பதிவு செய்த நாள்
14 ஜூன்2013
01:29

சேலம்:வெள்ளி விலை தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருவதால், வெள்ளி ஆபரணங்களை தயாரிக்கும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
சேலத்தில், செவ்வாய்பேட்டை, குகை, பள்ளப்பட்டி, வாழப்பாடி, ஓமலூர் உட்பட பல இடங்களில், வெள்ளி கொலுசு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. பண்டிகை சீசன் துவங்கி உள்ளதால், வெள்ளி ஆபரணங்களின் தயாரிப்பு பணி, சுறுசுறுப்படைந்துள்ளது.
விலை உயர்வு:சேலம் மாவட்டத்தில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெள்ளி பட்டறைகள் செயல்பட்டு வருகின்றன. வெள்ளி கொலுசு, அரைஞாண் கொடி, மெட்டி ஆகியவற்றின் உற்பத்தியில், நேரடியாக, 60 ஆயிரம் குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.கொலுசின் மூலப்பொருளான வெள்ளி விலை, இரண்டு ஆண்டுகளாக கிடு கிடுவென உயர்ந்து, சென்ற, 2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், உச்சகட்டமாக, கிலோ, 72 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
கூலிக்கு வெள்ளி: வெள்ளி ஆபரணங்களை தயாரிக்கும் தொழிலாளர்களுக்கான கூலி, பணமாக வழங்கப்படுவதில்லை. வெள்ளியாக வழங்குவதே இன்றளவும், வழக்கத்தில் உள்ளது. ஒரு கிலோ வெள்ளி ஆபரண தயாரிப்புக்கு, 15 கிராம் முதல் 30 கிராம் வரை, சுத்த வெள்ளி கூலியாக வழங்கப்படுகிறது.
இதனால், வெள்ளி விலையில் ஏற்பட்ட உயர்வு, ஒரு வகையில், தொழிலாளர்களின் வருமானத்தை உயர்த்தியது.கடந்த ஆண்டு, இதே கால கட்டத்தில், தொழிலாளர்கள் தினக் கூலியாக, 650 ரூபாய் முதல் 850 ரூபாய் வரை பெற்றனர்.ஆனால், நடப்பாண்டில், தற்போதைய நிலவரப்படி வெள்ளி கிலோ, 44,000 - 45,000 ரூபாய்க்கு விற்கிறது.இந்த விலை சரிவு, தொழிலாளர்களின் கூலியில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது, தொழிலாளர்களுக்கு தினமும் கூலியாக, 400 ரூபாய் முதல் 600 ரூபாய் மட்டுமே கிடைக்கிறது.
சோகம்:வெள்ளி விலையில் ஏற்பட்டுள்ள சரிவு, வெள்ளிப் பட்டறை உரிமையாளர் களுக்கு மகிழ்ச்சியையும், தொழிலாளர்களுக்கு சோகத்தையும் அளித்து உள்ளது.வெள்ளி விலை சரிவால், வெள்ளி ஆபரணங்களின் விலையும் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு, மொத்த விற்பனையில், ஒரு கிராம் வெள்ளிக் கொலுசு, 59 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இது, தற்போது, 47 ரூபாயாக சரிவடைந்துள்ளது.
கடந்த, ஆறு மாதத்தில், ஆபரண வெள்ளி கிராமுக்கு, 20 ரூபாய் வரை குறைந்துள்ளது. ரகம் வாரியாக, கிலோ வுக்கு,1,000-2,500 ரூபாய் வரை,விலையில் சரிவுஏற்பட்டுள்ளது. கொலுசு விலைசரிவை தொடர்ந்து,52 ரூபாய்க்கு விற்ற அரைஞாண் கொடி, 39 ரூபாய்க்கும், 57 ரூபாய்க்கு விற்ற மெட்டி, 42 ரூபாய்க்கும் விற்கப் படுகிறது. இந்த விலை சரிவால் கொலுசு, அரைஞாண் கொடி, மெட்டி ஆகியவற்றின் விற்பனை சூடு பிடித்துள் ளது. இதனால், சேலத்தில் வெள்ளி கொலுசு உள்ளிட்ட, ஆபரணங்களின் தயாரிப்பு பணியில் சுறுசுறுப்பு ஏற்பட்டுள்ளது. அதே சமயம், தொழிலாளர்களின் வருவாய் பாதிக்கப்பட்டு உள்ளது.
வெள்ளி ஆபரண தொழிலாளர்களுக்கு, கூலியை பணமாக தரும்பட்சத்தில், வெள்ளி விலையில் ஏற்படும் இறக்கத்தால் அவர்களின் வருமானம் பாதிக்கப்படும் நிலை ஏற்படாது என்று கருதப்படுகிறது.எனினும்,சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வெள்ளி ஆபரண தொழிலாளர்களிடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டால்தான், ஊதியப் பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என, இத்துறை சார்ந்தவர்கள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|