பதிவு செய்த நாள்
01 அக்2012
05:47

கொச்சி:நடப்பு 2012ம் காலண்டர் ஆண்டில், நாட்டின் மிளகு உற்பத்தி, 43 ஆயிரம் டன்னாக குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2011ம் ஆண்டில், இதன் உற்பத்தி, 48 ஆயிரம் டன்னாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.சாகுபடி பரப்பளவு:உள்நாட்டில், மிளகு சாகுபடி பரப்பளவு குறைந்து வருவது, பழைய மிளகு கொடிகளை மாற்றாமல் இருப்பது, தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை மற்றும் அதிக ஊதியம் போன்றவற்றால், உள்நாட்டில், மிளகு உற்பத்தி குறைந்து வருவதாக, இத்துறையை சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.
உள்நாட்டில், மிளகு உற்பத்தியில், கேரளாவின் பங்களிப்பு, 85 சதவீத அளவிற்கு உள்ளது. இதைத்தொடர்ந்து, கர்நாடகா (11 சதவீதம்), தமிழகம் (3 சதவீதம்) ஆகிய மாநிலங்கள் உள்ளன. சர்வதேச அளவில், மிளகு உற்பத்தியில், ஒரு காலத்தில், இந்தியாவே மிகப் பெரிய நாடாக இருந்தது. ஆனால், நம் நாட்டிற்கு பிறகு, அதாவது, 1990களில், வியட்நாம் நாடு மிளகு உற்பத்தியில் ஈடுபடத் துவங்கியது.
இன்று, சர்வதேச அளவில், மிளகு உற்பத்தியில் வியட்நாம் நாடே முதலிடத்தில் உள்ளது.
வியட்நாம்:கடந்த 2003ம் ஆண்டிற்கு முன் வரை, மிளகு உற்பத்தியில், இந்தியாவே முதலிடத்தில் இருந்தது. அதன் பிறகு, வியட்நாம் நாடு, படிப்படியாக நம் நாட்டை விஞ்சியுள்ளது.கடந்த 2010ம் ஆண்டில், சர்வதேச மிளகு உற்பத்தியில், வியட்நாமின் பங்களிப்பு, 33 சதவீதமாகவும், ஏற்றுமதி, 43 சதவீதமாகவும் அதிகரித்தது.
தற்போது, இந்நாட்டின் மிளகு உற்பத்தி, ஆண்டுக்கு, ஒரு லட்சம் டன்னாக அதிகரித்துஉள்ளது.
உலகளவில், மிளகு உற்பத்தியில், வியட்நாம், இந்தியா, இந்தோனேஷியா, பிரேசில், மலேசியா ஆகிய நாடுகளின் பங்களிப்பு, 85 சதவீத அளவிற்கு உள்ளது.
ஏற்றுமதி:உலக அளவில், மிளகிற்கான தேவை உயர்ந்து வருகிறது. கடந்த ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பாக, சர்வதேச சந்தைக்கான மிளகு ஏற்றுமதி, 1.62 லட்சம் டன்னாக இருந்தது. இது, தற்போது, 2.60 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.
அதேசமயம், சர்வதேச அளவில், மிளகு உற்பத்தி, கடந்த 2001ம் ஆண்டில், 2.53 லட்சம் டன்னாக இருந்தது. இது, தற்போது, (2012) 3.20 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.
சர்வதேச அளவில், மிளகு ஏற்றுமதியில், வியட்நாமிற்கு அடுத்தபடியாக, பிரேசில், இந்தோனேஷியா, இலங்கை, மலேசியா ஆகிய நாடுகள் உள்ளன.
பயன்பாடு:இந்தியாவின் மிளகு ஏற்றுமதி, கடந்த ஒரு சில ஆண்டுகளாக குறைந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், உள்நாட்டில், இதன் பயன்பாடு அதிகமாக இருப்பது தான். கடந்த 2007ம் ஆண்டு முதல், இந்தியாவின் மிளகு ஏற்றுமதி, அளவு மற்றும் மதிப்பின் அடிப்படையில் குறைந்து வருகிறது.
கடந்த 2011-12ம் நிதியாண்டில், நாட்டின், மிளகு ஏற்றுமதி, 26,700 டன்னாக இருந்தது.
இந்நிலையில், நடப்பு 2012-13ம் நிதியாண்டில், 20 ஆயிரம் டன் மிளகு ஏற்றுமதி செய்ய, இந்திய நறுமணப் பொருட்கள் வாரியம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
உள்நாட்டில், மிளகு உற்பத்தி குறைந்துள்ள நிலையில், இதற்கான தேவை வளர்ச்சி தொடர்ந்து நிலையாக உள்ளது. இதனால், இதன் விலை உயர்ந்து வருகிறது.
கடந்த 2007ம் ஆண்டு ஜனவரியில், நடப்பு சந்தையில், ஒரு குவிண்டால் மிளகின் விலை, 10,650 ரூபாயாக இருந்தது.
இது, சென்ற ஆகஸ்ட் மாத நிலவரப்படி, 43,129 ரூபாயாக அதிகரித்திருந்தது.
இந்நிலையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார சுணக்க நிலையால், சர்வதேச சந்தையில், இதற்கான தேவையும், விலையும் சரிவடைந்துள்ளது.
முன்னேற்றம் :இதையடுத்து, இந்தியாவிலும், இதன் விலை கடந்த ஒரு மாதமாக வீழ்ச்சி கண்டு வருகிறது.அதிகளவில், மிளகு விளையும் கேரள மாநிலத்தில், பின் தங்கிய மழைப்பொழிவால், மிளகு உற்பத்தியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால், நடப்பாண்டின், முடிவில், இதன் உற்பத்தியும், வரத்தும் அதிகரிக்கும் என, கூறப்படுகிறது. இந்தியாவில், மிளகு அறுவடை, டிசம்பர் முதல் பிப்ரவரி வரை மேற்கொள்ளப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|