பதிவு செய்த நாள்
22 நவ2013
01:05

மும்பை: வெங்காயத்தை தொடர்ந்து, பூண்டு விலையும், கிடு கிடுவென உயர்ந்து வருகிறது.விவசாயிகள் விற்பனைக்கு பூண்டு அனுப்புவதை குறைத்துள்ளதும், வர்த்தகர்கள் கூட்டணி அமைத்து பதுக்குவதாலும், கடந்த ஒரு மாதத்தில் பூண்டின் விலை, இரு மடங்கு உயர்ந்துள்ளது.
உற்பத்தி: நாட்டின் பூண்டு உற்பத்தி, ஆண்டுக்காண்டு வளர்ச்சி கண்டு வருகிறது.கடந்த 2010–11ம் நிதியாண்டு, 10.57 லட்சம் டன் பூண்டு உற்பத்தியானது. இது, 2011–12ம் நிதியாண்டில், 12.25 லட்சம் டன்னாகவும், 2012–13ம் நிதியாண்டில், 12.50 லட்சம் டன்னாகவும் அதிகரித்துள்ளது.சென்ற நிதியாண்டில், பூண்டு உற்பத்தியில் புதிய சாதனை படைக்கப்பட்ட போதிலும், கடந்த ஒரு மாதத்தில், அதன் விலை, இரு மடங்கு அதிகரித்துள்ளது.
சந்தையில், புதிய பூண்டு வரத்து, 3 வாரங்களுக்கு மேலாக குறைந்துள்ளதால், அதன் விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.ஆனால், பூண்டு விலை மேலும் உயரும் என்ற எதிர்பார்ப்பில், விவசாயிகள், கையிருப்பு வைத்துள்ளதாலும், வர்த்தகர்கள் கூட்டாக செயல்பட்டு, சந்தையில் பூண்டு வரத்தை செயற்கையாக குறைத்துள்ளதாலும் தான் அதன் விலை உயர்ந்துள்ளது என, கூறப்படுகிறது.
உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு, பூண்டு உற்பத்தி உள்ளது. இருந்த போதிலும் தற்போது, அதிகபட்சமாக, ஒரு கிலோ பூண்டு, 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.சென்னை
கடந்த 18–19ம் தேதிகளில், சென்னை, மொத்த விற்பனை சந்தையில் ஒரு கிலோ பூண்டு, 50 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இது, தற்போது, 75–80 ரூபாய் வரை விற்கப் படுகிறது.இதே காலத்தில், டில்லியில், மொத்த விற்பனை சந்தையில், ஒரு கிலோ பூண்டின் விலை, 24 ரூபாயில் இருந்து,அதிகபட்சமாக, 100 ரூபாயாக உயர்ந்துள்ளது. அது போன்று, இதே காலத்தில்,மும்பையில் ஒரு கிலோ பூண்டின் விலை, 50 ரூபாயில் இருந்து, 85 ரூபாயாகவும், புனேயில், 45லிருந்து, 90 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
இதுகுறித்து, மும்பையை சேர்ந்த சில்லரை விற்பனையாளர்ஒருவர் கூறியதாவது: மூன்று வாரங்களாக பூண்டு வரத்து குறைந்துள்ளதால் அதன் விலை உயர்ந்துள்ளது என்பதை ஏற்க முடியாது. ஏனெனில், சென்ற நிதிஆண்டில், பூண்டு உற்பத்தி, சாதனை அளவாக உயர்ந்து காணப்பட்டது.
அதனால், பூண்டு விலை உயர்வில், கையிருப்பை வெளியிட மறுக்கும் விவசாயிகள் மற்றும் வர்த்தகர்களின் கூட்டணிக்கு, முக்கிய பங்கு உள்ளது.கடந்த சில நாட்களில், மொத்த விற்பனையில், கிலோவுக்கு, 20 ரூபாய் வரை குறைந்துள்ளது. ஆனால், இந்த விலை நிலைத்திருக்க வாய்ப்பில்லை. வரும் ஜனவரியில் தான், புதிய பூண்டு அறுவடையாகும்.
பருவ மழை:அதுவரை பூண்டு விலை, ஏற்றமுடன் இருக்கும். அதே சமயம், நாட்டின் பல பகுதிகளில் பெய்து வரும் பருவ மழையால், பூண்டு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக, வரும் ஆண்டு, பிப்ரவரியில் தான், சந்தையில் புதிய பூண்டின் வரத்து நிலையாக இருக்கும். அப்போது தான் அதன் விலையும் சரிவடையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
உற்பத்தியில் முதலிடம்:நாட்டின் ஒட்டுமொத்த பூண்டு உற்பத்தியில், மத்தியபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் பங்களிப்பு, 50–60 சதவீதமாக உள்ளது
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|