பதிவு செய்த நாள்
23 ஏப்2012
00:16

புதுடில்லி:நாட்டின் பால் மற்றும் பால் பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு, 17ஆயிரத்து 300 கோடி ரூபாய் செலவில் தேசிய பால் வள மேம்பாட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
நவீன தொழில்நுட்பம்: இத்திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 14 மாநிலங்களில் நவீன தொழில்நுட்பத்தின் மூலம், அதிக பால் தரும் கால்நடைகளின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கவும், பால் மற்றும் பால் பொருட்களின் உற்பத்தியை உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
முதல் கட்டமாக, தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களில் செயல்படும் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுடன் இணைந்து, அடுத்த ஆறு ஆண்டுகளில் 2,242 கோடி ரூபாய் செலவில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது.கடந்த 2010-11ம் நிதியாண்டில்,நாட்டின் பால் உற்பத்தி 12.28 கோடி டன்னாக இருந்தது. வரும் 2021-22ம் நிதியாண்டில், நாட்டின் பாலுக்கான தேவை 7 சதவீதம் அதிகரித்து 20 கோடி டன்னாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், பால் உற்பத்தி ஆண்டுக்கு 4 சதவீதம் என்ற அளவிற்கே வளர்ச்சி கண்டு வருகிறது. இதை கருத்தில் கொண்டு பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2005-06ம் நிதியாண்டில், தேசிய அளவில், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் நாளொன்றுக்கு, 2.15 கோடி லிட்டர் பால் கொள்முதல் செய்தன. இது, 2009-10ம் நிதியாண்டில் 20.6 சதவீதம் வளர்ச்சி கண்டு 2.59 கோடி லிட்டராக உயர்ந்துள்ளது.இதே ஆண்டுகளில், குஜராத் மற்றும் கர்நாடக மாநில கூட்டுறவு சங்கங்களின் பால் கொள்முதல் 35 சதவீதம் அதிகரித்து, 94 லட்சம் லிட்டரில் இருந்து, 1.27 கோடி லிட்டராக உயர்ந்துள்ளது. இதர மாநிலங்களின் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களின் பால் கொள்முதல், 9.3 சதவீதம் உயர்ந்து, 1.20 கோடி லிட்டரில் இருந்து 1.30 கோடி லிட்டராக அதிகரித்துள்ளது.
இதே ஆண்டுகளில், தனியார் பால் நிறுவனங்களின் பால் கொள்முதல் 90 சதவீதம் வளர்ச்சி கண்டு நாளொன்றுக்கு 2.1கோடி லிட்டரில் இருந்து, 4 கோடி லிட்டராக உயர்ந்துள்ளது.கூட்டுறவு சங்கங்களை பொறுத்தவரை, நாட்டிலேயே குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (அமுல்) மற்றும் கர்நாடகா பால் கூட்டமைப்பு (நந்தினி) ஆகியவை, நாளொன்றுக்கு முறையே 90 லட்சம் லிட்டர் மற்றும் 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து முன்னணியில் உள்ளன.
கூட்டுறவு சங்கங்கள்:தனியார் துறையை பொறுத்தவரை, நெஸ்லே இந்தியா நிறுவனம், பத்தாண்டுகளுக்கு முன்பு நாளொன்றுக்கு 10 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து தனித்து கோலோச்சி வந்தது. இன்று, எட்டு நிறுவனங்கள் இதே அளவில் பால் கொள்முதல் செய்து வருகின்றன. ஆறு நிறுவனங்கள், நாள்தோறும் 5 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்கின்றன.
இந்நிலையில், தேசிய பால்வள திட்டத்தில் கூட்டுறவு சங்கங்களுடன், தங்களையும் இணைத்து செயல்பட வேண்டும் என, தனியார் பால் நிறுவனங்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. இது தொடர்பாக ஓரிரு நாளில், மத்திய வேளாண் அமைச்சர் சரத்பவாரை சந்தித்து பேசவும் இந்நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|