பதிவு செய்த நாள்
01 ஏப்2017
03:44

புதுடில்லி : ‘அடிப்படை கட்டமைப்பு வசதி திட்டங்களில் விறுவிறுப்பு கூடியுள்ளதால், நடப்பு நிதியாண்டில், சிமென்டிற்கான தேவை, 4 – 5சதவீதம் உயரும்’ என, தர நிர்ணய நிறுவனமான, ‘இக்ரா ரேட்டிங்ஸ்’ தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசு, 2016 நவ., 8ல், உயர் மதிப்பு கரன்சிகள் செல்லாது என, அறிவித்தது. இது, ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான துறைகளில், எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, நவ., முதல், இந்தாண்டு ஜன., வரை, சிமென்ட் விற்பனை, 8 சதவீதம் குறைந்தது. அதனால், 2016 – 17ம் நிதியாண்டில், சிமென்ட் துறையின் வளர்ச்சி, ஏற்ற, இறக்கமின்றி இருக்கும் என, தெரிகிறது. தற்போது, பணத் தட்டுப்பாடு நீங்கிஉள்ளதால், நடப்பு, 2017 – 18ம் நிதியாண்டின், ஏப்., – ஜூன் வரையிலான முதல் காலாண்டில், ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான துறைகள், இயல்பு நிலைக்கு திரும்பும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கேற்ப, நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில், சாலை, ரயில், மெட்ரோ ரயில், நீர்ப்பாசனம், வீட்டுவசதி உள்ளிட்ட, அடிப்படை கட்டமைப்பு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதனால், குறிப்பாக, சாலை, நீர்ப்பாசனம், வீட்டுவசதி உள்ளிட்ட, அடிப்படை கட்டமைப்பு பணிகளில் விறுவிறுப்பு ஏற்படும். அத்துடன், கிராமப்புற முன்னேற்ற திட்டங்கள், வேளாண் மற்றும் அது சார்ந்த துறைகளுக்கான நிதி ஒதுக்கீடும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, சிமென்ட்டிற்கான தேவை உயரும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
அதே சமயம், எரிபொருள், போக்கு வரத்து உள்ளிட்டவற்றுக்கான செலவினம் அதிகரித்துள்ளதால், வரும் காலாண்டுகளில், சிமென்ட் நிறுவனங்களின் லாப வரம்பு குறைய வாய்ப்புள்ளது.கடந்த நிதியாண்டில், டிச., வரையிலான காலத்தில், டீசல் விலை, 12 சதவீதம் உயர்ந்துள்ளது; இது, இந்தாண்டு, ஜனவரி மற்றும் பிப்ரவரியில், முறையே, 28 சதவீதம் மற்றும் 32 சதவீதம் அதிகரித்துள்ளது.இதனால், சிமென்ட் நிறுவனங்களின் போக்குவரத்து செலவினம் அதிகரித்துள்ளது.
இத்துடன், நிலக்கரி விலையும் உயர்ந்துள்ளதால், சிமென்ட் நிறுவனங்களின் உற்பத்திச் செலவு உயர்ந்துஉள்ளது. இருந்த போதிலும், சிமென்ட்டிற்கான தேவை அதிகரிக்கும் என்பதால், அதன் உற்பத்தி பணிகள் விறுவிறுப்பாக நடைபெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வளர்ச்சியில் தொய்வுகடந்த, 2016 – 17ம் நிதியாண்டில், ஏப்., – ஜன., வரையிலான காலத்தில், சிமென்ட் உற்பத்தி, 1.1 சதவீதம் வளர்ச்சி கண்டு, 23.30 கோடி டன்னாக உள்ளது. இந்த வளர்ச்சி, 2015 – 16ம் நிதியாண்டின் இதே காலத்தில், 3.6 சதவீதமாக இருந்தது.– ‘இக்ரா ரேட்டிங்ஸ்’ நிறுவனம்
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|