பதிவு செய்த நாள்
02 டிச2011
00:36

சென்னை:அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, வீழ்ச்சி கண்டுள்ளதாலும், இந்தியாவில், வட்டி விகிதம் உயர்ந்துள்ளதாலும், அயல்நாடுகளில் வாழும் இந்தியர்கள், நம் நாட்டில், அதிக அளவில்முதலீடு செய்து வருகின்றனர்.ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை, கடந்த, 20 மாதங்களில் 3.75 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையால், வங்கிகள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்ந்துள்ளது. அதே சமயம், வங்கிகளின் பல்வேறு டிபாசிட் திட்டங்களுக்கான வட்டியும் அதிகரித்துள்ளது.
என்.ஆர்.ஐ., முதலீடுஇது, வெளிநாடுகளின் வட்டி விகிதத்தை விட அதிகமாக உள்ளதால், அயல்நாடு வாழ் இந்தியர்கள் (என்.ஆர்.ஐ.,), நம் நாட்டில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. குறிப்பாக பங்குச் சந்தை, பரஸ்பர நிதி திட்டங்கள், ரியல் எஸ்டேட் துறைகளில் முதலீடு உயர்ந்துள்ளது.சென்ற ஜூன் 30ம் தேதி நிலவரப்படி, அயல்நாடு வாழ் இந்தியர்கள், நம் நாட்டு வங்கிகளில் செய்துள்ள முதலீடு, 5,300 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், சென்ற நவ., 23ம் தேதி முதல், உள்நாட்டு வங்கிகள், அயல்நாடு வாழ் இந்தியர்களின் டிபாசிட்டுகளுக்கு, சர்வதேச "லிபார்' வட்டி விகிதமுடன் கூடுதலாக, 1.25 சதவீத வட்டி வழங்கத் தொடங்கியுள்ளன. இதுவும், அயல்நாடு வாழ் இந்தியர்கள், நம் நாட்டில் புதிய வங்கிக் கணக்குகளை தொடங்கி டிபாசிட் செய்ய தூண்டுதலாக உள்ளது. அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளைச் சேர்ந்த வங்கிகள், "லிபார்' -ஐ விட, குறைந்த வட்டியில் கடன் வழங்குகின்றன. இதை, அந்நாடுகளில் வாழும் இந்தியர்கள், சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு, நம்நாட்டில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர்.
லாபம்கடந்தாண்டு இதே காலத்தை விட, நடப்பாண்டு இதுவரை, அயல்நாட்டு இந்தியர்கள், உள்நாட்டு வங்கிகளில் செய்துள்ள முதலீடு, 20-25 சதவீதம் அதிகரித்துள்ளதாக, ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. கோட்டக் மகிந்திரா போன்ற தனியார் வங்கிகளிலும், பொதுத்துறை வங்கிகளிலும், அயல்நாடு வாழ் இந்தியர்களின் முதலீடு முறையே, 40 மற்றும் 30 சதவீதம் அதிகரித்துள்ளது.வட்டி உயர்வு தவிர, டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு, வீழ்ச்சி கண்டுள்ளதும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு சாதகமான அம்சமாக உள்ளது. அவர்கள், டாலரில் செய்யும் முதலீட்டிற்கு, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பிருந்ததை விட, கூடுதலாக இந்திய ரூபாய் கிடைத்து வருகிறது.
அதாவது, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக, அயல்நாடு வாழ் இந்தியர், 1,000 டாலரை இந்தியாவிற்கு அனுப்பி யிருந்தால், அதன் மதிப்பு, 46 ஆயிரம் ரூபாயாக இருந்திருக்கும். ஆனால், இன்று ரூபாய் மதிப்பு சரிவடைந்துள்ளதால், அதே நபர், இன்று இந்தியாவிற்கு அனுப்பும், 1,000 டாலரின் மதிப்பு, 52 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் உயர்ந்து காணப்படுகிறது. ஆக, செலாவணி மதிப்பில் ஏற்பட்டுள்ள மாறுதலால், 6,000 ரூபாய் லாபம் கிடைக்கிறது. இதுவும் அயல் நாடு வாழ் இந்தியர்கள், இந்தியாவில் முதலீடு செய்வதற்கு காரணமாக உள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்:இது போன்றவற்றால், அயல்நாடு வாழ் இந்தியர்கள், தாங்கள் வசிக்கும் நாடுகளில், குறைந்த வட்டியில் கடன் பெற்று, இந்தியாவில் வீட்டு வசதிக் கடன், சொத்து அடமானக் கடன் உள்ளிட்டவற்றை பெற்றுள்ள கடன்களை அடைத்து, சொத்துக்களை மீட்டு வருகின்றனர்.ஐக்கிய அரபு எமிரேட்டில் இருந்து, கடந்த இரு வாரங்களில், இந்தியாவில் முதலீடு மற்றும் இதர இனங்களுக்காக அயல் நாடு வாழ் இந்தியர்கள், நம்நாட்டிற்கு அனுப்பி வரும் தொகை, 30 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
குறைந்த வட்டி:இது குறித்து, அயல்நாடு வாழ் இந்தியர் ஒருவர் கூறும்போது, "துபாயில், 8 சதவீத வட்டியில், 3 லட்சம் திர்ஹாம் (42 லட்ச ரூபாய்), தனிநபர் கடன் வாங்கி, சென்னையில் வீடு வாங்கியுள்ளேன். அதேசமயம், இந்தியாவில் வீட்டுவசதிக்கான கடன் 12 சதவீதம் என்ற அளவில் உள்ளது.இந்த வட்டியுடன் ஒப்பிடும் போது, அயல் நாட்டில் குறைந்த வட்டியில் கடன் வாங்கிய வகையில், 4 சதவீத வட்டி ஆதாயம் கிடைத்துள்ளது. மேலும், வீட்டு கடனுக்கான வட்டியை 5 ஆண்டுகளில் திரும்ப செலுத்தும் வகையில், 13.5 லட்ச ரூபாயை செலவிட்டிருக்க வேண்டும், இத்தொகையும் எனக்கு மிச்சமாகியுள்ளது' என்று தெரிவித்தார்.
உலக வங்கி மதிப்பீட்டின்படி, அயல்நாடு வாழ் இந்தியர்கள், சென்ற ஆண்டு இந்திய வங்கிகளில், 5,500 கோடி டாலர் அளவிற்கு பணம் செலுத்தியுள்ளனர். இதில், வளைகுடா பகுதிகளில் வாழும் இந்தியர்களின் பங்களிப்பு, 50 சதவீதமாக உள்ளது.ஐக்கிய அரபு எமிரேட்டில் வசிக்கும் இந்தியர்கள் மட்டும், கடந்தாண்டு 600 கோடி டாலர் அளவிற்கு, இந்திய வங்கிகளில் பணம் செலுத்தியுள்ளனர். இவ்வாண்டு, வளைகுடா பகுதி வாழ் இந்தியர்கள், நம்நாட்டு வங்கிகளில் செலுத்தும் தொகை, சாதனை அளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|