பதிவு செய்த நாள்
21 செப்2014
02:10
மும்பை:நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாத காலத்தில், நாட்டின் நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி, நிகர அளவில், 3.62 சதவீதம் வளர்ச்சி கண்டு, 85,656 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் (ஜி.ஜே.இ.பி.சி.,) தற்காலிக புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாலர் மதிப்பு:கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், இவற்றின் ஏற்றுமதி, 82,666 கோடி ரூபாயாக இருந்தது.அதேசமயம், டாலர் மதிப்பின் அடிப்படையில், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி, கணக்கீட்டு காலத்தில், 0.25 சதவீதம் மட்டுமே வளர்ச்சி கண்டு, 1,422 கோடி டாலரிலிருந்து, 1,426 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
மதிப்பீட்டு ஐந்து மாத காலத்தில், நறுக்கப்பட்ட மற்றும் பட்டை தீட்டப்பட்ட வைரங்கள் ஏற்றுமதி, 9.97 சதவீதம் சரிவடைந்து, 62,871 கோடியிலிருந்து, 56,603 கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது. மேலும், இவற்றின் ஏற்றுமதி அளவின் அடிப்படையிலும், 161 லட்சம் காரட்டிலிருந்து, 145 லட்சம் காரட்டாக குறைந்துள்ளது.
அதேசமயம், தங்க ஆபரணங்கள் ஏற்றுமதி, 21.36 சதவீதம் அதிகரித்து, 17,488 கோடியிலிருந்து, 21,223 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது.நாணயங்கள்:இருப்பினும், கணக்கீட்டு காலத்தில், தங்க பதக்கங்கள் மற்றும் நாணயங்கள் ஏற்றுமதி, 0.17 சதவீதம் குறைந்து, 6,070 கோடியிலிருந்து, 6,060 கோடி ரூபாயாக சற்று சரிவை சந்தித்துள்ளது.
இதே போன்று, நவரத்தினங்கள் ஏற்றுமதியும், 42.48 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 1,632 கோடியிலிருந்து, 938 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.மதிப்பீட்டு காலத்தில், வெள்ளி ஆபரணங்கள் ஏற்றுமதி, 26.62 சதவீதம் வளர்ச்சி கண்டு, 3,758 கோடியிலிருந்து, 4,759 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
மேற்கண்டவை தவிர, முத்துகள் மற்றும் செயற்கை கற்கள் ஏற்றுமதி முறையே, 4 கோடி மற்றும் 151 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளன.கச்சா வைரம்:அதேசமயம், கணக்கீட்டு காலத்தில், கச்சா வைரங்கள் ஏற்றுமதி, 7.07 சதவீதம் பின்னடைவை கண்டு, 3,979 கோடியிலிருந்து, 3,698 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.
மேலும், அளவின் அடிப்படையிலான இவற்றின் ஏற்றுமதியும், 38.22 சதவீதம் குறைந்து, 220 லட்சம் காரட்டிலிருந்து, 136 லட்சம் காரட்டாக வீழ்ச்சி கண்டுள்ளது என, ஜி.ஜே.இ.பி.சி., புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|