பதிவு செய்த நாள்
29 ஜூலை2021
21:12

புதுடில்லி:இந்தியாவில், ஏப்., – ஜூன் காலாண்டில், தங்கத்திற்கான தேவை, 76.10 ‘டன்’னாக உயர்ந்துள்ளதாக, உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.
நடப்பு 2021 – 22ம் நிதியாண்டின் ஏப்., –ஜூன் காலாண்டில், இந்தியாவில், தங்கத்திற்கான தேவை 19.2 சதவீதம் உயர்ந்து, 76.10 டன்னாக அதிகரித்துள்ளது.இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், 63.80 டன்னாக இருந்தது. இதே காலத்தில், தங்கத்தின் தேவை, மதிப்பின் அடிப்படையில் 26 ஆயிரத்து 600 கோடியில் இருந்து, 32 ஆயிரத்து 810 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
ஆபரண தங்கத்தின் தேவை 25 சதவீதம் உயர்ந்து, 44 டன்னில் இருந்து 55.10 டன்னாக அதிகரித்துள்ளது. இது, மதிப்பின் அடிப்படையில் 18 ஆயிரத்து 350 கோடியில் இருந்து, 23 ஆயிரத்து 750 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. நடப்பாண்டு ஏப்., –ஜூன் வரை, சர்வதேச அளவில் ஆபரண தங்கத்திற்கான தேவை 60 சதவீதம் உயர்ந்து, 244 டன்னில் இருந்து, 391 டன்னாக அதிகரித்துள்ளது.
இதே காலத்தில், மொத்தம் தங்கத்திற்கான தேவை, 955 டன்னாக குறைந்துள்ளது; இது, 2020ல் இதே காலாண்டில், 960 டன்னாக இருந்தது.தங்கக் கட்டிகள் மற்றும் நாணயங்களுக்கான தேவை 157 டன்னில் இருந்து, 244 டன்னாக உயர்ந்துள்ளது. இப்பிரிவின் தேவை, சில்லரை முதலீட்டாளர்களின் ஆதரவால் தொடர்ந்து நான்கு காலாண்டுகளாக அதிகரித்து வருகிறது. அதே சமயம், இதே காலத்தில், தங்க இ.டி.எப்., போன்ற முதலீட்டு திட்டங்களுக்கான தங்கத்தின் தேவை, 90 சதவீதம் சரிவடைந்து, 428 டன்னில் இருந்து 41 டன்னாக குறைந்துள்ளது.
மதிப்பீட்டு காலாண்டில், தாய்லாந்து, ஹங்கேரி, பிரேசில் உள்ளிட்ட ஒன்பது நாடுகளின் மத்திய வங்கிகள், 207 டன் தங்கத்தை இறக்குமதி செய்துள்ளன.எனவே, கடந்த ஆண்டை விட இந்தாண்டு, தங்கத்திற்கான தேவை, 1,600 –1,800 டன் என்ற அளவில் அதிகமாக இருக்கும் என, உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முதலீடு குறைந்தது
உலகளவில் தங்கத்தில் முதலீடு செய்யும் இ.டி.எப்., திட்டங்களில், முதலீட்டாளர்களுக்கு ஆர்வம் குறைந்துள்ளது. முதலீட்டு நிறுவனங்கள், உலக நாடுகளின் பொருளாதார மீட்சிக்காக காத்திருக்கின்றன. பொருளாதார நடவடிக்கைகள் சூடு பிடித்தால், தங்க இ.டி.எப்., திட்டங்களில் முதலீடு அதிகரிக்கும்.
– பி.ஆர்.சோமசுந்தரம்,
நிர்வாக இயக்குனர்,
உலக தங்க கவுன்சில் இந்தியப் பிரிவு.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|