பதிவு செய்த நாள்
15 ஜன2015
10:34

புதுடில்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, ஆறு ஆண்டுகளில் இல்லாத வகையில், ஒரு பீப்பாய், 45 டாலராக (2,700 ரூபாய்) வீழ்ச்சி அடைந்துள்ளதால், உள்நாட்டில், பெட்ரோல், டீசல் விலை குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக, இன்றோ அல்லது நாளையோ, பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படலாம்.
கடந்த ஆண்டு, ஜூன் மாதத்தில், ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை, 115 டாலராக (6,900 ரூபாய்) இருந்தது. இது, படிப்படியாக குறைந்து, தற்போது, 45 டாலராக (2,700 ரூபாய்) வீழ்ச்சி கண்டுள்ளது. இது, ஆறு ஆண்டுகளில் இல்லாத விலை குறைவாகும். இதனால், பொதுத் துறையை சேர்ந்த ஐ.ஓ.சி., உட்பட, மூன்று எண்ணெய் நிறுவனங்களுக்கு, கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு கணிசமாக குறைந்துள்ளது. ஆனாலும், இந்த நிறுவனங்கள், கடந்த ஆறு மாதங்களில், கச்சா எண்ணெயை கொள்முதல் செய்து இருப்பு வைத்த வகையில், இழப்பை சந்தித்துள்ளதால், பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் உள்ளன. உதாரணமாக, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், கச்சா எண்ணெய்க்கு ஆர்டர் கொடுத்த, 30 முதல் 40 நாட்களுக்கு பின்னரே, அதை பெறுகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில், கச்சா எண்ணெய் விலை, 20 சதவீதத்திற்கும் மேலாக குறைந்துள்ளது. அதனால், அந்நிறுவனத்திற்கு, 12 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டள்ளதாக, அந்த நிறுவனத்தின் அதிகாரிகள், தெரிவித்து உள்ளனர். இந்த காரணங்களால் தான், உடனடியாக பெட் ரோல், டீசல் விலையை குறைக்க முடியாத நிலை உள்ளது என்றும், அவர்கள் மேலும் கூறினர்.
இது தொடர்பாக, அதிகாரி ஒருவர் கூறியதாவது: கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியின் பயன், நுகர்வோரை சென்றடைய வேண் டும் என்ற நோக்கத்தில் தான், பெட்ரோல், டீசல் மீதான விலைக் கட்டுப்பாட்டை, மத்திய அரசு நீக்கியது. ஆனாலும், எண்ணெய் நிறுவனங்கள் கூட்டணி அமைத்துக் கொண்டு, பெட்ரோல், டீசல் விலையை குறிப்பிடத்தக்க அளவிற்கு குறைக்கவில்லை. இதற்கிடையில், பெட் ரோல், டீசல் மீதான கலால் வரியை, கடந்த ஆண்டு மத்திய அரசு இருமுறை உயர்த்தியது. இந்தாண்டு, ஜன., 1ம் தேதி, மீண்டும் லிட்டருக்கு, இரண்டு ரூபாய் வீதம் உயர்த்தியது. இருப்பினும், கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, தற்போது, கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்த அறிவிப்பு, எந்த நேரத்திலும் வெளியாகலாம். அனேகமாக, இன்று வெளியானாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இவ்வாறு, அவர் கூறினார்.
பீப்பாய் 30 டாலராக வீழ்ச்சி அடையும்: கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்தாலும், வளைகுடா நாடுகளில் இருந்து, கச்சா எண்ணெய் சப்ளை செய்யப்படுவது, இதுவரை குறையவில்லை. லிபியாவில் உள்நாட்டுப் பிரச்னை காரணமாக, மூடப்பட்ட எண்ணெய் வயல்களில், மீண்டும் உற்பத்தி துவங்கி உள்ளது. ஐரோப்பிய நாடுகள் சில, நுகர்வை குறைத்து உள்ளதால், சந்தையில் சப்ளை அதிகரிக்குமே அன்றி குறையாது. மேலும், விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்த, கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க வேண்டும் என, சவுதி அரேபியாவை, ஈரான் மற்றும் வெனிசூலா போன்ற நாடுகள் கேட்டுக் கொண்டும், அந்த நாடு அதை காதில் வாங்கவில்லை. அதனால், வரும் நாட்களில், கச்சா எண்ணெய் விலை, பீப்பாய் 30 டாலர் (1,800 ரூபாய்) அளவுக்கு வீழ்ச்சி அடைந்தாலும் ஆச்சரியமில்லை.
பணவீக்கம் மேலும் குறையும்; பொருளாதாரம் மேம்படும்: கடந்த ஆகஸ்டில் இருந்த பெட்ரோல் விலையை ஒப்பிடுகையில், தற்போது, 12.27 ரூபாய் விலை குறைவாக உள்ளது. அதேபோல், அக்டோபர் டீசல் விலையை ஒப்பிடுகையில், தற்போது, 8.46 ரூபாய் குறைவாக உள்ளது. பெட்ரோல், டீசல் மீதான விலை குறைப்பு இன்று அமலானால், தற்போதைய விலையானது மேலும் குறையும். கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால், பணவீக்கமும் வீழ்ச்சி அடையும். கடந்த ஆண்டில், 16 ஆயிரம் கோடி டாலர் (9.60 லட்சம் கோடி ரூபாய்) மதிப்புக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது.
இந்த ஆண்டில், கச்சா எண்ணெய் இறக்குமதி செலவானது, 10 ஆயிரம் முதல், 11 ஆயிரம் கோடி டாலராக ( 6.60 லட்சம் கோடி ரூபாய்) குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய்க்கு, மத்திய அரசு வழங்கும் மானியமும் குறைவதோடு, பட்ஜெட் பற்றாக்குறையும் வீழ்ச்சி அடையும். வருவாயை பெருக்க, வரிகள் உயர்த்தப்படுவது தவிர்க்கப்படும். வரும் நாட்களில், கச்சா எண்ணெய் விலை மேலும் குறைந்தால், அதனால் இந்திய பொருளாதாரத்திற்கு, மேலும் சாதகமான நிலைமையே உருவாகும் என, நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|