பதிவு செய்த நாள்
12 நவ2014
02:06

புதுடில்லி: நடப்பு 2014–15ம் சந்தைப்படுத்தும் பருவத்தில், இதுவரையில், மத்திய அரசின் முகமை அமைப்புகளின் நெல் கொள்முதல், 8 சதவீதம் சரிவடைந்து, 92 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.இது, கடந்தாண்டு இதே காலத்தில், 1 கோடி டன்னாக அதிகரித்து காணப்பட்டது.
கோதுமை:மத்திய அரசின் சார்பில், இந்திய உணவு கழகம் (எப்.சி.ஐ.,) மற்றும் மாநில முகமை அமைப்புகள், அரிசி மற்றும் கோதுமையை விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் (எம்.எஸ்.பி.,) செய்கின்றன.
நெல் சந்தை பருவம் என்பது, அக்டோபர் முதல் செப்டம்பர் வரையில் கணக்கிடப்படுகிறது.நடப்பாண்டில், 3 கோடி டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தற்போது, பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் இருந்து அதிகளவில் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அறுவடை துவங்கியவுடன், இதர மாநிலங்களிலும் கொள்முதல் நடவடிக்கைகள் விறுவிறுப்படையும் என, இந்திய உணவு கழகத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அரியானாநடப்பு சந்தைப் பருவத்தில் இதுவரையில், பஞ்சாபிலிருந்து, 72.30 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது, கடந்தாண்டில், 74.90 லட்சம் டன்னாக அதிகரித்து காணப்பட்டது.அரியானா மாநிலத்திலும் நெல் கொள்முதல், 25 லட்சம் டன்னிலிருந்து, 18.70 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.இதேபோன்று, சண்டிகரிலும், இதன் கொள்முதல், 11 ஆயிரம் டன்னிலிருந்து, 10 ஆயிரம் டன்னாக சரிவடைந்துஉள்ளது.அதேசமயம், உத்தரபிரதேசத்தில் நெல் கொள்முதல், 15 ஆயிரம் டன்னிலிருந்து, 18 ஆயிரம் டன்னாக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில், நெல் கொள்முதல் சுணக்கமாகவே உள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக, கடந்தாண்டின் இதே காலத்தில்,42ஆயிரம் டன்னாக அதிகரித்து காணப்பட்ட இதன்கொள்முதல், தற்போது, வெறும் 2,500 டன்னாக சுருங்கியுள்ளது.
தென் மாநிலங்கள்அடுத்த 10 நாட்களில்,பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில், கொள்முதல் நடவடிக்கைகள் நிறைவு பெற உள்ளன. இதைத் தொடர்ந்து, தென் மற்றும் மேற்கு மாநிலங்களில், நெல் கொள்முதல் விரைவில் துவங்க உள்ளது என, அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு, கரீப் பருவத்தில், 3.20 கோடி டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், 2.66 கோடி டன் மட்டுமே எட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|