பதிவு செய்த நாள்
05 பிப்2012
03:22
மும்பை : இந்திய நிறுவனங்கள், சென்ற ஜனவரி மாதத்தில், வெளிநாடுகளில் மேற்கொண்ட முதலீடு, 79.70 கோடி டாலராக (3,985 கோடி ரூபாய்) குறைந்துள்ளது. இது, சென்ற டிசம்பர் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட முதலீட்டை விட, 45 சதவீதம் (146 கோடி டாலர் - 7,300 கோடி ரூபாய்) குறைவாகும் என ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்ற ஜனவரி மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட மொத்த 418 முதலீடுகளில், டாட்டா குழுமம், ஐ.எல் அண்டு எப்.எஸ்., லூபின் ஆகிய மூன்று நிறுவனங்களே அதிக அளவிலான முதலீடுகளை மேற்கொண்டுள்ளன. டாட்டா கம்யூனிகேஷன் நிறுவனம், சிங்கப்பூரைச் சேர்ந்த, அதன் துணை நிறுவனமான வி.எஸ். என்.எல்.இன்டர்நேஷனல் பி.டி.இ. நிறுவனத்தில், போக்குவரத்து, சேமிப்பு மற்றும் தொலைத் தொடர்பு சேவைகளுக்காக, 7.67 கோடி டாலரை (388 கோடி ரூபாய்) முதலீடு செய்துள்ளது.
மேலும், டாட்டா குழுமத்தைச் சேர்ந்த மற்ற நிறுவனங்களான டாட்டா கெமிக்கல்ஸ், டாட்டா மோட்டார்ஸ் மற்றும் டாட்டா பவர் நிறுவனங்கள் முறையே, சிங்கப்பூர், பூட்டான், இங்கிலாந்து மற்றும் மொரீஷியஸ் ஆகிய நாடுகளில் உள்ள அவற்றின் துணை மற்றும் கூட்டு நிறுவனங்களில், மொத்தம், 73 லட்சம் டாலர் முதலீடு செய்துள்ளன.
அடிப்படை கட்டமைப்புத் துறையில் ஈடுபட்டு வரும் ஐ.எல். அண்டு எப்.எஸ். குழுமம், அமெரிக்காவைச் சேர்ந்த அதன் துணை நிறுவனமான ஐ.என்.டி.எல். பி.டி.இ. நிறுவனத்தில், 4.82 கோடி டாலரை முதலீடு செய்துள்ளது. இக்குழுமத்தின், மற்றொரு நிறுவனமான ஐ.எல்.அண்டு எப்.எஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம், பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த அதன் துணை நிறுவனத்தில், நிதி, காப்பீடு, ரியல் எஸ்டேட், வர்த்தக நடவடிக்கைகளுக்காக, 2.42 கோடி டாலரை முதலீடு செய்துள்ளது.
மேலும், மருந்து பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும், லூபின் நிறுவனம், நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த, லூபின் ஹோல்சைன் பி.வி. என்ற அதன் துணை நிறுவனத்தில், 4 கோடி டாலரை முதலீடு செய்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான 10 மாத காலத்தில், இந்திய நிறுவனங்கள் அயல்நாடுகளில் மேற்கொண்ட முதலீடு, 2,610 கோடி டாலரை (1 லட்சத்து 30 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) எட்டியுள்ளது. இது, சென்ற 2010-11ம் நிதியாண்டில், 1,943 கோடி டாலராக (97 ஆயிரத்து 150 கோடி ரூபாய்) இருந்தது என, ரிசர்வ் வங்கி மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|