பதிவு செய்த நாள்
26 அக்2011
11:48

மும்பை : நாட்டின் பங்கு வியாபாரம், நேற்று சிறப்பாக இருந்தது. ஹாங்காங், தைவான் ஆகிய நாடுகளில் பங்கு வர்த்தகம் நன்கு இருந்தது. அதேசமயம், ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகளில் வர்த்தகம் சற்று சுணக்கமாக இருந்தது. இந்நிலையில், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை எந்த அளவிற்கு உயர்த்தப் போகிறது என்ற நிலைப்பாட்டால், நாட்டின் பங்கு வர்த்தகம் காலையில் சுணக்கமாக இருந்தது. ஆனால், ரிசர்வ் வங்கி, சந்தை மதிப்பீட்டை ஒட்டி வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை, 0.25 சதவீதம் உயர்த்தியது. இதையடுத்து, மதியத்திற்கு பிறகு, பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. ஆனால், டெபாசிட்டுகளுக்கான வட்டி விகித கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக வந்த அறிவிப்பையடுத்து, வங்கித் துறை பங்குகளின் விலை குறைந்து போனது. நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், மோட்டார் வாகனம், பொறியியல், மருந்து, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், அதிக விலைக்கு கைமாறின. தீபாவளியை முன்னிட்டு, மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில், இன்று, முகூர்த்த வணிகம் நடைபெற உள்ளது. இதன் காரணமாகவும், பங்கு வர்த்தகத்தில், முன்னேற்றம் காணப்பட்டது என, மும்பை பங்குச் சந்தையின் புரோக்கர் ஒருவர் தெரிவித்தார். குறிப்பாக, ஏ.சி.சி., பஜாஜ் ஆட்டோ, லார்சன் அண்டு டூப்ரோ, டாக்டர் ரெட்டீஸ், மாருதி சுசூகி, இன்போசிஸ் டெக்னாலஜிஸ் உள்ளிட்ட பல நிறுவனப் பங்குகளுக்கு அதிக தேவைப்பாடு இருந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது, 315.58 புள்ளிகள் உயர்ந்து, 17,254.86 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 17,322.13 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 16,900.26 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், எச்.டீ.எப்.சி., எஸ்.பீ.ஐ., பீ.எச்.இ.எல்., ஆகிய மூன்று நிறுவனப் பங்குகளை தவிர, ஏனைய 27 நிறுவனப் பங்குகளின் விலையும் உயர்ந்திருந்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி' 93.25 புள்ளிகள் அதிகரித்து, 5,191.60 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,211 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,085.55 புள்ளிகள் வரையிலும் சென்றது. பிரமல் கிளாஸ் நிறுவனம் நிகர விற்பனை ரூ.323 கோடி : பிரமல் கிளாஸ் நிறுவனம், செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், 27.40 கோடி ரூபாயை வரிக்கு பிந்தைய ஒட்டு மொத்த லாபமாக ஈட்டியுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டை விட, 17.09 சதவீதம் (23.40 கோடி ரூபாய்) அதிகமாகும். இதே காலத்தில், இந்நிறுவனத்தின் நிகர விற்பனை, 300.66 கோடியிலிருந்து, 322.92 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. பவர்கிரிட் கார்ப்பரேஷன் நிகர லாபம் ரூ.709 கோடி : பவர்கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனம், செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில், 709 கோடி ரூபாயை நிகர லாபமாக பெற்றுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டை விட, 9 சதவீதம் (651 கோடி ரூபாய்) அதிகமாகும். இதே காலாண்டுகளில், இந்நிறுவனத்தின் மொத்த வருவாய், 11 சதவீதம் வளர்ச்சிக் கண்டு, 2,223 கோடியிலிருந்து, 2,459 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|