‘ரெப்போ’ வட்டி மேலும் உயரும் டி.பி.எஸ்., நிறுவனம் கணிப்பு‘ரெப்போ’ வட்டி மேலும் உயரும் டி.பி.எஸ்., நிறுவனம் கணிப்பு ... சொந்த வீடு கனவு நிறை­வேற உத­வும் சேமிப்பு வழி­கள்! சொந்த வீடு கனவு நிறை­வேற உத­வும் சேமிப்பு வழி­கள்! ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
நிதி பற்றாக்குறையில் மாநிலங்கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2018
02:37

இந்திய பொருளாதாரம், பிரான்சை முந்தி, சர்வதேச அளவில் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது என்பது தேன்செய்தி. அதேசமயம், இந்தியாவுக்குள் இருக்கும் பல்வேறு மாநிலங்களின் நிதி பற்றாக்குறை அளவு, தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டும் உயர்ந்துள்ளது கவலை அளிக்கிறது. இதற்கு என்ன காரணம்?
மத்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. மாநிலங்களின் நிதி நிலைமை பற்றிய அறிக்கை அது. அதில், மாநில அரசுகளின் நிதிப் பற்றாக்குறை, 3.1 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக, மத்திய, மாநிலங்களின் நிதிப் பற்றாக்குறை, 3 சதவீதத்துக்கு மேல் போகக் கூடாது என்பது லட்சுமண ரேகை. அதை மீறிப் போனால், நிதி நிர்வாகத்தில் ஏதோ கோளாறு என்று அர்த்தம்.சென்ற ஆண்டு, பல்வேறு மாநிலங்கள் வழங்கிய பட்ஜெட்டுகளில் தங்களது நிதிப் பற்றாக்குறை, 2.7 சதவீதம் தான் இருக்கும் என்று கணித்திருந்தன. ஆனால், 2017 --- 18 செலவினங்களைப் பார்க்கும்போது, இந்தக் கணிப்பு பொய்த்துப் போய்விட்டது.
இந்தக் கணக்கில் ஒரு சின்ன அல்ப திருப்தி இருப்பதை மறுப்பதற்கில்லை. உதய் திட்டத்தில், தமிழகம் உட்பட பல மாநிலங்கள் இணைந்துள்ளதால், மின் பகிர்மானக் கழகத்தின் கடன் தொகை, மாநில செலவினங்களில் சேராது.அப்படிப் பார்க்கும்போது, மாநிலங்களில் உண்மையான நிதிப் பற்றாக்குறை, 3.1 சதவீதம் அல்ல; அது, 2.7 சதவீதம் தான் என்று கொஞ்சம் தெம்பாகச் சொல்லலாம்.
ஆனால், ஆர்.பி.ஐ., உதய் திட்ட கடனையும் கணக்கில் எடுத்துக்கொண்டே கணக்கிட்டிருப்பதாகத் தெரிகிறது.
ஏன் இந்த மீறல்?
அதனால் தான், 3.1 சதவீத நிதிப் பற்றாக்குறை முன்வைக்கப்படுகிறது. 3 சதவீதத்துக்குள் ஏன் மாநிலங்கள் தங்கள் நிதிப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்த முடியவில்லை?சென்ற ஆண்டு தான், ஜி.எஸ்.டி., அமல்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசில் இருந்து, மாநில அரசுகளுக்கு வந்து சேரவேண்டிய உரிய தொகை நிலுவையில் இருப்பதால், வரவுகளை முழுமையாக காண்பிக்க முடியவில்லை.
மேலும், மாநில அரசுகளுக்கு இழப்புகள் ஏதேனும் இருக்குமானால், முதல் ஐந்து ஆண்டுகளுக்கு மத்திய அரசு அதை ஈடு செய்யும் என்று ஏற்கனவே உறுதி அளிக்கப்பட்டுள்ளது. அதனால், திரட்டப்படும், ஜி.எஸ்.டி., வருவாயில் உரிய பங்கு வருவது உறுதி. ஆனால், அது எப்போது வரும் என்பதுதான் சிக்கல்.இன்னொரு முக்கியமான காரணம், ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, மஹாராஷ்டிரா, பஞ்சாப், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகம் உட்பட பல மாநிலங்கள் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்துவிட முடிவெடுத்துள்ளன. இதனால், மாநில நிதி நிலைமை திணறுகின்றன.
மூன்றாவது காரணம், ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை, பல மாநிலங்கள் அமல்படுத்தி வருகின்றன. இதனாலும், அவர்களின் நிதி நிலைமை கவலைக்கிடமாக இருக்கின்றன.பல மாநிலங்களில் போதிய வரி வருவாய் இல்லை. செலவினங்களோ அதிகம் எனும்போது, நிதிப் பற்றாக்குறை ஏற்படவே செய்யும்.
பாதிப்புகள் என்ன?
நிதிப் பற்றாக்குறை ஏற்படும்போது, பல மாநில அரசுகள் கடன் பத்திரங்களை வெளியிடும். வங்கிகளும், காப்பீட்டு நிறுவனங்களும், பரஸ்பர சகாய நிதி நிறுவனங்களும், அரசுத் துறை கடன் பத்திரங்களை வாங்கவே முன்னுரிமை கொடுக்கும்.இதனால், தனியார் பெருநிறுவனங்கள் கடன் பெறுவதற்கு கூடுதல் வட்டி கொடுக்க வேண்டி இருக்கும். அதைக் கொண்டே அவை தம் தொழிலகங்களை மேம்படுத்துகின்றன என்பதால், அங்கே பெரிய இடர் ஏற்படும். தேக்கம் ஏற்படும். வளர்ச்சியில் தொய்வு ஏற்படும்.
செலவுகளைக் கட்டுப்படுத்தி, திறமையான நிதி நிர்வாகத்தைக் காண்பித்தால் தான், பல தனியார் முதலீட்டாளர்கள் மாநில அரசுகளின் கடன் பத்திரங்களை வாங்க முன்வருவர். இன்றைக்கு இருக்கும் நிலையில் பல மாநில அரசுகளுக்கு, எங்கே தங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்தி, நெறிப்படுத்த வேண்டும் என்றே தெரியவில்லை. கடைசியில் அவை கை வைப்பது, வளர்ச்சிப் பணிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியிலே தான்.
பல மாநிலங்களில் செய்யப்பட வேண்டி வளர்ச்சிப் பணிகள் இதனால் சுணங்கிப் போவது நிச்சயம்.இந்தப் பின்னணியில் இருந்து பார்க்கும்போது, மாநில அரசுகளுக்கு வரி வருவாய் ஈட்டித்தருவது மது விற்பனையும், மனை விற்பனையும், பெட்ரோல் டீசல் வரிகளும் தான். மாநில நிதிப் பற்றாக்குறைகள் கட்டுப்பாட்டுக்குள் இல்லை எனும்போது, பெட்ரோல், டீசலை, ஜி.எஸ்.டி., வரம்புக்குள் கொண்டுவர, நிச்சயம் மாநில அரசுகள் ஒப்புக்கொள்ளப் போவதில்லை.
அதேபோல், மது வகைகள்மீது விதிக்கப்படும் வரிகள் மேன்மேலும் உயரவே போகின்றன. டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான வாய்ப்புகள், கண்ணுக்கெட்டிய தொலைவு வரை தெரியவில்லை என்ற கசப்பான உண்மையை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
அடுத்த இரு இடிகள்
அடுத்த ஓராண்டுக்குள் பல மாநிலங்களில் சட்டசபை தேர்தல் வரப் போகின்றன. லோக்சபா தேர்தலும் வரப் போகிறது. இந்நிலையில், பல மாநிலங்கள் ஏராளமான சலுகைகளை ஏழை எளிய மக்களுக்கு வழங்கி, ஓட்டுகளை அறுவடை செய்யவே விரும்பும்.இதன் விளைவாக, மாநில நிதி நிலைமைகள் தள்ளாட்டம் காணப் போவது உறுதி. ஆர்.பி.ஐ., அறிக்கை இந்தக் கவலையை அடிக்கோடிட்டே காண்பித்திருக்கிறது.
இன்னொரு பிரச்னையும் இருக்கிறது. 2008 பொருளாதாரத் தேக்கத்தின்போது பல மாநில அரசுகள், 10 ஆண்டு கடன் பத்திரங்களை வெளியிட்டன. இந்த ஆண்டின் முடிவில் அவை முதிர்வு பெறப் போகின்றன. பணத்தைத் திருப்பித் தரவேண்டும். அது, மாநில அரசின்நிதி நிலைமை மீது கடும் அழுத்தத்தை ஏற்றப் போவது உறுதி.
தீர்வு என்ன?
செம்மையான நிதி நிர்வாகம்ஒன்று தான் ஒரே வழி. வரவுகளை உயர்த்த எந்த வழியும் இல்லை. செலவுகளை பல மடங்கு கட்டுப்படுத்த ஏராளமான வழிகள் உள்ளன.இடுப்புப் பட்டியை இறுக்கக்கட்டி செயல்பட்டால், மாநிலங்கள் பிழைக்க முடியும். தேர்தல் லாபத்தை மனத்தில் கொண்டு, செலவுகளை கன்னாபின்னாவென்று செய்தால், ஆட்சியாளர்கள் வேண்டுமானால் மீண்டும் அரசுக் கட்டிலில் ஏறலாம். ஆனால், மக்கள் ஓட்டாண்டிகளாவது நிச்சயம்.இதை எந்த மாநில மக்களும் விரும்பமாட்டார்கள் என்பதை,ஆட்சியாளர்கள் உணரவேண்டும்.
ஆர்.வெங்கடேஷ் பத்திரிகையாளர்

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)