பதிவு செய்த நாள்
08 மார்2012
00:06
புதுடில்லி: இரு சக்கர வாகனங்கள் தயாரிப்பில் முன்னிலையில் உள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், குஜராத் மாநிலத்தில், 1,200 கோடி ரூபாய் திட்ட செலவில், அதன் நான்காவது புதிய தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டுள்ளது. இது தவிர, மேலும் ஒரு புதிய தொழிற்சாலையை கர்நாடக மாநிலத்தில் அமைக்கவுள்ளது.ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்திற்கு, தற்போது ஹரித்துவார், குர்கான் மற்றும் தாருகேரா ஆகிய மூன்று இடங்களில் தொழிற்சாலைகள் உள்ளன. இம்மூன்று தொழிற்சாலைகளின் உற்பத்தி திறனை ஆண்டுக்கு 74 லட்சம் என்ற எண்ணிக்கைக்கு மேல் உயர்த்த திட்டமிட்டுள்ளதாக, இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமைச் செயல் அதிகாரியுமான பவன் முன்ஜால் தெரிவித்துள்ளார்.அடுத்த ஐந்தாண்டுகளில், நாட்டின் இரு சக்கர வாகனங்கள் துறையின் வளர்ச்சி ஆண்டுக்கு 14 சதவீதம் என்ற அளவில் இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டே இந்நிறுவனம், பழைய தொழிற்சாலைகளின் உற்பத்தி திறனை அதிகரிப்பதுடன், புதிய தொழிற்சாலைகள் அமைக்கும் வகையிலும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில், நிறுவனம், வரும் 2020ல், இரு சக்கர வாகனங்கள் ஏற்றுமதியை 100 கோடி டாலர் அளவிற்கு உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது. குஜராத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள புதிய தொழிற்சாலை ஆண்டுக்கு, 20 லட்சம் இரு சக்கர வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும்.இரண்டு கட்டமாக செயல்படுத்தப்படும் இத்தொழிற்சாலை, குஜராத் மாநிலத்தில் ஹலோல் என்ற இடத்தில், ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் தொழிற்சாலைக்கு அருகில் அமைய உள்ளது. இதற்காக, அம்மாநில அரசு, நிறுவனத்திற்கு 300 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளது. இத்தொழிற்சாலை துறைமுகங்களுக்கு அருகில் இருப்பதால், ஏற்றுமதி மேற்கொள்வதற்கு ஏதுவாக இருக்குமென இந்நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இந்நிலையில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், ஐந்தாவது தொழிற்சாலையை திறக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக, இந்நிறுவனம் கர்நாடகா, தமிழகம், ராஜஸ்தான் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் உயரதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. முடிவில், கர்நாடக மாநிலத்தில் தார்வாத் என்ற இடத்தில் தொழிற்சாலை அமைக்கவுள்ளதாக என தெரியவந்துள்ளது. இப்புதிய தொழிற்சாலை, 500 ஏக்கரில், டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தொழிற்சாலைக்கு அருகில் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|