பதிவு செய்த நாள்
21 ஜன2012
10:24

நாமக்கல்: நாமக்கல்லில், திண்டிவனம் தர்ப்பூசணிப் பழங்கள் விற்பனைக்கு குவிக்கப்பட்டு வருகின்றன. ஒரு கிலோ, 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சீஸன் துவக்கம் என்பதால், அவற்றை மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர். கோடை வெப்பத்தின் தாக்கம் மார்ச் மாதம் துவங்கி, ஜூன் மாதம் இறுதி வரை நீடிக்கும். கோடை வெப்பத்தை சமாளிக்க, பழரசம், தர்ப்பூசணி உள்ளிட்டவற்றை மக்கள் அதிகளவு நாடுவது வழக்கம். இந்தாண்டு கோடை காலம் துவங்க ஒரு மாத காலம் உள்ளது. இந்நிலையில், தற்போதே கோடை வெப்பத்தை சமாளிக்கக் கூடிய தர்ப்பூசணிப் பழங்கள், நாமக்கல் பகுதியில் விற்பனைக்கு குவிக்கப்பட்டு வருகின்றன. திண்டிவனத்தில் விளைவிக்கப்படும் தர்ப்பூசணிப் பழங்கள், லாரிகள் மூலம் மொத்த விலைக்கு வாங்கி வரும் வியாபாரிகள், அவற்றை நாமக்கல் சுற்றுவட்டாரத்தில் சில்லறை விலையில் விற்பனை செய்கின்றனர்.
ஒரு கிலோ தர்ப்பூசணி, 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சீஸன் துவக்கம் என்பதால், விலை சற்று அதிகமாக உள்ளது. வரும் வாரங்களில், பழத்தின் வரத்து அதிகரிக்கும். அச்சமயத்தில், பழத்தின் விலை குறைய வாய்ப்புள்ளது என, வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து தர்ப்பூசணி வியாபாரிகள் கூறியதாவது:
திண்டிவனத்தில், தர்ப்பூசணி அதிகளவில் விளைவிக்கப்படுகிறது. அங்கு விளைவிக்கப்படும் பழங்கள் சுவை மிகுந்திருக்கும் என்பதால், அவற்றுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகம். அங்கிருந்து, தமிழகம் முழுவதும் தர்ப்பூசணி விற்பனைக்கு செல்கிறது. சீஸன் துவக்கம் என்பதால், பழத்தின் வரத்து குறைவாக உள்ளது.
வரும் வாரங்களில் பழங்களின் வரத்து அதிகரிக்கும். குளிர் சீஸன் என்பதையும் மக்கள் பொருட்படுத்தாமல், தர்ப்பூசணிகளை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.
இவ்வாறு கூறினர்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|