பதிவு செய்த நாள்
24 ஆக2012
01:30

புதுடில்லி:இந்தியாவில், ரசாயன கலப்பற்ற இயற்கை உரங்கள் மூலம் விளைவிக்கப்படும் உணவு வகைகளின் சந்தை, ஆண்டுக்கு 20 சதவீதத்திற்கும் அதிகமாக வளர்ச்சி கண்டு வருகிறது. ஏற்றுமதியை உள்ளடக்கிய இச்சந்தை மதிப்பு, தற்போது 1,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
விழிப்புணர்வு:இதற்கு,நடுத்தர வர்க்கத்தினரின் செலவிடும் வருவாய் அதிகரித்து வருவதும், ரசாயன கலப்பற்ற உணவு வகைகள் குறித்த விழிப்புணர்வு பெருகி வருவதும் முக்கிய காரணங்களாகும்.இவ்வகை உணவுச் சந்தை குறித்து யெஸ் பேங்க் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை விவரம்:கடந்த 2010ம் ஆண்டு நிலவரப்படி, ரசாயன கலப்பற்ற உணவுகள் மற்றும் குளிர்பானங்களின் சர்வதேச சந்தை மதிப்பு, 5,720 கோடி டாலராக இருந்தது.
இது, ஆண்டுக்கு 16.2 சதவீத வளர்ச்சியின் அடிப்படையில், வரும் 2015ம் ஆண்டு 10,450 கோடி டாலராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஐரோப்பிய நாடுகள்:மதிப்பீட்டு ஆண்டில், ரசாயன கலப்பற்ற உணவு வகைகளுக்கான சர்வதேச சந்தையில், ஐரோப்பிய நாடுகள் 2,780 கோடி டாலர் பங்களிப்புடன் முதலிடத்தை பிடித்திருந்தன. ஆசிய, பசிபிக் நாடுகளின் பங்களிப்பு, 350 கோடி டாலராக இருந்தது. இந்நாடுகள், இச்சந்தையில், 2006-10ம் ஆண்டு வரை, ஆண்டுக்கு சராசரியாக, 16.2 சதவீத வளர்ச்சியை கண்டு வந்துள்ளன.
இந்தியாவை பொறுத்தவரை, தற்போது, ஏற்றுமதியை உள்ளடக்கிய, ரசாயன கலப்பற்ற, இயற்கை உணவு வகைகளின் சந்தை, 1,000 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. நம்நாடு, ஆண்டுக்கு 39 லட்சம் டன் அளவிற்கு, அங்கீகரிக்கப்பட்ட ரசாயன கலப்பற்ற இயற்கை உரங்கள் மூலம் விளைவிக்கப்படும், விளைபொருட்களை உற்பத்தி செய்கிறது. இவற்றில், பாசுமதி அரிசி, பருப்பு வகைகள், தேயிலை, காபி, நறுமணப் பொருட்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் உள்ளிட்டவை அடங்கும்.ரசாயன கலப்பற்ற உணவுத் தொழில், பெருநகரங்களை சார்ந்தே உள்ளது.
சென்னை, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட, 10 பெருநகரங்களில், மிக அதிகளவில் இயற்கை உணவு வகைகள் கிடைக்கின்றன.மத்திய அரசின் புள்ளி விவரப்படி, நாட்டில், 11 லட்சம் ஹெக்டேரில், இயற்கை உரங்கள் வாயிலான விவசாயம் நடைபெறுகிறது. இது தவிர, 34 லட்சம் ஹெக்டேர் அளவிலான வனப் பகுதிகளிலும், இவ்வகை உணவுப் பொருட்கள் சாகுபடி செய்யப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
பருத்தி:இயற்கை வேளாண்மையில், மத்திய பிரதேசம் 4.40 லட்சம் ஹெக்டேருடன் முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடங்களில் மகாராஷ்டிரா (1.50 லட்சம் ஹெக்டேர்), ஒடிசா (95 ஆயிரம் ஹெக்டேர்) உள்ளன.இந்தியாவில் இயற்கை வேளாண் சாகுபடி பரப்பில், பருத்தி 40 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. சர்வதேச அளவில், இவ்வகையான பருத்தி உற்பத்தியில், இந்தியாவின் பங்களிப்பு 50 சதவீதம் என்ற அளவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|