அட... 'முட்டை'தான் என்று குறைத்து மதிப்பிடாதீர்கள்!அட... 'முட்டை'தான் என்று குறைத்து மதிப்பிடாதீர்கள்! ... பணியிழப்பின் பாதிப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி? பணியிழப்பின் பாதிப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி? ...
நகர மறுக்கும் பொருளாதார தேருக்கு மசகு போடணுமே!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 மே
2020
22:13

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 20 லட்சம் கோடி ரூபாய்க்கான ஊக்குவிப்புத் திட்டங்களை அறிவித்து, இரண்டு வாரங்கள் ஓடிவிட்டன. அவை எவ்வளவு துாரம் நடைமுறைக்கு வந்துள்ளன? என்ன தாக்கத்தை ஏற்படுத்தத் துவங்கியுள்ளன?

குறு, சிறு, நடுத்தரத் தொழில்களுக்குத் தான் நிதி அமைச்சர் கூடுதல் கவனம் அளித்து இருக்கிறார். அத்துறையினர் கடன் பெறுவதற்கு என்றே, 3 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டு இருக்கிறது. கூடுதல் நிதிஇதற்கு முழு கடன் உத்தரவாதம், அடமானங்கள் தேவை இல்லை, தன்னிச்சையாகவே, கடன்களின் அளவு, 20 சதவீதம் வரை உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இரண்டு வாரங்கள் ஆகியும் இந்தக் கடன்களில் பெரிய சுறுசுறுப்பு தெரியவில்லை. பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. முக்கியமான பல வங்கிக் கிளைகளில் பணியாளர் பற்றாக்குறை. அலுவலகம் வருபவர்களுக்கும், அன்றாட வங்கிப் பணிகளை மேற் கொள்ளவே நேரம் சரியாக இருக்கிறது. கடன் கொடுக்கும் முயற்சிகளில், அவர்களால் இயங்க முடியவில்லை.பல வங்கிகளில், இன்னொரு தயக்கம் தெரிவிக்கப்படுகிறது. அவர்களுடைய தலைமை அலுவலகத்தில் இருந்து, தெளிவான வழிகாட்டு நெறிமுறைகள் வந்து சேரவில்லை என்று சொல்லப்படுகிறது.

ஏற்கனவே கடன் வாங்கியோருக்கு தான், கூடுதல் நிதி ஆதாரம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அதில் எத்தகைய நிறுவனங்களுக்கு இவை வழங்கப்பட வேண்டும் என்பதில் பலரும் குழம்பி நிற்கின்றனர்.அடிப்படையில் ஒரு பயம் இருக்கிறது. 'கடன் தொகை திரும்ப வராமல் போய்விட்டால் என்ன செய்வது...' என்ற பயம் தான் அது. அதனால், ஒருசில வங்கிக் கிளைகள், 'தரமான' வாடிக்கையாளர்களை மட்டும் அழைத்து, அவர்களுடைய கடன் அளவு உயர்த்தப்படலாமா என்று கேட்டு, வாய்ப்பு வழங்குகின்றன.


ஆனால், குறு, சிறு, நடுத்தரத் தொழில் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் வேறொரு கோரிக்கையை முன்வைக்கின்றனர். 'நாங்கள் இந்த கூடுதல் கடனை பயன்படுத்து கிறோமோ இல்லையோ, வங்கிகள் தன்னிச்சையாக கடன் தொகையை உயர்த்தி அளிக்கும் விவரத்தைத் தெரிவித்துவிட வேண்டும். 'அல்லது, வங்கிகளில் ஒருகாலத்தில் நடத்தப்பட்ட, 'லோன் மேளா' மாதிரி, குறு, சிறு, நடுத்தரத் தொழில்களைச் சேர்ந்தவர்களை அழைத்து, கடன்களை வழங்கும் முயற்சியை எடுக்க வேண்டும்' என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

திருப்பூர், கோவை தொழிலதிபர்கள் மத்தியில் எழுந்துள்ள மற்றொரு கோரிக்கையும் முக்கியமானது. 'மத்திய அரசின் கடன்களைப் பெறும்போது, சொத்துக்களை அடமானமாக, நாங்கள் வைக்க வேண்டும். இப்போது புதிதாக, 'சொத்துகளை பத்திரப் பதிவு செய்து கொடுங்கள்' என, வங்கிகள் கேட்கின்றன. இதனால், ஒவ்வொரு சிறுதொழில் நிறுவனமும், 5,௦௦௦ ரூபாய் முதல், 30 ஆயிரம் ரூபாய் வரை கூடுதலாகச் செலவு செய்ய வேண்டி இருக்கிறது.


இந்தப் பத்திரப்பதிவு கட்டணத்திற்கு, மாநில அரசு, இந்த ஒருமுறை மட்டும் விலக்கு அளிக்க வேண்டும்' என்று கோரிக்கை வைக்கின்றனர்.வங்கித் துறையில் தயக்கம், சுணக்கம், பின்வாங்கல் போன்றவை தென்படுகின்றன என்பதே உண்மை. அதனால் தான், இன்னமும் பல்வேறு வங்கிகள், தங்கள் கையிருப்பை, மிகக் குறைந்த வட்டியான 3.35 சதவீதத்துக்கு, ஆர்.பி.ஐ.,யிடம் வைக்கின்றன. அவர்களது நிகர வட்டி வருவாய், 2.75 சதவீதம் தான் எனும்போது, 3.35 சதவீதம் என்பதே பெரிய வருவாய் என்று அவை கருதுகின்றனவோ என்னவோ!

இன்னொரு கவனிக்கத்தக்க அம்சம் என்னவெனில், மத்திய அரசுக்கும், அதன் பொதுத் துறை நிறுவனங்களுக்கும், ஒப்பந்த அடிப்படையில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் செய்து கொடுத்த பணிகளுக்கு, இன்னும் கட்டணத் தொகை வழங்கப் படவில்லை.


நிலுவைத் தொகை

இந்த நிலுவை, அடுத்த, 45 நாட்களுக்குள் வழங்கப்பட்டு விடும் என்று, மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதே தவிர, மாநில அரசின் நிலுவைத் தொகை குறித்து, மூச்சே காணோம்!

குறு,சிறு, நடுத்தரத் தொழில்களின் அமைச்சரான நிதின் கட்கரி, இத்தகைய நிலுவைத் தொகை, 5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இருக்கிறது என்று தெரிவித்தார்.இதில், 40 சதவீதம், மத்திய அரசு நிறுவனங்களிடம் இருந்து வர வேண்டியவை; மீதமுள்ள, 60 சதவீத நிலுவைத் தொகை மாநில அரசுகளிடம் இருந்து வர வேண்டியவை. ஒரு வினோதமான அம்சத்தை, தொழிலதிபர் ஒருவர் குறிப்பிட்டார்.

மத்திய அரசுத் துறையோ, பொதுத் துறை நிறுவனமோ, 1 லட்சம் ரூபாய்க்கு மேல் நிலுவை வைத்து, இழுத்தடித்தபடி இருந்தால், திவால் சட்டப்படி அவர்கள் மீது குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள், வழக்கு தொடர்வதற்கு, முன்பு வாய்ப்பு இருந்தது. தற்போது, 'கோவிட் 19' காலத்தில், இந்த எல்லை, ஒரு கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டிருப்பதோடு, புதிய வழக்குகளை அடுத்த ஓராண்டுக்குத் தொடுக்கவும் முடியாது.


அரசுத் துறை நிறுவனங்கள், தேவையற்ற வழக்கு சிக்கல்களில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்ற நல்லெண்ணத்தில், இந்த விதி மாற்றம் செய்யப்பட்டு இருந்தாலும், இதனால், குறு, சிறு, நடுத்தரத் தொழில்களுக்கு பணம் வந்து சேர்வதில், சட்ட ரீதியாகவே தாமதம் ஏற்படுவதற்கு வழியேற்படுத்திக் கொடுத்து விட்டார் போலிருக்கிறது என்று வருத்தப்பட்டார் அந்தத் தொழிலதிபர்.

மத்திய அரசு அறிவித்த மற்றொரு முக்கிய திட்டம், ஜன்தன் யோஜனாவின் கீழ், பெண்களுக்கு, அடுத்த மூன்று மாதங்களுக்கு 500 ரூபாய் வழங்குவதாகும். ஜன் தன் திட்டத்தின் கீழ், 20.5 கோடி பெண்களுக்கு முதல் தவணை வழங்கப்பட்டு விட்டது.


மே, 4ம் தேதி முதல் இரண்டாம் தவணையும் அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகிஉள்ளது.ஆனால், இதில் கூடுதல் செய்தி ஒன்று வெளிவந்திருக்கிறது. பயன்பெற்ற பெண்களில், 50 சதவீதத்தினர் மட்டும், அத்தொகையை எடுத்திருக்கின்றனர், பிறர் எடுக்கவில்லை என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. பெண்கள் தங்கள் எதிர்காலத்துக்காகச் சேமிக்கின்றனர்; அவர்களுக்கு இப்போதைக்கு இந்தப் பணம் தேவைப்படவில்லை என்றெல்லாம் நேர்மறை காரணங்கள் அடுக்கப்படுகின்றன.

ஆனால், வேறு சில காரணங்களும் முன்வைக்கப்படுகின்றன. பொதுமுடக்கத்தால் ஏ.டி.எம்.,களுக்குப் போக முடியவில்லை; ஏ.டி.எம்.,கள் மிகவும் தொலைவில் உள்ளன; வங்கிகளில் நெரிசல்; ஏ.டி.எம்.,களுக்குப் போனால், கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டுவிடும் என்பன போன்ற காரணங்களால், 500 ரூபாயை இந்தப் பெண்கள் எடுக்கவில்லை என்பது தெரியவருகிறது.


அதாவது, 'நேரடிப் பணப்பட்டுவாடா என்ற உத்தி, மிகவும் துல்லியமானது. உரியவரைப் போய்ச் சேர்ந்து பயனளித்து விடும்'் என்று கருதப்பட்டது. தமிழகத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டபோது, மிகப்பெரிய அளவில் ஜன் தன் வங்கிக் கணக்குகள் மூலம் தான், பணம் வழங்கப்பட்டது. அது தமிழக அளவில் சிறப்பாக செயல்பட்டாலும், தேசிய அளவில், இந்த மாதிரி உரிய பயனை அளிக்கவில்லை என்றே கருத வேண்டியிருக்கிறது.

இதே காலக்கட்டத்தில், வழங்கப்பட்ட மற்றொரு நிதி உதவியையும் இங்கே கவனத்தில் எடுத்துக் கொள்வது பொருத்தமாக இருக்கும். தமிழகத்தில் மொத்தமுள்ள, 2.01 கோடி ரேஷன் அட்டைதாரர்களில், 1.98 கோடி பேர், 1,000 ரூபாயை உதவித் தொகையாக பெற்று உள்ளனர். கிட்டத்தட்ட, 99.25 சதவீதம் பேர் பயன்பெற்றுள்ளனர்.

மீண்டும் புத்துணர்ச்சி

கொரோனா பேரிடர் காலத்தில், விரைவும், வேகமும் தான் அதிமுக்கியமானவை. எதைச் செய்தாலும், அது உடனடியாக, பாதிக்கப்பட்டவரைப் போய்ச் சேர வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு. வங்கிகள் விரைந்து செயல்பட்டு, கடனுதவியை விரைந்து வழங்கினால் தான், பல்வேறு தொழில்களும் மீண்டும் புத்துணர்ச்சி பெறும். அதன்மூலம், வேலைவாய்ப்புகள் பெருகும்.மக்கள் கையில் பணம் கொடுக்க வேண்டும் என்றால், அதை கொண்டு சேர்க்கும் எளிதான வழிமுறைகள் என்ன என்பதையும், மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

அரசின் நோக்கம், மிகச் சரியாக இருக்கலாம். ஆனால், இடையில் உள்ள, பழைய பல் சக்கரங்களும் தேய்ந்து போன உதிரி பாகங்களும் முரண்டு பிடிக்கும்போது, பொருளாதாரத் தேர் எப்படி விரைந்து ஓட முடியும்?இவற்றுக்கெல்லாம் மசகு போட்டு, ஓட்டத்தை சுலபமாக்கினால் தான், எதிர்பார்த்த நற்பலன்கள் கிடைக்கும் என்பதை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும்!-

ஆர்.வெங்கடேஷ்
pattamvenkatesh@gmail.com9841053881

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)