பதிவு செய்த நாள்
25 ஜூலை2013
14:10

கோல்கட்டா: இந்தியாவில் கச்சா உருக்கு உற்பத்தி ஜூன் மாதத்தில் 0.9 சதவீதம் அதிகரித்து 64.50 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. 2012ம் ஆண்டின் இதே மாதத்தில் கச்சா உருக்கு உற்பத்தி 63.90 லட்சம் டன்னாக இருந்தது. ஜூன் மாதத்தில் சர்வதேச அளவில் 13.20 டன் கச்சா உருக்கு உற்பத்தியாகியுள்ளது. இது, சென்ற ஆண்டு ஜூன் மாதத்தை விட 1.9 சதவீதம் அதிகமாகும். ஆக, உலகின் சராசரி கச்சா உற்பத்தி வளர்ச்சியைக் காட்டிலும் நம் நாட்டில் வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. அதே சமயம் ஜனவரி–ஜூன் மாத காலத்தில் உலக சராசரியை காட்டிலும் இந்தியாவின் கச்சா உருக்கு உற்பத்தி வளர்ச்சி அதிகமாக உள்ளது. ஜூன் வரையிலான ஆறு மாதங்களில் உள்நாட்டில் கச்சா உருக்கு உற்பத்தி 2.5 சதவீதம் உயர்ந்து 3.96 கோடி டன்னை தாண்டியுள்ளது. இது, 2012ம் ஆண்டின் இதே காலத்தில் 3.87 கோடி டன்னாக இருந்தது. இதே காலத்தில் உலகின் கச்சா உருக்கு உற்பத்தி 2 சதவீதம் வளர்ச்சி கண்டு 79 கோடி டன்னாக உள்ளது.
நடப்பு ஆண்டு ஜூன் மாதத்தில் உலகின் பல்வேறு பகுதிகளிலும் கச்சா உருக்கு உற்பத்தி குறைந்துள்ளது. ஆனால் ஆசியாவில் மட்டும் உற்பத்தி அதிகரித்துள்ளது. சீனாவின் கச்சா உருக்கு உற்பத்தி 4.6 சதவீதம் உயர்ந்துள்ளது. ஜப்பானில் உற்பத்தி 0.9 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. எனினும் தென் கொரியாவில் மட்டும் உற்பத்தி 5.4 சதவீதம் சரிவடைந்து 55 லட்சம் டன் என்ற அளவில் உள்ளது. ஐரோப்பிய யூனியனில் உள்ள 27 நாடுகளில் கச்சா உருக்கு உற்பத்தி ஒட்டுமொத்த அளவில் 5.1 சதவீதம் குறைந்துள்ளது. வட மற்றும் தென் அமெரிக்காவில் உற்பத்தி முறையே 5.8 சதவீதம் மற்றும் 4.6 சதவீதம் சரிந்துள்ளது. காமன்வெல்த் குடியரசு நாடுகளில் உற்பத்தி 3 சதவீதம் குறைந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|