பதிவு செய்த நாள்
13 செப்2017
01:15
புதுடில்லி : கடந்த ஜூலையில், தொழில் துறை உற்பத்தி சிறிது வளர்ச்சி கண்டுள்ள நிலையில், காய்கறிகள், பழங்கள், எரிபொருள் ஆகியவற்றின் விலை உயர்வால், ஆகஸ்டில், சில்லரை பணவீக்கம், 1 சதவீதம் உயர்ந்துள்ளது.
இது குறித்து, மத்திய புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஜூலையில், தொழில் துறை உற்பத்தி, 1.2 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இத்துறையின் உற்பத்தி வளர்ச்சி, ஜூன் மாதம், 0.1 சதவீதம் பின்னடைவைக் கண்டிருந்தது; இது, முந்தைய, 48 மாதங்களில் இல்லாத அளவிற்கு ஏற்பட்ட சரிவாகும். இந்த பின்னடைவில் இருந்து மீண்டு, தொழில் துறை, வளர்ச்சி பாதைக்கு திரும்பி உள்ளதற்கு, சுரங்கம் மற்றும் மின் துறைகள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளன.
சுரங்கத் துறை உற்பத்தி, 4.8 சதவீதம்; மின் துறை உற்பத்தி, 6.5 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டுள்ளன. தொழில் துறை உற்பத்தியை கணக்கிடுவதில், குறிப்பிடத்தக்க பங்களிப்பை, தயாரிப்புத் துறை வழங்கி வருகிறது. இத்துறையின் உற்பத்தி வளர்ச்சி, ஜூலையில், 0.1 சதவீதமாக உயர்ந்துள்ளது; இது, மே மாதம், 2.6 சதவீதமாக அதிகரித்திருந்த நிலையில், ஜூனில், 0.4 சதவீதமாக சரிவடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. பொறியியல்சாதனங்கள் துறையின் உற்பத்தி வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள பின்னடைவு, 1 சதவீதம் என்ற அளவிற்கு உள்ளது.
இந்த பின்னடைவு, ஜூன் மாதம், 6.8 சதவீதமாகவும், மே மாதம், 1.38 சதவீதமாகவும் இருந்தது. நடப்பு, 2017 – 18ம் நிதியாண்டில், ஏப்., – ஜூலை வரையிலான நான்கு மாதங்களில், தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, 1.7 சதவீதமாக உள்ளது. இது, கடந்த நிதியாண்டின், இதே காலத்தில், 6.5 சதவீதமாக இருந்தது. ஜி.எஸ்.டி., அறிமுகம், தொழில் துறை உற்பத்தியில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாமல், சிறிதளவு வளர்ச்சிக்கு துணை புரிந்திருப்பது, நல்ல அறிகுறி என, வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
5 மாதத்தில் இல்லாத அளவு:
ஆக., மாதம், நாட்டின் சில்லரை பணவீக்கம், 1 சதவீதம் அதிகரித்து, 3.36 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, ஜூலையில், 2.36 சதவீதமாக இருந்தது. இந்தாண்டு மார்ச்சில், சில்லரை பணவீக்கம், 3.89 சதவீதமாக உயர்ந்து காணப்பட்டது. காய்கறிகள், பழங்கள், எரிபொருள் ஆகியவற்றின் விலை உயர்வால், சில்லரை பணவீக்கம், ஐந்து மாதங்களில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. பழங்கள், காய்கறிகள் பணவீக்கம், முறையே, 5.29 சதவீதம் மற்றும் 6.16 சதவீதமாக உயர்ந்துள்ளது. இவை, ஜூலையில், முறையே, 2.83 சதவீதம் மற்றும் மைனஸ், 3.57 சதவீதம் என்ற அளவில் இருந்தன.
மதிப்பீட்டு மாதத்தில், உணவு தானியங்கள், சமையல் எண்ணெய், மாமிசம் மற்றும் மீன் ஆகிய மூன்று பிரிவுகளின் பணவீக்கம், முறையே, 3.87 சதவீதம், 1.03 சதவீதம் மற்றும் 2.94 சதவீதமாக குறைந்துள்ளன. உடனடி உணவுகள், நொறுக்குத் தீனிகள், இனிப்பு வகைகள் ஆகியவற்றின் பணவீக்கம், 0.43 சதவீதத்தில் இருந்து, 1.96 சதவீதமாக அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|