பதிவு செய்த நாள்
21 டிச2013
00:58

புதுடில்லி:நடப்பு 2013–14ம் நிதியாண்டில், நாட்டின் சணல் பொருட்கள் ஏற்றுமதி, 33 சதவீதம் உயர்ந்து, 2,800 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி:இது, சென்ற 2012–13ம் நிதிஆண்டில், 2,094 கோடி ரூபாயாக இருந்தது.சர்வதேச பொருளாதார நெருக்கடியால், கடந்த 2011ம் ஆண்டு முதல், 2012ம் ஆண்டு, ஜூன் வரையிலான காலத்தில், உலக சணல் சந்தை, சுணக்கமாக இருந்தது.
இந்நிலையில், நடப்பாண்டு அமெரிக்க பொருளாதாரம், மந்த நிலையில் இருந்து மீள்வதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இதே போன்று, ஐரோப்பிய கூட்டமைப்பை சேர்ந்த ஒரு சில நாடுகளும், நிதி நெருக்கடியில் இருந்து மீண்டு வரத் துவங்கிஉள்ளன. இதன் காரணமாக, மேற்கண்ட நாடுகளில், இந்திய சணல் பொருட்களுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, சுற்றுச் சூழல் ஆர்வலர்களான ஐரோப்பியர்கள், இயற்கை தாவரமான சணல் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.இதனால் சணல் மூலம் தயாரிக்கப்படும், பைகள், கலைபொருட்கள், அலங்கார சாதனங்கள், தரை விரிப்புகள், திரைச் சீலைகள், பதாகைகள், காலணிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விற்பனை சூடுபிடித்துள்ளன.
நடப்பு நிதியாண்டில், ஏப்., – செப்., வரையிலான முதல் அரையாண்டில், இந்தியாவில் இருந்து, 143 கோடி ரூபாய் மதிப்பிலான சணல் தரை விரிப்புகள் ஏற்றுமதி செய்யப் பட்டுள்ளன. இதே போன்று, சணல் பைகள் மற்றும் இதர சணல் பொருட்களின் ஏற்றுமதி, முறையே, 405 கோடி ரூபாய் மற்றும், 475 கோடி ரூபாய் என்ற அளவிற்கு உள்ளது.நிதி உதவி:மத்திய அரசு, நாட்டின் சணல் பொருட்கள் உற்பத்தியை அதிகரிக்க, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன்படி, கடந்த, 2011ம் ஆண்டு, தேசிய சணல் வாரியம் மற்றும் சணல் பொருட்கள் மேம்பாடு மற்றும் ஏற்றுமதி கவுன்சில் ஏற்படுத்தப்பட்டது. இந்த அமைப்பு, சணல் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட ஆர்வம் உள்ள தொழில்முனைவோர்களுக்கு தேவையான, நிதிஉதவி அளிக்கிறது.அது மட்டுமின்றி, சணல் உற்பத்தி நிறுவனங்களின் விரிவாக்கத் திட்டங்களையும் ஊக்குவித்து வருகிறது.
சணல் உற்பத்தியில், மேற்கு வங்கம் முதலிடத்தில் உள்ளது. இங்கு சணல் பொருட்களின் வர்த்தகமும் சிறப்பாக உள்ளது. தற்போது, சணல் வர்த்தகம், தமிழகம் மற்றும் கர்நாடகாவிலும் பரவலாக பெருகி வருகிறது. விழிப்புணர்வு:இதை கருத்தில் கொண்டு, சணல் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தொழில்முனைவோரின் சணல்பொருட்களுக்கு, சந்தை வாய்ப்பை வழங்கும் வகையில் கண்காட்சிகளும் நடத்தப்படுகின்றன.இது போன்ற முயற்சிகளால், வரும் ஆண்டுகளில், சணல் பொருட்கள் துறை, சிறப்பான வளர்ச்சி காணும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|