பதிவு செய்த நாள்
06 ஜூன்2021
20:04

‘மியூச்சுவல் பண்டு’களில் வேகமாக பிரபலமாகி வரும் சர்வதேச நிதிகளில் முதலீடு செய்வது பற்றி தீர்மானிக்கும் முன் கவனிக்க வேண்டிய அம்சங்கள்.
மியூச்சுவல் பண்ட் முதலீட்டில் ஆர்வம் கொண்டவர்களால், அண்மைக்காலமாக சர்வதேச நிதிகள் அதிக அளவில் அறிமுகமாவதை கவனித்திருக்கலாம். கடந்த நான்கு மாதங்களில் மட்டும், புதிதாக எட்டு சர்வதேச நிதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவற்றில், மே மாதம் மட்டும் நான்கு நிதிகள் அறிமுகம் செய்யப்பட்டன. மேலும் இரண்டு புதிய நிதிகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. கடந்த சில ஆண்டுகளாகவே இந்த பிரிவில் அதிக வளர்ச்சி காணப்படும் நிலையில், தற்போது இவை இன்னும் அதிகமாக கவனத்தை ஈர்க்கின்றன.
வெளிநாட்டு முதலீடு
சர்வதேச நிதிகள், மியூச்சுவல் பண்டுகளில் ஒரு வகையாக அமைகின்றன. மியூச்சுவல் பண்டுகள் அவற்றின் நோக்கத்திற்கு ஏற்ப பல்வேறு நிறுவன பங்குகள், பத்திரங்கள் போன்றவற்றில் முதலீடு செய்வது போல, இந்த வகை நிதிகள் பிரதானமாக வெளிநாட்டு நிறுவன பங்குகள் மற்றும் பத்திரங்களில் முதலீடு செய்கின்றன. இதன் மூலம், முதலீட்டாளர்கள் சர்வதேச வளர்ச்சியின் பலனை பெறலாம் என்பதோடு, முதலீடு பரவலாக்கத்திற்கும் உதவுவதாக கருதப்படுகின்றன. இவை உள்ளூர் பங்குகளிலும் முதலீடு செய்கின்றன.இந்த நிதிகளில் சில, ‘பண்ட் ஆப் பண்ட்’ எனப்படும், மற்ற மியூச்சுவல் பண்டு திட்டங்களில் முதலீடு செய்பவையாகவும் இருக்கின்றன.
2004ம் ஆண்டு முதல், இந்த வகை நிதிகள் இந்தியாவில் செயல்பட்டு வருகின்றன என்றாலும், அண்மைக்காலமாக தான் இந்த பிரிவில் அதிக வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. கொரோனா சூழலில், சர்வதேச பங்குச்சந்தையின் உறுதியான போக்கும் இதற்கான முக்கிய காரணமாக அமைகிறது. சர்வதேச அளவிலான நிறுவனங்களில் முதலீடு செய்யும் வாய்ப்பை அளிப்பதால், இந்த வகை நிதிகள் ஏற்றதாக கருதப்படுகின்றன. இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்படும் சரிவிற்கு எதிரான பாதுகாப்பையும் இவை அளிப்பதாக கருதப்படுகின்றன.\
கவனம் தேவை
பெரும்பாலான சர்வதேச நிதிகள், அமெரிக்க நிறுவனங்களில், குறிப்பாக தொழில்நுட்ப நிறுவனங்களில் அதிகம் முதலீடு செய்கின்றன. எனினும், இந்த வகை நிதிகளை தேர்வு செய்யும் போது அதிக கவனம் தேவை என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். நிதிகளின் நோக்கம், உள்ளடக்கம், அவற்றின் செயல்பாடு, வளர்ச்சி வாய்ப்பு மற்றும் இடர்கள் உள்ளிட்டவற்றை பரிசீலிக்க வேண்டும் என்கின்றனர். குறிப்பிட்ட வகை பங்குகளில் மட்டும் அல்லாமல், பரவலாக முதலீடு செய்யும் நிதிகள் ஏற்றவை என்றும் வல்லுனர்கள் கருதுகின்றனர். அமெரிக்க சந்தை மட்டும் அல்லாமல், சீனா, பிரேசில், ரஷ்யா, கொரியா உள்ளிட்ட சந்தைகளின் பங்களிப்பையும் நிதிகள் கொண்டிருக்க வேண்டும்.
எனினும், புதிய முதலீட்டாளர்களை விட, மியூச்சுவல் பண்டு முதலீடுகள் பற்றி நன்கு அறிந்தவர்களுக்கே இந்த வகை நிதி ஏற்றது என்றும் வல்லுனர்கள் கருதுகின்றனர். இந்த நிதிகளில், இரட்டை இடர்களை கண்காணிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். ஏற்கனவே மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்துள்ளவர்கள், ஒரு பகுதி முதலீடாக இவற்றை நாடலாம். இந்த வகை நிதிகளில் முதலீடு செய்பவர்கள், சர்வதேச சந்தை செயல்படும் விதத்தை புரிந்துகொள்ளக் கூடியவர்களாக இருக்க வேண்டும். மேலும் முதலீடு செய்யும் முன், முறையான ஆலோசனை பெறுவதும் அவசியம்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|