பதிவு செய்த நாள்
04 ஜூலை2021
18:45

முதலீட்டாளர்கள் பணவீக்கத்தின் தாக்கத்தை குறைக்கும் வழிகளை அறிந்திருப்பது மிகவும் அவசியம்.
சர்வதேச அளவில் பணவீக்கத்தின் தாக்கம் உணரப்படும் நிலையில், இந்தியாவிலும் அதன் தாக்கம் உண்டாகும் வாய்ப்புள்ளது. பண்டகங்கள், கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, உற்பத்தி செலவு உயர்ந்து வருகிறது. இது உற்பத்தி நிறுவனங்களை பாதிப்பதோடு, தொடர்புடைய துறைகளையும் பாதிக்கலாம். பணவீக்கத்தை கட்டுப்படுத்த மத்திய வங்கிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்தியாவில் ரிசர்வ் வங்கியும் பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்திருப்பதில் தீவிர கவனம் செலுத்து வருகிறது.
செலவு பழக்கம்
பணவீக்கத்தை கட்டுப்படுத்த அரசு அமைப்புகள் நடவடிக்கை எடுத்து வருவது போலவே, சராசரி முதலீட்டாளர்களும் தங்கள் முதலீடுகளின் பலன், பணவீக்கத்தின் தாக்கத்திற்கு உள்ளாவதை குறைக்கும் வகையில் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். முதலில் பணவீக்கத்தால் செலவு அதிகரிக்கிறதா என்பதை கணக்கிட்டு, அதற்கேற்ப பட்ஜெட்டில் மாற்றம் தேவையா என பரிசீலிக்க வேண்டும்.
வாய்ப்புள்ள இடங்களில் செலவுகளை குறைப்பது, சேமிப்பு பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும். பொது முடக்க கால அனுபவம், அத்தியாவசிய செலவுகள் எவை என்பதை உணர்த்தியுள்ளதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
செலவுகளை பரிசீலித்த பின், கைவசம் உள்ள முதலீடுகளை ஆய்வு செய்ய வேண்டும். முதலீடு தொகுப்பின் தன்மையில் மாற்றம் தேவையா என தீர்மானிக்கவும் இது உதவும். முதலீட்டு உத்தியை பொருத்தவரை, பெரிய அளவில் மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது என்றே வல்லுனர்கள் கருதுகின்றனர்.
தேவைக்கேற்ப சிறிய அளவில் திருத்தங்களை மேற்கொண்டாலே போதுமானதாக இருக்கும். பொதுவாக, பணவீக்கத்தின் தாக்கம், சமபங்கு முதலீடு மற்றும் கடன்சார் முதலீடுகள் மீது மாறுபட்ட வகையில் அமைந்திருக்கும் என கருதப்படுகிறது. பணவீக்க உயர்வு மிக அதிகமாக இல்லாமல் மிதமாக இருக்கும் போது சமபங்கு முதலீடுகள் நல்ல பலனை அளித்திருக்கின்றன.
மேலும் நீண்ட கால நோக்கில் பணவீக்கத்தை மிஞ்சும் பலனை பங்கு முதலீடு அளிக்க வல்லவை என கருதப்படுகிறது.தற்போது பங்குச்சந்தை உச்சத்தில்இருக்கிறது. எனினும், சில்லரை முதலீட்டாளர் மியூச்சுவல் பண்ட் முதலீட்டை நாடலாம். எஸ்.ஐ.பி., எனப்படும் சீரான சேமிப்பு வழி ஏற்றதாக இருக்கும். நீண்ட கால நோக்கில் முதலீடு செய்ய விரும்புகிறவர்கள், சமபங்குகள் முதலீடு செய்ய சரியான நேரத்தில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
கடன்சார் முதலீடு
பொதுவாக தங்கம், பணவீக்கத்திற்கு எதிராக பாதுகாப்பு அளிக்கும் முதலீடாக கருதப்படுகிறது. முதலீட்டு தொகுப்பில் 10 சதவீதம் தங்கத்தில் இருப்பது ஏற்றது. தங்கத்தின் விலை போக்கையும் கருத்தில் கொண்டு செயல்படலாம்.பணவீக்கம் உயர்வது, பத்திரங்கள் அளிக்கும் பலன் மீது தாக்கம் செலுத்தும். பணவீக்கம் உயரும் போது, வட்டி விகிதமும் உயர்ந்து, பத்திரங்கள் பலன் மற்றும் விலையில் தாக்கம் செலுத்தும்.
கடன்சார் முதலீடுகளை நாடுபவர்கள், நீண்ட கால முதிர்வை விட, குறுகிய கால முதிர்வு கொண்ட முதலீடுகளை நாடுவது ஏற்றதாக இருக்கும் என கருதப்படுகிறது. தற்போதைய சூழலில், வைப்பு நிதியை விட சிறுசேமிப்பு திட்ட முதலீடுகள் அதிக பலன் அளிக்கும் நிலை உள்ளது. எனவே, நிதி இலக்குகளுக்கு ஏற்ப சிறு சேமிப்பு முதலீட்டை தேர்வு செய்வது பொருத்தமாக இருக்கும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|