பதிவு செய்த நாள்
07 ஜூன்2022
21:13

புதுடில்லி:வருமான வரியை தாக்கல் செய்வதற்கான புதிய இணையதளம் துவக்கப்பட்டு, ஓராண்டு நிறைவுற்ற நிலையில், மீண்டும் கோளாறுகள் தலைதுாக்கி உள்ளன. இதனால், இணையதளத்தை அணுக முடியாமல், பலர் சிரமத்துக்கு ஆளாகினர்.
இதையடுத்து, பிரச்னையை உடனடியாக சரிசெய்யுமாறு, ‘இன்போசிஸ்’ நிறுவனத்தை அரசு கேட்டுக் கொண்டுள்ளது. கடந்த ஆண்டு, மத்திய நிதியமைச்சகம், வருமான வரி தாக்கல் செய்வதை எளிமைப்படுத்தும் முயற்சியில் இறங்கியது. இதற்காக, இன்போசிஸ் நிறுவனத்தை நியமித்தது.
கடந்த ஆண்டு ஜூன் 7ம் தேதியன்று, புதிய மாற்றங்களுடன், மேம்படுத்தப்பட்ட இணைய தளம் அறிமுகம் செய்யப்பட்டது.ஆனால், துவக்கம் முதலே அதில் பல்வேறு தொழில்நுட்ப பிரச்னைகள் ஏற்படத் துவங்கின. வருமான வரி தாக்கல் செய்பவர்கள் தொடர்ந்து மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வந்தனர். இதனால் வேறு வழி இன்றி, அரசும், தாக்கல் செய்வதற்கான அவகாசத்தை நீட்டித்து வந்தது.
அறிமுகம் செய்யப்பட்டு மாதங்கள் பல ஆகியும், நிலைமை சரியாகாத காரணத்தால், கடந்த ஆண்டில் இன்போசிஸ் நிறுவனத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இன்போசிஸ் தலைமை செயல் அதிகாரி நிதியமைச்சரை நேரில் சந்தித்து விளக்கம் தருமாறு அதில் தெரிவிக்கப் பட்டிருந்தது. அதன் பின், தொழில்நுட்ப கோளாறுகள் சரிசெய்யப்பட்டு, ஓரளவு பிரச்னைகள் குறைந்து, மக்கள் தங்கள் வருமான வரியை தாக்கல் செய்து வந்தனர்.
இந்நிலையில், இந்த புதிய இணையதளம் துவக்கப்பட்டு ஓராண்டு நிறைவுற்ற நாளான நேற்று, மீண்டும் கோளாறு தலைதுாக்கியது.பலர் இணையதளத்திற்குள் செல்ல முடியவில்லை என்றும், தேடலின்போது தவறாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினர்.
இதையடுத்து, முன்னுரிமை கொடுத்து உடனடியாக இப்பிரச்னையை சரிசெய்து கொடுக்குமாறு, இன்போசிஸ் நிறுவனத்தை வருமான வரித் துறை கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், தரவுகள் எதுவும் வெளியே கசியவில்லை என்றும் நிதியமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|