பதிவு செய்த நாள்
08 அக்2021
22:17

மும்பை:ரிசர்வ் வங்கி, அதன் பணக்கொள்கை கூட்டத்தின் முடிவில், வட்டி விகிதத்தில் எந்த மாறுதலும் மேற்கொள்ளப்படவில்லை என அறிவித்துள்ளது. இதையடுத்து, வாகன கடன், வீட்டுக்கடன் உள்ளிட்ட கடன்களை வாங்கியவர்களுக்கு மேற்கொண்டு வட்டிஅதிகரிக்க வாய்ப்பில்லை.
ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான, ஆறு உறுப்பினர்களை கொண்ட பணக்கொள்கை குழு கூட்டம், வங்கிகளுக்கு வழங்கப்படும் கடனுக்கான, ‘ரெப்போ’ வட்டிவிகிதம் எந்த மாறுதலும் செய்யப்படாமல், 4 சதவீதமாகவே தொடரும் என அறிவித்துள்ளது.வட்டி விகிதத்தில் எந்த மாறுதலையும் மேற்கொள்ளாதது இது 8வது முறையாகும்.
முக்கிய அம்சங்கள்:
* ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதமாகவே தொடரும். மேலும் ரிசர்வ் வங்கி, வங்கிகளிடமிருந்து பெறும் கடனை திருப்பிச் செலுத்துவதற்கான வட்டி விகிதமான, ‘ரிவர்ஸ் ரெப்போ’ வட்டி விகிதத்திலும் எந்த மாறுதலும் இன்றி, 4.25 சதவீதமாக தொடரும்
* நடப்பு நிதியாண்டுக்கான, நாட்டின் மொத்த உள்நாடு உற்பத்தி வளர்ச்சி குறித்த கணிப்பிலும் எந்த மாறுதலும் இன்றி, 9.5 சதவீத மாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது
* அதேசமயம் சில்லரை விலை பணவீக்க கணிப்பை, முந்தைய நிலையிலிருந்து குறைத்துள்ளது. நடப்பு நிதியாண்டுக்கான சில்லரை விலை பணவீக்க விகிதம் 5.3 சதவீதமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் 5.7 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டிருந்தது
* பணப்பரிவர்த்தனை சேவைகளில் ஐ.எம்பி.எஸ்., முறையில் 2 லட்சம் ரூபாய் வரை அனுப்பலாம் என்றிருப்பது, இனி 5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்படும்
* வாடிக்கையாளர்களின் குறைகளை தீர்க்க வங்கிகளில், ‘ஓம்புட்ஸ்மேன்’ எனும் குறைதீர்ப்பாளர் இருப்பதை போன்று, இனி பெரிய அளவிலான வங்கி சாரா நிதி நிறுவனங்களிலும் குறைதீர்ப்பாளர் அமர்த்தப்படுவர்
* கொரோனா தொற்றிலிருந்து பொருளாதாரத்தை பாதுகாக்க, கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து இதுவரை, 100 நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது
* பொருளாதார மீட்சியை ஏற்படுத்தும் வகையில், போதுமான பணப்புழக்கத்தை உறுதி செய்யும் என்றும் தெரிவித்து உள்ளது சில்லரை டிஜிட்டல் பேமென்ட் சேவையை, ‘ஆப்லைன்’ முறையிலும் பெறுவதற்கான கட்டமைப்பை, இந்தியா முழுதும் அறிமுகப்படுத்த உள்ள தாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
* அடுத்த பணக்கொள்கை கூட்டம், டிசம்பர் 6 முதல் 8ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோய்த்தொற்று தடுப்பு, தடுப்பூசி போடுவதில் நல்ல வேகம், எதிர்பார்க்கப்படும் கரீப் பருவ உணவு தானிய உற்பத்தி, அரசாங்கத்தின் மூலதன செலவுகள், நிதி நிலைமைகள், வெளிப்புற தேவை ஆகிய வற்றின் காரணமாக, நாட்டின் பொருளாதார மீட்சி வேகம் பிடித்துள்ளது.
சக்திகாந்த தாஸ்,
கவர்னர், ரிசர்வ் வங்கி
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|