பதிவு செய்த நாள்
26 செப்2021
19:08

சந்தை தொடர்ந்து ஏறுமுகத்தை சந்தித்து வரும் நிலையில், முதலீட்டாளர்கள் உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி ஒரு அலசல்.
பங்குச் சந்தை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கிறது. கடந்த வாரம் மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் முதல் முறையாக 60 ஆயிரம் புள்ளிகளை கடந்தது. சந்தையின் எழுச்சியால் முதலீட்டாளர்கள் உற்சாகம் அடைந்திருந்தாலும், இந்த எழுச்சிக்கு அடிப்படையாக அமையும் காரணங்கள் எவை எனும் கேள்வியும் முக்கியத்துவம் பெறுகிறது.
சந்தை புதிய உச்சத்தை தொடும் எனும் கணிப்புகளுக்கு மத்தியில், முதலீட்டாளர்கள் பின்பற்ற வேண்டிய உத்தி பற்றிய கேள்வியும் எழுகிறது. நல்ல லாபம் அளித்த பங்குகளை வைத்திருப்பவர்கள் அவற்றை விற்று விட்டு வெளியேறுவது சரியாக இருக்குமா அல்லது முதலீட்டை தொடர்வது மேலும் பலன் அளிக்குமா எனும் குழப்பம் பலருக்கு இருக்கலாம்.
இலக்குகளில் கவனம்
அதே நேரத்தில் இன்னும் பலருக்கு சந்தை இந்த அளவு உச்சத்தில் இருக்கும் நிலையில், பங்குகளில் முதலீடு செய்வது ஏற்றதா எனும் சந்தேகமும் உண்டாகலாம். எனினும், பங்குகளை வைத்திருப்பதா அல்லது வெளியேறுவதா எனும் கேள்விக்கான பல்வேறு அம்சங்கள் அடிப்படையில் அமையும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
உயர்வு கண்டுள்ள பங்குகளை முழுதும் அல்லது பகுதியளவு விற்று லாபம் பார்ப்பது சரியானது என சொல்லப்பட்டாலும், முதலீட்டாளர்கள் இது தொடர்பாக முடிவெடுக்கும் முன், தங்கள் நிதி இலக்குகளையும் பரிசீலிப்பது அவசியமாகும். முதலீட்டிற்கான நிதி இலக்கின் அடிப்படையில், அதை தொடர்வது பற்றி தீர்மானிக்கலாம். உதாரணத்திற்கு ஒருவர் சொந்த வீடு வாங்குவதற்கான இலக்கை மனதில் கொண்டு பங்குகளில் முதலீடு செய்திருந்து, பலனும் அதற்கேற்ப வளர்ந்திருந்தால், தற்போது முதலீட்டை விலக்கிக் கொள்வது ஏற்றதாக இருக்கும்.
பங்குகளில் இருந்து விலக்கிக் கொள்ளும் தொகையை, வீட்டுக் கடனுக்கான முன்பணமாக பயன்படுத்திக் கொள்ளலாம். வாகனம் வாங்குவது உள்ளிட்ட இலக்குகளுக்கும் இது பொருந்தும். முதலீட்டின் நோக்கமே இலக்கை அடைவது தான் என்பதால், அதற்கு உதவும் நிலை இருந்தால் பயன்படுத்திக் கொள்வதில் தவறில்லை.
நீண்ட கால நோக்கம்
எனினும், பங்கு முதலீடு நல்ல லாபம் அளிக்கும் நிலையில் இருப்பதால், விருப்பம் அல்லது நுகர்வு தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்காக முதலீட்டை விலக்கிக் கொள்வது சரியான உத்தியாக அமையாது.அதே போல ஓய்வு காலம் போன்ற நீண்ட கால இலக்கிற்காக முதலீடு செய்திருந்தால், சந்தை நிலையின் அடிப்படையில் இப்போது விலக்கிக் கொள்வது பொருத்தமானதாக இருக்காது.
சந்தையில் சரிவு உண்டாக வாய்ப்பிருக்கிறது என்றாலும், நீண்ட கால அடிப்படையில் பார்க்கும் போது நிச்சயம் நல்ல பலன் இருக்கும்.அதிலும் குறிப்பாக செல்வ வளத்தை உருவாக்கிக் கொள்ள, நீண்ட கால முதலீடே சிறந்த வழி என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
சந்தையின் ஏற்ற இறக்கம் பற்றி கவலைப்படாமல், நல்ல பங்குகளில் சீராக முதலீடு செய்வதே சிறந்த உத்தி என்பதையும் உணர வேண்டும். அதே நேரத்தில் முதலீட்டாளர்கள் தங்கள் வசம் உள்ள பங்குகளின் தொகுப்பு பொருத்தமாக இருக்கிறதா என ஆராய வேண்டும்.வலுவான அடிப்படை கொண்ட பங்குகள் எனில் முதலீட்டை தொடரலாம்.
உயர்வுக்கான பொருத்தமான காரணங்கள் இல்லாத பலவீனமான பங்குகளை விற்று, முதலீடு தொகுப்பை மாற்றி அமைக்கலாம். ஏற்ற இறக்கத்தை மீறி, சீரான முதலீட்டை தொடர்வதே நல்ல பலன் அளிக்கும்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|