பதிவு செய்த நாள்
17 அக்2021
19:16

குறைந்த வட்டி விகிதம் மற்றும் பணவீக்கத்தின் தாக்கம் வைப்பு நிதி அளிக்கும் உண்மையான பலனை குறைத்திருக்கும் நிலையில் முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்.
வங்கி கடனுக்கான வட்டி விகிதம் குறைவாக இருப்பது போலவே பெரிய வர்த்தக வங்கிகளின் வைப்பு நிதிக்கான வட்டி விகித பலனும் குறைவாகவே இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் வைப்பு நிதிக்கான பலன் தொடர்ந்து குறைந்து வந்திருக்கிறது. 2011ம் ஆண்டில் வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் அதிகபட்சமாக 8.2 சதவீதமாக இருந்த நிலையில், 2014ம் அண்டில், 7.9 சதவீதமாக குறைந்து 2021ல் சராசரியாக 5 சதவீதம் எனும் நிலையில் இருக்கிறது.
இதன் காரணமாக, வைப்பு நிதி முதலீடு அளிக்கும் பலன் ஈர்ப்புடையதாக அமையவில்லை என கருதப்படுகிறது. குறிப்பாக, அதிக வருமான வரி பிரிவில் உள்ளவர்களுக்கு வரிக்கு பிந்தைய பலன் இன்னும் குறைவாக அமைகிறது.
பணவீக்கம்
இந்நிலையில், தற்போதைய வட்டி விகிதம் மாற்றம் இல்லாமல் தொடரும் என ரிசர்வ் வங்கி அண்மையில் அறிவித்தது. இதன் காரணமாக, குறைந்த வட்டி விகிதமே தொடரும் சூழல் நிலவுகிறது. பலவீனமான பொருளாதார சூழல் மற்றும் கொரோனா பாதிப்பு காரணமாக மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை குறைத்து வருகின்றன. வட்டி விகித சுழற்சியில், மீண்டும் வட்டி விகிதம் உயரத் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், இது எப்போது நிகழும் எனத் தெரியவில்லை. இதனிடையே, சில்லரை பணவீக்க விகிதம், 5.3 ஆக இருப்பதாக ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பணவீக்க விகிதத்தை கருத்தில் கொண்டு பார்த்தால், ஓராண்டுக்கான வைப்பு நிதி அளிக்கும் உண்மையான பலன், எதிர்மறையாக இருப்பதை புரிந்து கொள்ளலாம்.
பொருளாதார சூழலுக்கு ஏற்ப வைப்பு நிதி அளிக்கும் உண்மையான பலன், எதிர்மறையாக இருப்பது இயல்பு என்றாலும், பணவீக்கத்தை மிஞ்சும் அளவுக்கு பலன் பெற வேண்டும் என நினைப்பவர்கள் மாற்று முதலீட்டு வாய்ப்புகளை நாடுவது பொருத்தமாகஇருக்கும் என்கின்றனர். தற்போது சிறு வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் வைப்பு நிதிக்கு அளிக்கும் வட்டி விகிதம் ஒப்பீட்டு அளவில் உயர்வாக உள்ளது. முதலீட்டாளர்கள் தங்கள் இடர்தன்மைக்கு ஏற்ப இந்த வாய்ப்புகளை பரிசீலிக்கலாம். மேலும், பங்குகளாக மாற்ற முடியாத கடன் பத்திரங்களையும் பரிசீலிக்கலாம்.
சிறுசேமிப்பு திட்டம்
எனினும், அதிக பலன் தரக்கூடிய முதலீடு வாய்ப்புகள் அதற்கு நிகரான இடர் கொண்டவை. உதாரணத்திற்கு, நிறுவனங்களின் வைப்பு நிதி எனில், அவற்றுக்கான ‘ரேட்டிங்’கை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். அதே நேரத்தில் சிறு சேமிப்பு திட்டத்தின் கீழ் வரும் பி.பி.எப்., அளிக்கும் வட்டி விகித பலன் 7.1 சதவீதமாக இருக்கிறது. தேசிய சேமிப்பு சான்றிதழ் 6.8 சதவீத பலனை அளிக்கிறது. உத்தரவாத பலன் அளிக்கும் ஒரு சில காப்பீடு திட்டங்களும் கூடுதல் பலன் அளிக்கின்றன.
இவற்றில் ஒரு சில வருமான வரி சலுகையையும் கொண்டுள்ளது.மேலும், மூத்த குடிமகன்களை பொறுத்தவரை குறிப்பிட்ட திட்டங்கள் 7.2 சதவீத பலன் அளிக்கின்றன. இந்த மாற்று வாய்ப்புகளை நாடுவது பொருத்தமாக இருக்கும் என்றாலும், இவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட அம்சங்களை கொண்டவை. முதலீட்டாளர்கள் தங்கள் சூழலுக்கு இவை பொருந்துமா என்பதை பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|