பதிவு செய்த நாள்
23 ஜன2017
07:26
நாம் வாழ்வில், பழக்கங்கள் மிகவும் முக்கிய மானவை எனக்கூறும், ஜெர்மி டீன், முன்னேற்றத்தை ஏற்படுத்தக்கூடிய பழக்கங்களை உருவாக்கி கொள்ளும் வழிகளையும், பலன்அளிக்காத பழக்கங்களை மாற்றிக் கொள்ளும் வழிகளையும், ‘மேக்கிங் ஹாபிட்ஸ், பிரேக்கிங் ஹாபிட்ஸ்’ புத்தகத்தில் விவரிக்கிறார்.
பழக்கங்கள், நம் வாழ்க்கையில் முக்கிய பங்காற்றுகின்றன. எல்லா விஷயங்கள் தொடர்பாகவும் முடிவெடுக்காமல், பலவற்றை தானாக செய்து கொள்ள வழி செய்வதன் மூலம், அவை மூளைக்கு ஓய்வளிக்கின்றன. தினமும் தவறாமல் செய்யும் விஷயங்களை கூட, யோசித்து முடிவெடுக்க வேண்டும் என்றால், எத்தனை களைப்பாக இருக்கும் என, யோசித்துப் பாருங்கள். பழக்கங்கள், இவற்றில் இருந்து விடுதலை அளிக்கின்றன.எந்த ஒரு விஷயத்தையும் அதிகம் யோசிக்காமல், தானாக செய்யும் இந்த தன்மையால் தான், பழைய பழக்கத்தை மாற்றிக் கொள்வது, புதிய பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது என, இரண்டுமே மிகவும் கஷ்டமானதாக இருக்கிறது. லண்டன் கல்லுாரியில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று, பழக்கங்களை உருவாக்கிக் கொள்ள தேவைப்படும் முயற்சியை உணர்த்துகிறது.
தினமும் காலை, உணவுடன் ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள, 20 நாட்கள் தேவை. இதே கொஞ்சம் கடினமான செயல்களை செய்ய, கூடுதல அவகாசம் வேண்டும். உதாரணமாக, தினமும், 50 பஸ்கி எடுக்கப் பழக, 84 நாட்கள் தேவை.புதிய பழக்கத்தை உண்டாக்கிக் கொள்ள சிறந்த வழி, அதற்கும், குறிப்பிட்ட சூழலுக்கும் ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதாகும். இப்படி செய்வதன் மூலம், பழக்கத்தை எளிதாக ஏற்படுத்திக் கொள்ளலாம். ஒரு செயலை செய்வதன் மூலம் கிடைக்கக் கூடிய பலனை அல்லது செய்யாமல் இருப்பதால் உண்டாகும் பாதிப்பை, அதனுடன் தொடர்புபடுத்திக் கொள்வதன் மூலம் இதை செய்யலாம். இதை செயல்படுத்துவதற்கான உத்வேகம் என, வைத்துக் கொள்ளலாம்.
ஒரே விதமான சூழலில், நாம் ஒரே செயலை செய்வதற்கு பழக்கப்பட்டிருக்கிறோம். சொல்லப்போனால், இந்த தொடர்பே, பழக்கங்கள் உருவாக ஒரு காரணமாக அமைகின்றன. இந்த முறையை, நிதி மற்றும் பணம் தொடர்பான பழக்கங்களுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். கிரெடிட் கார்டு பழக்கத்தை கட்டுப்படுத்த விரும்பினால், 200 ரூபாய்க்கு குறைவான பொருட்களை வாங்க வேண்டும் என்றால், நான் ரொக்கப் பணத்தை மட்டும் தான் பயன்படுத்துவேன் என்பது போன்ற கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ளலாம்.
புதிய வீட்டிற்கு குடிபெயரும் போது அல்லது புதிய வேலையில் சேரும் போது, சூழலுடனான தொடர்பு எந்த அளவு முக்கியம் என்பதை, நம்மால் உணர முடியும். அதே போல, நம்மைச் சுற்றியுள்ள சூழல் நம் செயல்களையும் பாதிக்கின்றன. நல்ல பழக்கங்கள் போலவே, பாதிப்பை ஏற்படுத்தும் பழக்கங்களும் உருவாகின்றன. ஒவ்வொரு முறை, அவற்றை நாம் செய்யும் போது அவை மேலும் வலுவாகின்றன. நாம் அவற்றை யோசிக்காமலே செய்கிறோம் என்பதால் தான், அவற்றை மாற்றிக் கொள்வதும் கடினமாக இருக்கிறது. பழக்கங்களை சரியான முறையில் மேற்கொள்வதன் மூலம், மாற்றிக் கொள்ளலாம்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|