பதிவு செய்த நாள்
06 ஜூலை2019
00:07

நாடே இந்த நாளுக்குத் தான் காத்திருந்தது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட், சர்வரோக நிவாரணியாக இருக்கும் என்பதே எதிர்பார்ப்பு. இரண்டு மணி நேரத்தில், நிதியமைச்சர் என்ன மாயம் நிகழ்த்தினார்?
சட்டென்று முதலில் கவனத்தைக் கவர்ந்தது, மின்சார வாகனங்களை வாங்குபவர்களுக்கு, வருமான வரியில் வழங்கப்பட்டுள்ள சலுகை தான். உலகெங்கும் இனிமேல் மின்சார வாகனங்கள் தான் கோலோச்சப் போகின்றன.
நிலத்தடி எரிபொருட்களின் அளவு குறைந்து வரும் வேளையில், மின்சார வாகனங்களை நோக்கி நகர்ந்து தான் ஆக வேண்டும்.அதுவும், நாம், நம் எரிபொருள் தேவைக்காக, வெளிநாடுகளில் இருந்து கிட்டத்தட்ட, 70 சதவீதத்துக்கு மேல், கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறோம். இது, நம் பொருளாதாரத்தில் பெரும் ஓட்டையைப் போட்டு வருகிறது; தேவை இன்னும் அதிகரித்து வருகிறது.
நல்ல பலன்
இந்நிலையில், பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக இருக்கும், மின்சார வாகனங் களுக்கு, இந்திய மக்களிடம் போதிய ஆதரவு கிடைக்கவில்லை. இந்தச் சூழ்நிலையில், வருமான வரியில் கூடுதல் சலுகை என்ற ஒரு கூக்ளியைப் போட்டு, மக்களை அசர அடித்திருக்கிறார் நிர்மலா.எப்படி அடுக்ககங்களை வங்கிக் கடனில் வாங்கினால், அதன் வட்டிக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறதோ, அதுபோல், மின்சார வாகனத்தை கடனில் வாங்கினால், அதன் வட்டிக்கு, வருமான வரி விலக்கு அளிக்கப்படும்; அதுவும், 1.5 லட்சம் ரூபாய் வரை. மேலும், மின்சார வாகனங்களுக்கான, ஜி.எஸ்.டி.,யும் குறைக்கப்பட்டிருக்கிறது. நிச்சயம், இது நல்ல பலன் தரக்கூடிய திட்டம்.
வரிச்சலுகை
இரண்டாவது, புதிதாக துவங்கப்படும் புதுமை நிறுவனங்களை, ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் என்று சொல்வர். இவற்றில் முதலீடு செய்பவர்கள் கிடைப்பது மிகப்பெரிய கஷ்டம். ஆனால், அத்தகைய முதலீடுகளுக்கு, ‘ஏஞ்சல் வரி’ என்றொரு வரியை அரசு விதிக்கிறது. உண்மையில், இளைஞர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதற்கு, ஏஞ்சல் வரி ஒரு பெரிய இடராக இருந்தது.
‘இந்த பட்ஜெட்டில், ஏஞ்சல் வரி நீக்கப்பட்டுள்ளது மிகப்பெரிய நிம்மதி. இதனால், சொந்தமாக பல புதுமைகளை செய்யத் துடிக்கும் இளைஞர்களுக்கு, முதலீட்டைப் பெறுவது சிரமமாக இராது.சகாய விலை வீடுகளுக்கான வங்கிக் கடனுக்கு வழங்கப்பட்டுள்ள, கூடுதல், 1.5 லட்ச ரூபாய் வரிச்சலுகை, இன்னொரு கவனிக்கத்தக்க அம்சம். பலர் புதிய மனைப் பிரிவுகளில் இடம் வாங்குவதற்கு தயங்குவதற்குக் காரணம், அதன் விலை தான்.
அடிமனை மற்றும் கட்டுமான விலைகள் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில்,அரசு வழங்கும் கூடுதல் வரிச் சலுகை நிச்சயம் வரவேற்கப்படும். இதனால், மீண்டும் கட்டுமானத் துறையும், அதன் மூலம் வேலைவாய்ப்புகளும் பெருகுவதற்கு வாய்ப்பு உண்டு.விற்றுமுதல், 250 கோடி ரூபாய் வரை உள்ள நிறுவனங்களுக்கு, விதிக்கப்பட்டு வந்த கார்ப்பரேட் வரியான, 25 சதவீதம் தற்போது, 400 கோடி ரூபாய் வரை வியாபாரம் செய்பவர்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதிலேயே, 99.33 சதவீத நிறுவனங்கள் அடங்கிவிடும் என்றார் நிர்மலா. அதாவது, பெரும் பாலான நிறுவனங்கள், இந்தச் சலுகையை அனுபவிக்கப் போகின்றன.கொள்கை அடிப்படை யிலான சில முடிவுகளும் நம் கவனத்தைக் கவர்ந்தன.
தன்னார்வ அமைப்பு
அதில் குறிப்பானது, சமூகத்துக்குப் பங்களிப்பு செய்து வரும் நிறுவனங்களும், தன்னார்வ அமைப்பு களும், தங்கள் பணிகளுக்குத் தேவையான மூலதனத்தை, பங்குச் சந்தைகளிலோ, கடன் சந்தைகளிலோ, மியூச்சுவல் பண்டுகளிலோ திரட்டிக் கொள்ளலாம் என்று அனுமதிக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு உண்மையிலேயே தொண்டாற்றி வரும் நிறுவனங்களுக்கு, இத்தகைய ஒரு வாசல் திறந்து விடப்பட்டுள்ளது, அவர்கள் தங்கள் பணிகளை மேலும் செழுமைப்படுத்திக் கொள்ள உதவும்.மகாத்மா காந்தி பற்றி அத்தனை விபரங்களையும் திரட்டியளிக்கும், ‘காந்தி பீடியா’ சிறந்த முயற்சி என்றால், விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் வழங்கும் சேவைகள், கண்டுபிடித்துள்ள தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை வர்த்தகமயமாக்கும் யோசனையும் பெரும் பலனைத் தரும்.
தேசிய ஆய்வு நிதி என்பது, பல்வேறு ஆய்வுகளில் ஈடுபடுவோருக்குக் கிடைத்திருக்கும் வரப்பிரசாதம். இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ், மெஷின் லேர்னிங் போன்ற துறைகளில் திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதும் வரவேற்புக்குரியது.எல்லாமே நல்லதாகவே சொல்லிக் கொண்டு வருகிறீர்களே? விமர்சிக்க ஒன்றுமே இல்லையா என்கிறீர்களா? ஏன் இல்லை?
ரூ.2.10 லட்சம் கோடி
முதலில், பட்ஜெட் என்றாலே வரவு எவ்வளவு, செலவு எவ்வளவு, எந்தெந்தத் துறைகளுக்கு எவ்வளவு ஒதுக்கீடு செய்யப் பட்டு உள்ளன, சென்ற முறை ஒதுக்கப்பட்ட தொகையில் எவ்வளவு செலவாகியுள்ளது என்றெல்லாம் சொல்லப்படுவது தான்.
முதல்முறையாக, நிதி அமைச்சர், ‘அந்த விபரங்கள் எல்லாம் இணைப்பில் வழங்கப்பட்டு இருக்கிறது, பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று கடந்து போய்விட்டார்.எத்தனை பேர் அந்த இணைப்பைப் போய் பார்க்கப் போகின்றனர்? அதை வெளிப்படையாகச் சொன்னால் தானே, பொதுமக்களுக்கு நேரடியாக செய்தி போய் சேரும்?
வங்கிகளுக்கு, 70 ஆயிரம்கோடி ரூபாய் மூலதன முதலீடு வழங்கப்படும் என்று தெரிவித்து உள்ளார் நிதி அமைச்சர். சென்ற முறை, 2.10 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்ததே... அது வழங்கப்பட்டதா? அதனால், வங்கித் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் என்ன? இந்தக் கேள்விகளுக்குப் பதில் இல்லை.
இந்த பட்ஜெட்டில் அபாயகரமாகத் தோன்றும் விஷயம், அன்னிய நாடுகளில் இருந்து, அன்னிய நாணயங்களில் கடன் வாங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருப்பதே. இந்தப் பணத்தை நாம் செலவழிக்க இருப்பது இந்திய ரூபாயில். அதற்கு, நம்முடைய ரூபாயில் தான் கடன் வாங்க வேண்டும்? மன்மோகன் சிங் காலத்தில்இருந்து, ரூபாயில் தான் கடன் பெறப்பட்டு வருகிறது.
அன்னிய நாணயம் என்றால், அதன் விலை ஏற்ற, இறக்கங்கள், இன்ன பிற பிரச்னைகள் எல்லாம் கூடவே வருமே? அதை எப்படிச் சமாளிப்பீர்கள்?பெட்ரோல், டீசல் மீது எதற்கு கூடுதல் கலால் வரி? கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தால், அதன் பயனை மக்களுக்கு வழங்க வேண்டியது தானே?பணக்காரர்கள் மீது வரி போடுவது, புரட்சிகரமான திட்டமா என்ன? 2 கோடி முதல், 5 கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு, 3 சதவீதமும்; 5 கோடிக்கு மேல் சம்பாதிப்பவர்களுக்கு, 7 சதவீதமும் வரி விதிக்கப்பட்டுள்ளது.
உண்மையில் இவர்கள் முறையே, 39 சதவீதமும், 42.7 சதவீதமும் வரி செலுத்தப் போகின்றனர். மலை மேல் மழை பொழிந்தால், அது அங்கேயே நிற்குமா என்ன? சமதளத்தை நோக்கித் தானே ஓடிவரும்.அதுபோல், பணக்காரர்கள் மீது வரி போட்டால், அது அவர்கள் சார்ந்திருக்கும் நிறுவனங்கள் மீது விழும். அது, அவர்கள் தயாரித்து சந்தைப்படுத்தும் பொருட்களின் தலைமேல் விழும். கடைசியாக வாடிக்கையாளர்களாகிய நம் தோள் மீது தான் வந்து இறங்கும்.
இதேபோல், தங்கத்தின் மீதான வரியும் உயர்த்தப்பட்டுள்ளது. வரியை உயர்த்த உயர்த்த, தங்கம் கடத்தல் தான் அதிகமாகும். இதற்கு முன் நாம் கண்ட அனுபவம் இது தான். உண்மையில், இன்றைக்குத் தேங்கிப் போயிருக்கும் பொருளாதாரத்தைத் தட்டி எழுப்ப, மக்கள் கையில் பணம் தங்குவதற்கான வாய்ப்பை அரசு ஏற்படுத்திக் கொடுக்கும், அதன் மூலம், சுபிட்ச உணர்வு பெருகும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. பொன் வைக்க வேண்டிய இடத்தில் பூ வைத்திருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
ஆர்.வெங்கடேஷ்பத்திரிகையாளர்pattamvenkatesh@gmail.com
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|