பதிவு செய்த நாள்
05 அக்2013
00:50

தாயகத்திற்கு பணம் அனுப்புவதில், இதர நாட்டினரை விட, வெளிநாடு வாழ் இந்தியர்கள்,நடப்பாண்டிலும், முதலிடத்தை பிடிப்பார்கள் என, உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.
இது குறித்து, இவ்வங்கியின் இடம்பெயர்ந்தோர் மற்றும் மேம்பாட்டு இதழ் வெளியிட்டுள்ள விவரம்:வெளிநாடுகளில் வசிப்போர், தங்கள் நாட்டிற்கு அதிக பணம் அனுப்பும் பட்டியலில், நடப்பாண்டும் இந்தியா முதலிடத்தை பிடிக்கும்.
சீனர்கள்:நடப்பாண்டு, வெளிநாடு வாழ் இந்தியர்கள், 7,100 கோடி டாலரை, இந்தியாவிற்கு அனுப்புவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது, சென்ற 2012ம் ஆண்டு, 7,000 கோடி டாலராக இருந்தது.இந்த பட்டியலில், வெளிநாடு வாழ் சீனர்கள், தங்கள் தாய்நாட்டிற்கு, 6,600 கோடி டாலரை அனுப்பி, இரண்டாவது இடத்தை பிடிப்பர்.
அடுத்த இடங்களில், பிலிப்பைன்ஸ் (2,400 கோடி டாலர்), மெக்சிகோ (2,400 கோடி), நைஜீரியா (2,100 கோடி டாலர்) இடம்பெறும்.நடப்பாண்டு, இந்திய தகவல் தொழில் நுட்ப துறை நிறுவனங்கள் ஈட்டும் ஏற்றுமதி வருவாயை விட, வெளிநாடு வாழ் இந்தியர்கள், தாயகத்திற்கு அனுப்பும் பணம் அதிகமாக இருக்கும்.கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாதங்களில், வெளிநாடு வாழ் இந்தியர்கள், 3,560 கோடி டாலரை, தாயகத்திற்கு அனுப்பி உள்ளனர்.
அன்னிய நேரடி முதலீடு:இது, தொலைதொடர்பு, கம்ப்யூட்டர் மற்றும் தகவல் சேவைகள் ஆகிய துறை நிறுவனங்களின் மொத்த ஏற்றுமதி வருவாயை விட அதிகம்.மேலும், கடந்த 2012ம் ஆண்டு, இந்தியாவில் குவிந்த அன்னிய நேரடி முதலீட்டை (2,278 கோடி டாலர்) விடவும் கூடுதலாகும்.
ஒரு நாட்டின் கரன்சி மதிப்பு குறையும்போது, வெளி நாடுகளில் வசிக்கும் சம்பந்தப்பட்ட நாட்டினர், தாயகத்திற்கு அதிக அளவில் பணம் அனுப்புவர்.அதிக ஆதாயம் கருதி, இத்தகைய வழிமுறை பின்பற்றப்படுகிறது. ஆனால், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியுடன் ஒப்பிடும்போது, வெளிநாடு வாழ் இந்தியர்கள், தாயகத்திற்கு குறைவாகவே பணம் அனுப்பியுள்ளதாக கருதலாம்.
இதை, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை வைத்து கணக்கிடலாம். உதாரணமாக, கடந்த 2012ம் ஆண்டு, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு, 97,15,588 கோடி ரூபாயாக இருந்தது. அப்போது, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, 53.38 ஆக காணப்பட்டது.அப்போது, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, டாலர் மதிப்பில்,1,82,000 கோடி. இதில், வெளிநாடு வாழ் இந்தியர்கள், தாயகத்திற்கு அனுப்பிய தொகை ( 7,000 கோடி டாலர்) 3.85 சதவீதம் என்ற அளவில் இருந்தது.
உள்நாட்டு உற்பத்தி:நடப்பு 2013ம் ஆண்டு, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 13.4 சதவீதம் வளர்ச்சி காணும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. நடப்பு நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, கடந்த 2012–13ம் நிதியாண்டை விட, அதிகரித்து, 1,10,17,477 கோடி ரூபாயாக இருக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்ற செப்டம்பர் வரை, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் சராசரி மதிப்பான, 57.36, நடப்பாண்டு இறுதி வரை நீடிக்கும் என, வைத்துக் கொள்வோம். இதன்படி, டாலர் அடிப்படையிலான, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (1,92,100 கோடி டாலர்), வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாயகத்திற்கு அனுப்பும் தொகையின் (7,100 கோடி டாலர்), பங்களிப்பு, 3.69 சதவீதம் என்ற அளவிற்கே இருக்கும்.
நேபாளம்:இதன் அடிப்படையில் கணக்கிட்டால், வெளிநாட்டில் வாழ்வோர் தாயகத்திற்கு பணம் அனுப்பும் பட்டியலில், இந்தியா பின்தங்கி விடும்.கடந்த 2012ம் ஆண்டில், தஜிகிஸ்தான் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், தாயகத்திற்கு பணம் அனுப்பிய வெளிநாடு வாழ் தஜிகிஸ்தானியரின் பங்களிப்பு, 48 சதவீதமாக இருந்தது.
அடுத்த இடங்களில், கிர்கிஸ்தான் குடியரசு (31 சதவீதம்), லெசோதோ மற்றும் நேபாளம் (தலா 25 சதவீதம்), மால்டோவா (24 சதவீதம்), பிலிப்பைன்ஸ் (10.4), நைஜீரியா (8), இந்தியா (3.8), மெக்சிகோ (1.8) மற்றும் சீனா (0.8 சதவீதம்) ஆகிய நாடுகள் உள்ளன. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக நிலவரம்:நடப்பாண்டில், வெளிநாடுகளில் வசிக்கும், 23.20 கோடி பேர், தங்கள் தாய்நாட்டிற்கு அனுப்பும் தொகை, 55,000 கோடி டாலராக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது, வரும், 2016ம் ஆண்டில், 70 ஆயிரம் கோடி டாலராக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
– பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து –
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|