைக்கு வரி உண்டு’’ என, தெரிவித்தார்.
இந்நிலையில், ‘டிஜிட்டல் வரி விதிக்கும் நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு, கூடுதல் வரி விதிக்க வேண்டும்’ என, அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அமைப்பு, அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. இந்த திட்டம் அமலுக்கு வந்தால், இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும், கடல் உணவுகள், மூங்கில் பொருட்கள், நவரத்தினக் கற்கள், மரச் சாமான்கள், ரப்பர் கார்க்குகள், சிகரெட் காகிதங்கள் ஆகியவற்றுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும். இதனால், இப்பொருட்களின் ஏற்றுமதி பாதிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மதிப்புக்கு நிகராக
அமெரிக்க மின்னணு நிறுவனங்கள் மூலம் டிஜிட்டல் வரியாக, மத்திய அரசுக்கு ஓராண்டிற்கு, 412 கோடி ரூபாய் கிடைக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.இத்தொகைக்கு நிகராக இந்திய பொருட்களுக்கு, அமெரிக்கா கூடுதல் வரி விதிக்க திட்டமிட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|