பதிவு செய்த நாள்
03 செப்2021
19:39

புதுடில்லி:நாட்டின், சேவைகள் துறையின் வளர்ச்சி, கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, ஆகஸ்ட் மாதத்தில் அதிகரித்துள்ளது என, ‘ஐ.எச்.எஸ்., மார்க்கிட் இந்தியா’ நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஐ.எச்.எஸ்., மார்க்கிட் நிறுவனம், தகவல் தொழில்நுட்பம், வியாபாரம், ஓட்டல், சுற்றுலா, போக்குவரத்து. நிதி, காப்பீடு, ரியல் எஸ்டேட், வர்த்தகம், கட்டுமானம் உள்ளிட்ட சேவை துறை நிறுவனங்களிடம், கடந்த ஆகஸ்ட் மாத நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த ஆகஸ்ட் மாதத்தில், நாட்டின் சேவைகள் துறையின் உற்பத்தி வளர்ச்சி விகிதம் 56.7 புள்ளிகளாக அதிகரித்துள்ளது.இது, கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவாகும். இதற்கு புதிய வேலைகள் மற்றும் தேவை அதிகரிப்பு, நிறுவனங்கள் மீண்டும் செயல்படத் துவங்கியது, நுகர்வோர் வருகை மற்றும் நம்பிக்கை ஆகியவை காரணங்களாக அமைந்துள்ளன.
கடந்த ஜூலை மாதத்தில், வளர்ச்சி விகிதம் 45.4 புள்ளிகளாக இருந்த நிலையில், ஆகஸ்டில் 56.7 புள்ளிகளாக அதிகரித்து உள்ளது.இக்குறியீடு, 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால், அது வளர்ச்சியை குறிக்கும். 50 புள்ளிகளுக்கு கீழே இருந்தால், சரிவை குறிக்கும். முந்தைய மூன்று மாதங்களில் குறைவாக இருந்த புதிய ‘ஆர்டர்’கள் வரத்து, ஆகஸ்டில் அதிகரித்து உள்ளது.
இதன் காரணமாக, கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, வேகமான வளர்ச்சி காணப்பட்டுள்ளது.இருப்பினும், நிறுவனங்கள் புதிய ஏற்றுமதி ஆர்டரில் சரிவை கண்டு உள்ளன. இந்த சரிவுக்கு கொரோனாவும், அதனால் அறிவிக்கப்பட்ட தடைகளும் காரணமாக அமைந்துள்ளது.
தடைகள் தொடர்ந்து தளர்த்தப்படும் நிலையில், மேற்கொண்டு புதிய அலைகள் ஏற்படாவிடில், சீரான வளர்ச்சியை இத்துறை காணும் என எதிர்பார்க்கலாம். இவ்வாறு ஆய்வறிக்கை யில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பல நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட்டதன் வாயிலாகவும், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை மேம்படுத்தியதன் வாயிலாகவும், இந்திய சேவைகள் துறை, கடந்த ஆகஸ்டில் மீட்சியை கண்டுள்ளது.
பாலியானா, டி லிமா,
பொருளாதார இணை இயக்குனர்,
ஐ.எச்.எஸ்., மார்க்கிட்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|