புத்தம் புதிய எபிசோட்களுடன் யப் டிவியின் அதிரடி விலை குறைப்பு ஆபர்புத்தம் புதிய எபிசோட்களுடன் யப் டிவியின் அதிரடி விலை குறைப்பு ஆபர் ...  வரி சலுகை முதலீடு குழப்பத்திற்கு தீர்வு வரி சலுகை முதலீடு குழப்பத்திற்கு தீர்வு ...
கைகொடுக்கட்டும் கைப்பிடிச் சேமிப்புகள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜூன்
2020
23:51

நினைத்ததைவிட கொரோனாவின் பொருளாதாரப் பாதிப்பு அதிக காலம் நீடிக்கப் போகிறது. படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, தொழில்துறையும், வணிகமும் பெருகுவது ஒருபுறம் நிம்மதியை அளித்தாலும், இயல்புநிலை திரும்புவதற்கு இன்னும் எவ்வளவு காலம் ஆகுமோ? அதுவரை தனிப்பட்ட சேமிப்புகளும், திட்டமிடலுமே, எதிர்வரும் இடர்காலத்தைச் சமாளிக்க உதவும். என்னசெய்யலாம்?

ஏழை, எளியவர்கள் முற்றிலும் மத்திய – மாநில அரசாங்கங்களின் நிதியுதவி, ரேஷன் பொருட்கள், தொழிலக முதலாளிகள் வழங்கும் நிவாரண உதவிகள் ஆகியவற்றை மட்டுமே நம்பியிருக்கும் சூழல் உருவாகிவிட்டது. ஊரடங்கு தளர்வுக் காலத்தில் கிடைக்கும் சிற்சில வேலைகள் மூலம், அமைப்புசாரா தொழிலாளர்கள் கொஞ்சம் வருவாய் ஈட்ட வாய்ப்புண்டு. இவர்களுடைய வெளிக்காயம் நாடறிந்தது என்றால், உள்காயத்தோடு வளையவருபவர்கள் மத்தியமர்கள் தான்.


‘கால் காசானாலும் கவர்மென்ட் காசு’ என்று சொன்னவர்கள் எப்பேர்ப்பட்ட தீர்க்கதரிசிகள்! இன்றைய சூழலிலும் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வங்கிப் பணியாளர்கள் ஆகிய அனைவருக்கும் சம்பளம் நிச்சயம். இந்த உத்தரவாதம் கூட இல்லாதவர்கள் தான் தனியார்த்துறை, சொந்தத் தொழில் அப்பாவிகள்!

முதலீடு

விதவிதமான பற்றாக்குறைச் சித்தரவதைகளுக்கு ஆட்பட்டு, திண்டாடிக் கொண்டு இருப்பவர்கள் இவர்கள்.இந்நிலையில், பொருளாதாரம் மீண்டும் தலைநிமிர்ந்து, இயல்பு நிலை திரும்புவதற்கு இன்னும் பல மாதங்கள் ஆகும் என்பது தான் யதார்த்தம். இந்நிலையில், இவர்கள் தங்கள் நிதியாதாரங்களை எப்படியெல்லாம் திட்டமிட்டுக் கொள்வது?முதலில் எதையெல்லாம் செய்யக்கூடாது என்பதைச் சொல்லி விடுவோம். வீட்டுக்கடன் வாங்கியிருந்தால், வங்கிகள் வழங்கும், இ.எம்.ஐ., ஒத்திவைப்பை, ஏற்றுக் கொள்ள வேண்டாம்.


வங்கிகள் போடும் கூட்டுவட்டியினால், நீங்கள் செலுத்தக்கூடிய மாதாந்திர தவணைக் காலம் கணிசமாக கூடுதலாகும். தேவையற்ற சுமை அது.கூட்டுவட்டி கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தால், அது வாடிக்கையாளர்கள் வயிற்றில் பாலை வார்த்தது போல் இருக்கும். மியூச்சுவல் பண்டுகள், மத்தியமர்கள் மத்தியில் கொஞ்சம் பாப்புலர். அதுவும், ‘சீரான முதலீட்டுத் திட்டம்’ எனப்படும் எஸ்.ஐ.பி., வழியாக, எண்ணற்றோர் பல்வேறு மியூச்சுவல் பண்டு திட்டங்களில், சின்னச் சின்னத் தொகைகளை மாதந்தோறும் முதலீடு செய்து வந்தனர்.


கொரோனா பாதிப்பு வந்தவுடன், பங்குச் சந்தை சார்ந்த பண்டுகள் ஒன்றும் பெரிய வருவாயை ஈட்டித் தரவில்லை என்ற முடிவுக்கு வந்து, எஸ்.ஐ.பி.,க்களை ரத்து செய்துவிடும் தவறான முடிவைப் பலர் எட்டியுள்ளனர். இதைச் செய்ய வேண்டாம்.இவர்களில் பலருடைய லாஜிக் இது தான். ஏற்கனவே தங்கள்சம்பளத்தில், 20 முதல், 30 சதவீதம் வரை வெட்டு ஏற்பட்டிருக்கிறது. இதில் எப்படி, எஸ்.ஐ.பி., செலுத்த முடியும்? உண்மை தான். ஆனால், வேறு கணக்குப் போட்டுப் பாருங்கள்.


உங்கள் அன்றாடப் பயணத்துக்கான பெட்ரோல் அல்லது பேருந்து செலவு மிச்சம், வெளியே போய்ச் சாப்பிடும் உணவக செலவு மிச்சம், சினிமா செலவு மிச்சம், இன்னும் உபரி மற்றும் ஆடம்பரச் செலவுகள் என்னென்ன உண்டோ, அவற்றுக்கெல்லாம் கொரோனா, ‘தடா’ போட்டு விட்டது. இந்தச் சேமிப்புகளை, எஸ்.ஐ.பி.,யில் போடுங்களேன். கொரோனா என்பது இன்னும் ஓராண்டு அல்லது ஈராண்டு பாதிப்பை ஏற்படுத்தலாம். ஆனால், அதற்குப் பிறகும் வாழ்நாள் உண்டு அல்லவா? அதற்குச் சேமிப்பு வேண்டுமே?


நல்ல மியூச்சுவல் பண்டு திட்டங்களின், என்.ஏ.வி.,கள் கணிசமாக குறைந்துள்ள இந்த நேரத்தில், செய்யப்படும், எஸ்.ஐ.பி.,யின் மூலம் கிடைக்கும் யூனிட்டுகளின் எண்ணிக்கையும் அதிகமாகவே இருக்கும். அதைத் தவற விடுவானேன்?

நல்ல வாய்ப்பு

பொதுத்துறை வங்கிகளில் மட்டுமே சேமிப்புகளை வைத்துக் கொள்ள வேண்டும், அது தான் பாதுகாப்பானது என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறீர்களா? அந்த எண்ணத்தை மறுபரிசீலனை செய்யவும்.


அரசுத் துறை வங்கிகள், வைப்புத் தொகைகளுக்குத் தரும் வட்டி, 5.16 சதவீதம் வரை மட்டுமே இருக்கிறது. இதை வைத்துக் கொண்டு ஒன்றுமே செய்ய முடியாது. குறைந்தபட்சம், 7.25 முதல், 8 சதவீத வட்டியாவது வேண்டும்.சிறு நிதி வங்கிகளும், தனியார் வங்கிகளும் இதற்கு நல்ல வாய்ப்பைத் தருகின்றன. அவர்கள் தங்களுடைய தொழிலை வளர்ப்பதற்கு நிதியாதாரம் தேவை. அதனால், கூடுதல் வட்டி கொடுத்து, வாடிக்கையாளர் களிடம் இருந்து முதலீட்டைப் பெறுகின்றனர்.


இந்த வங்கிகள் எல்லாம் வழக்கம்போல், ஆர்.பி.ஐ., கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றன. மேலும், இவற்றில் போட்ட பணம் நஷ்டமானால், 5 லட்சம் வரை காப்பீடும் இருக்கிறது. அதனால், சிறு நிதி வங்கிகளில், பணத்தைப் பரவலாகப் போட்டு வைப்பதில், பெரிய பாதிப்பு ஏற்பட்டுவிடாது.

முதலீட்டு நோக்கத்தோடு, தங்கத்துக்கு அருகே இப்போது போய்விடாதீர்கள். ஏற்கனவே தங்கத்தின் விலை இந்த ஆண்டு மட்டும், 23 சதவீதம் உயர்ந்துவிட்டது.அது பணத்தின் மதிப்பு கரையாமல் காப்பாற்றுமே தவிர, வளர உதவாது. இன்றைய தேதியில், கையில் இருக்கும் பணத்தை எப்படி இன்னும் கூடுத லாக உழைக்க வைத்து, லாபம் ஈட்டுவது என்று யோசிப்பதே, சரியான அணுகுமுறை.

தவிர்க்க வேண்டும்

உங்களுக்கு உண்மையிலேயே வாழ்வதற்கு புது வீடு வேண்டும் என்றால் மட்டும், ரியல் எஸ்டேட் பக்கம் போங்கள். அதை ஒரு முதலீடாக இனி எப்போதுமே கருத வேண்டாம். ஒருசில புத்திசாலித்தனமான அணுகுமுறைகளையும் இந்தக் காலத்தில் மேற்கொள்ள வேண்டும்.அதாவது, இக்காலக்கட்டத்தில் தனிநபர் கடன் வாங்குவதை நிச்சயம் தவிர்க்க வேண்டும். வேறு வழியே இல்லை; அவசர, அவசிய செலவுகள் வந்துவிட்டன. என்ன செய்வது? பணம் வேண்டுமே என்பவர்களுக்கு, இந்த ஆலோசனைகள்!

கிரெடிட் கார்டு லோன் அல்லது பர்சனல் லோன் வாங்காதீர்கள். அது அபாயகரமான புதைகுழி. மாட்டிக்கொண்டால் மீள்வது மிக மிகச் சிரமம். சொத்தை வாரிக் கொடுக்க வேண்டும். வழக்கமான தங்க நகைக் கடன்களோடு, வைப்பு நிதி மீது கடன், மியூச்சுவல் பண்டுகள் மீது கடன், காப்பீடு, தேசிய சேமிப்புப் பத்திரம், கிசான் விகாஸ் பத்திரம் மீது கடன் என்று விதவிதமான கடன்கள் தற்போது கிடைக்கின்றன.குறிப்பாக வைப்பு நிதி மீதான கடனுக்கு, வைப்பு நிதிக்குக் கிடைக்கும் வட்டியை விட, 1 முதல் 3 சதவீதம் தான் கூடுதல் வட்டி வசூலிக்கப்படும். வைப்பு நிதியின் மதிப்பில், 75 சதவீதம் முதல், 95 சதவீதம் வரை கடன் பெற முடியும்.


வைப்பு நிதியை உடைத்து, பணத்தை எடுப்பதைவிட, அதையே அடமானமாக வைத்து, கடன் பெறுவது சற்று புத்திசாலித்தனமானது. மூத்த குடிமக்களுக்கும், இந்தக் காலக்கட்டம் சிரமமானது தான். வங்கிகளில் வழக்கமாக கிடைத்துவந்த வட்டி, தற்போது குறைந்துள்ளது. அதேசமயம், மற்ற பிரிவினருக்குக் கிடைப்பதைவிட, அரை சதமேனும் கூடுதலாக கிடைப்பதும் தொடர்கிறது.

மேலும், அவர்களுக்கு தற்சமயம் இரண்டு முக்கியமான திட்டங்கள் உள்ளன. ‘பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா’ மற்றும் ‘சீனியர் சிட்டிசன் சேவிங்க்ஸ் ஸ்கீம்’ என்ற இவ்விரு திட்டங்களும் முறையே, 7.40 சதவீதம் மற்றும் 7.45 சதவீத வட்டி வழங்குகின்றன. வழக்கமான சேமிப்புத் திட்டங்களைவிட, இவற்றுக்கான வட்டி கூடுதல் என்பது தான் சற்று ஆறுதலான விஷயம்.

இவற்றோடு சேர்ந்து சிக்கனமும் முக்கியம். செலவு செய்யாமல் மிச்சம் பிடிக்கும் ஒவ்வொரு ரூபாயும் சேமிப்பு தான். அது வேறேதேனும் ஓர் அத்தியாவசியத் தேவைக்கு பயன்படும். அப்படி ஓர் அத்தியாவசியத் தேவை, மருத்துவ செலவு ஆகும். கொரோனா தொற்று ஏற்பட்டுவிட்டால், அடுத்த ஒரு வாரம், 10 நாட்கள் வீடே களேபரமாகிவிடும். செலவுகளும் எக்குத்தப்பாக எகிறும். அதற்காகவும் கொஞ்சம் திட்டமிட்டுக்கொள்ளுங்கள். கைச் செலவுக்கும், மருத்துவச் செலவுக்கும், வீட்டுச் செலவுகளுக்கும் குறிப்பிட்ட தொகையை ரொக்கமாக வைத்துக் கொள்ளவும். இந்தச் சமயத்தில் ஓய்வுபெறும் தனியார் துறையைச் சேர்ந்தவர்கள், கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவும்.

‘கடைசி மாதச் சம்பள’த்தின் அடிப்படையில் தான் கிராஜுவிட்டி (பணிக்கொடை) கணக்கீடு செய்யப்படும்.ஒருவேளை கடைசி மாதச் சம்பளத்தில் கணிசமான வெட்டு இருக்குமானால், அது உங்கள் பணிக்கொடை தொகையைப் பாதிக்கும். நிர்வாகத்தினரோடு பேசி, அடிப்படைச் சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் வெட்டு விழாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.


முயற்சி

இவை எல்லாவற்றையும் விட, இன்னொரு விஷயம் முக்கியமானது. ஒரு சிலருக்கு வேலையே பறிபோயிருக்கலாம். 2000, 2008 என்று கடந்த இருபதாண்டுகளிலேயே இருமுறை கூடுதலான வேலையிழப்புகள் ஏற்பட்டுள்ளன. ஆனால், உலகம் இருண்டு போய்விட வில்லை. ஏதோ ஓரிடத்தில் ஒளிவிளக்கு மீண்டும் சுடர்விடத் தொடங்கும். அதுவரை கைவிளக்காக இருப்பவை, சேமிப்புகள் தான். மேலே தெரிவித்தவையெல்லாம் பெரிய சேமிப்புகள் அல்ல.


ஒருவிதமான பத்திரப்படுத்தல்கள், ஒழுங்குபடுத்துதல்கள். 10 நாட்களுக்கு வரும் பொருளை, 30 நாட்களுக்கு இழுக்கும் பகீரத பிரயத்தனம். 30 நாட்களுக்கு வருவதை, மூன்று மாதங்களுக்கு இழுத்துப் பிடிக்கும் முயற்சி. குதிரில் இருந்து மரக்காலில் அளந்து போடும் போது, ஒரு கைப்பிடி நெல்லை மீண்டும் குதிருக்குள்ளேயே போட்டு வைப்பர். கைப்பிடி, கைப்பிடியாகச் சேரும் நெல், பஞ்சகாலத்தில் பயன்படும் என்பது நம்பிக்கை; கொரோனா காலத்திலும் இது பொருந்தும்.குதிர் நெல் எடுத்தால், ஒரு கைப்பிடி அதிலேயே போடுங்கள்!

ஆர்.வெங்கடேஷ்

pattamvenkatesh@gmail.com


9841053881

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புது­டில்லி:சீனா­வு­ட­னான நாட்­டின் வர்த்­தக பற்­றாக்­குறை, கடந்த நிதி­யாண்­டில், 48.66 பில்­லி­யன் டாலர் ஆக ... மேலும்
business news
புது­டில்லி:நாட்­டின் தங்க இறக்­கு­மதி, கடந்த ஜூன் மாதத்­தில், 86 சத­வீ­தம் சரிந்­துள்­ள­தாக தெரி­ய­வந்­துள்­ளது. ... மேலும்
business news
மும்பை:நடப்பு நிதி­யாண்­டில், நாட்­டின் வளர்ச்சி குறித்த தன் மதிப்­பீட்டை மாற்றி அறி­வித்­துஉள்­ளது, ‘கேர் ... மேலும்
business news
புது­டில்லி:ஊர­டங்­கு­கள் படிப்­ப­டி­யாக தளர்த்­தப்­பட்டு வரும் நிலை­யில், பல துறை­களில் செயல்­பா­டு­கள் ... மேலும்
business news
இன்று பல தனியார் நிறுவனங்கள் இயற்கைக்கு பாதிப்பில்லாத தயாரிப்புகளை உருவாக்க முயல்கின்றன. வாட்ச் தயாரிப்பு ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)