பதிவு செய்த நாள்
25 அக்2014
00:06

மும்பை:பண்டிகை காலத்தையொட்டி, கட்டுமான நிறுவனங்கள் சலுகைகளை வாரி வழங்கிய நிலையிலும், வீடுகள் விற்பனை சூடுபிடிக்கவில்லை. மொத்தத்தில், இந்த பண்டிகை காலம், ரியல் எஸ்டேட் துறைக்கு மகிழ்ச்சிகரமானதாக அமையவில்லை என, இத்துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து, இந்தியா புராப்பர்டி டாட் காம் தலைமை செயல் அதிகாரி, கணேஷ் வாசுதேவன் கூறியதாவது:
இலவசங்கள்:பண்டிகை காலம் என்பது, ரியல் எஸ்டேட் துறைக்கு மிக முக்கியமான தருணமாகும். சாதராண நாட்களுடன் ஒப்பிடும் போது, பண்டிகை காலத்தில், வீடுகள் விற்பனை, 20 – 25 சதவீதம் அதிகமாக இருக்கும். கட்டுமான நிறுவனங்களும், விற்பயை அதிகரிக்க ஏதுவாக, இலவசங்கள் மற்றும் சலுகைகளை வாரி வழங்கும். கடந்த சில காலாண்டுகளுடன் ஒப்பிடும் போது, சொத்து வாங்குவோர் எண்ணிக்கை, தற்போது அதிகரித்துள்ளது. வீடுகள் வாங்குவது குறித்த விசாரணை அழைப்புகள் அதிகம் வந்தது. என்றாலும், உண்மையில், வீடு வாங்குவோர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
இதற்கு, வாடிக்கையாளர்கள், தகுந்த சந்தர்ப்பம் மற்றும் இன்னும் பிற சலுகைகளை எதிர்பார்த்து காத்திருப்பதே, முக்கிய காரணம்.குறிப்பாக, பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், மத்திய அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதனால், அடுத்த 2 – 3 காலாண்டுகளில், வீட்டுவசதி கடனுக்கான வட்டி விகிதம் குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி குறையும் நிலையில், வரும் 2015ம் ஆண்டின், இரண்டாவது அல்லது மூன்றாவது காலாண்டுகளில், வீடுகள் விற்பனை சூடுபிடிக்க அதிக வாய்ப்புள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
பொருளாதார காரணி:ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சிக்கு ஆதரவான, அரசின் சலுகை திட்ட அறிவிப்பு மற்றும் அதை செயல்படுத்தலில் காணப்படும் காலதாமதம் உள்ளிட்ட, பல்வேறு பொருளாதார காரணிகளால், தேவை உள்ள போதிலும், வாடிக்கையாளர்கள் வீடுகள் வாங்குவதை, தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளனர் என, ஜோன்ஸ் லாங் லசல்லே இந்தியா நிறுவனத்தின் தலைவர், அனுஜ் பூரி தெரிவித்தார்.பொதுவாக பண்டிகை காலத்தில், ரியல் எஸ்டேட் துறை நிறுவனங்கள், புதிய கட்டுமான திட்டங்களை அறிமுகம் செய்வதோடு, வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் வகையில், பல்வேறு கவர்சிகர சலுகைகளை அறிவிக்கும்.
புதிய கட்டுமானம்:கடந்த சில காலாண்டுகளாக, வீடுகள் விற்பனை மந்தமடைந்துள்ளதால், புதிய கட்டுமான அறிவிப்புகள் வெகுவாக குறைந்து போயுள்ளது.தற்போதைய நிலையில், கட்டுமான நிறுவனங்களின் கவனம் முழுவதும், கையிருப்பில் உள்ள வீடுகளை, விற்பனை செய்வதிலேயே உள்ளது.இதற்காக, வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க, தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை, நிறுவனங்கள் அள்ளி இறைத்து வருகின்றன என, சம்ருதி ரியாலிட்டி தலைமை செயல் அதிகாரி, மதுசூதன் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|