பதிவு செய்த நாள்
24 ஜன2017
23:59

மும்பை : ‘மத்திய அரசின், பண மதிப்பு நீக்க நடவடிக்கையால், தங்க நகைகளின் சில்லரை விற்பனையில், பெரிய நிறுவனங்களின் பங்களிப்பு, 40 சதவீதமாக உயரும்’ என, உலக தங்க கவுன்சில் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதன் விபரம்: உலகின் இரண்டாவது மிகப்பெரிய தங்க நகை சந்தையாக, இந்தியா திகழ்கிறது. நகை வியாபாரத்தில், 4 லட்சத்திற்கும் அதிகமானோர் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் பெரும்பான்மையானோர், தங்க நகைகளை ரொக்கத்தில் தான் விற்பனை செய்கின்றனர். தங்க நகை விற்பனையில், 70 சதவீதம் ரொக்கத்தில் தான் நடைபெறுகிறது.
வெளிப்படை தன்மை:சில்லரை வியாபாரிகள், அரசுக்கு வரி செலுத்துவதை தவிர்க்க, ரசீது இல்லாமல் நகைகளை விற்கின்றனர். பணக்காரர்கள், வருமான வரித்துறைக்கு கணக்கு காட்டாமல் வைத்துள்ள பணத்தில், ரசீது இன்றி நகைகளை வாங்குகின்றனர்.இந்நிலையில், தங்கம் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள, 10 சதவீத சுங்க வரி காரணமாக, சில ஆண்டுகளாக, இந்தியாவுக்கு தங்கம் கடத்துவதும் அதிகரித்து உள்ளது. கடந்த ஆண்டு, கடத்தல்காரர்கள், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையில், 100 டாலர் வரை குறைத்து விற்பனை செய்தனர். இதனால், தங்கம் இறக்குமதி செய்யும் நகை நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன.
இத்தகைய சூழலில் தான், பிரதமர் மோடி, கறுப்புப் பணத்தை கட்டுப்படுத்தவும், கள்ள நோட்டு புழக்கத்தை ஒழிக்கவும், பண மதிப்பு நீக்க நடவடிக்கையை, 2016, நவ., 8ல் அறிவித்தார்.இதன் விளைவாக, பணத் தட்டுப்பாடு ஏற்பட்டு, மின்னணு பணப் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளன. இத்தகைய ரொக்கமில்லா பரிவர்த்தனைகள் பெருகும் போது, கள்ளச் சந்தையில் தங்கம் விற்பனை செய்வது பெருமளவு குறைந்து விடும்.இதனால், ஆபரணங்கள் துறை மட்டுமின்றி, நகை வாங்குவோரும் பயன் பெறுவர்.தங்க நகை வர்த்தகத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை. இதுவே, இத்துறையின் உண்மையான வளர்ச்சிக்கும் தடையாக உள்ளது.
பிராண்டு நகைகள்:பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் தாக்கத்தால், தற்போது, காசோலை, ‘இ – வாலட், கிரெடிட், டெபிட்’ கார்டுகள் போன்றவை வாயிலாக நகை வாங்குவது அதிகரித்துள்ளது.இளைய தலைமுறையினரிடம், ‘பிராண்டு’ தங்க நகைகளுக்கு வரவேற்பு பெருகி வருகிறது. இதனால், டைட்டன், பி.சி.ஜூவல்லர், கீதாஞ்சலி ஜெம்ஸ் போன்ற, அமைப்பு சார்ந்த நிறுவனங்களின், சந்தை பங்களிப்பு, 2015ல், 30 சதவீதமாக உயர்ந்துள்ளது; இது, 2020ல், 40 சதவீதமாக உயரும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.தங்க நகை விற்பனையில், வெளிப்படைத் தன்மை அதிகரித்து வருவது, பிராண்டு நகைகளுக்கு பெருகி வரும் வரவேற்பு, மின்னணு பணப் பரிவர்த்தனை ஆகியவை, இந்த வளர்ச்சிக்கு துணை புரியும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|