பதிவு செய்த நாள்
13 ஆக2016
07:07

மும்பை : ‘அடுத்த ஆண்டு அறிமுகமாக உள்ள, சரக்கு மற்றும் சேவை வரியால், பருத்தி சார்ந்த ஜவுளித் துறை பாதிக்க வாய்ப்புள்ளது’ என, தர நிர்ணய நிறுவனமான, ‘இக்ரா’ தெரிவித்துள்ளது.
வரும், 2017–18ம் நிதியாண்டு, ஏப்ரல் முதல், ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் அமலாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நடைமுறையில் உள்ள, பல்வேறு மறைமுக வரிகளை ஒழித்து, ஒரே சீரான வரி விதிப்பிற்கு, சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் உதவும். இச்சட்டத்தின் கீழ், பல்வேறு துறைகளுக்கு விதிக்க வேண்டிய வரி விகிதம் குறித்து, தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் தலைமையிலான குழு, மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. அதில், ஜவுளித் துறைக்கு தற்போது விதிக்கப்படும், 12.5 சதவீத கலால் வரியை, 12 சதவீதமாக குறைத்து நிர்ணயிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மேலெழுந்தவாரியாக, வரி குறைப்பு போல தோன்றினாலும், இதனால், பருத்தி மற்றும் அதுசார்ந்த ஜவுளித் துறை பாதிக்க வாய்ப்பு உள்ளது.
செயற்கை நுாலிழை ஜவுளிகளுக்கு, 12.5 சதவீதம் கலால் வரி விதிக்கப்படுகிறது. இத்துறை சார்ந்த நிறுவனங்கள், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களில், மூலப்பொருட்களுக்கு செலுத்திய வரியை, திரும்பப் பெறுகின்றன. பருத்திக்கு, மத்திய கலால் வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதனால், பருத்தியை பயன்படுத்தும் பெரும்பான்மையான நுாற்பாலைகள், மூலப் பொருட்களுக்கு செலுத்திய வரியை திரும்பப் பெறும் திட்டத்தை தேர்வு செய்வதை தவிர்த்து, உற்பத்தி அடிப்படையில், 1 சதவீத கலால் வரியை செலுத்தி வருகின்றன.
இத்தகைய சூழலில், ஜவுளித் துறைக்கு, 12 சதவீதம் சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்பட்டால், பருத்தி சார்ந்த ஜவுளித் துறையினர் பாதிக்கப்படுவர் என, இக்ரா தெரிவித்துள்ளது. அதேசமயம், சரக்கு மற்றும் சேவை வரியால், அமைப்பு சார்ந்த ஜவுளித் துறை, மேலும் வலுப்பெறும். இவ்வரி விதிப்பு, ஜவுளித் துறையில், அமைப்பு சாராமல் இயங்கும் நிறுவனங்கள், போட்டியை சமாளிக்க முடியாமல், அமைப்பு ரீதியாக இணைவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தரும் என, இக்ரா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘அரவிந்த் சுப்ரமணியன் அளித்த பரிந்துரைகளை, மத்திய அரசு அமைக்க உள்ள, சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு கண்காணிப்பு குழு அப்படியே ஏற்கும் என, கூற முடியாது. அதனால், பருத்தி சார்ந்த ஜவுளித் துறைக்கு பாதிப்பு ஏற்படும் என, தற்போது கூறுவது சரியாக இருக்காது’ என, ஜவுளித் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|