பதிவு செய்த நாள்
27 மே2014
13:03

கோல்கட்டா: சில ஆண்டுகளுக்கு முன்வரை, அதிகார வர்க்கத்தின் அடையாளமாகவும், இந்திய சாலைகளின் ராஜாவாகவும் திகழ்ந்த, அம்பாசிடர் கார்களின் தயாரிப்பை நிறுத்தி வைப்பதாக, இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்து உள்ளது. நவீன சொகுசு கார்களின் வருகையால், விற்பனை டல்லடித்ததால், இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம், இந்த அதிரடியான முடிவை அறிவித்துள்ளது.
கடந்த 1950ல், இந்தியாவில் அறிமுகமானது, அம்பாசிடர் கார். இந்திய சாலைகளின் தரத்துக்கு ஈடுகொடுத்து, இயங்கக் கூடிய வகையில் இருந்ததாலும், பிரிட்டனில் தயாராகிய 'மோரிஸ் ஆக்ஸ்போர்டு' காரைப் போன்ற வடிவமைப்பில் இருந்ததாலும், அம்பாசிடர் கார்களுக்கு, இந்தியா முழுவதும் கிராக்கி எழுந்தது. பின், அம்பாசிடர் கார், ஜனாதிபதி, பிரதமர், மத்திய அமைச்சர்கள், நீதிபதிகள், கலெக்டர்கள், போலீஸ் உயர் அதிகாரி கள் உள்ளிட்ட, அதிகார வர்க்கத்தினர் பயணிக்கும், அதிகாரப்பூர்வ காராகவும் மாறியது.
இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம், மேற்கு வங்க மாநிலம், உத்தர்பாரா தொழிற்சாலையில், இந்த கார்களை தயாரித்து விற்பனை செய்தது. 60 ஆண்டுகளுக்கு மேலாக, இந்திய ஆட்டோமொபைல் சந்தையில், ஏகபோகமாக வலம் வந்த, இந்த அம்பாசிடர் காருக்கு, கடந்த சில ஆண்டுகளாக செல்வாக்கு குறைந்தது. சொகுசு கார்களின் வருகைக்கு பின், அம்பாசிடருக்கு, முக்கியத்துவம் குறைந்தது.
கடந்த 2003ல், பிரதமரின் அதிகாரப்பூர்வ வாகனமாக, அம்பாசிடர் காருக்கு பதிலாக, பி.எம்.டபிள்யூ., கார், இடம் பெற்றதால், அம்பாசிடருக்கு, படிப்படியாக கிராக்கி குறைந்தது. அதிகாரிகளும், அம்பாசிடருக்கு பதிலாக, வேறு கார்களை பயன்படுத்த துவங்கினர். கடந்த 10 ஆண்டுகளாக, ஆண்டுக்கு, 6,000 கார்களுக்கும் குறைவாகவே விற்றன. இதனால், இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு, பெரும் நிதி நெருக்கடி ஏற்பட்டது.
இந்நிலையில், இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம், உத்தர்பாரா தொழிற்சாலையை, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை, மூடுவதாக, நேற்று அறிவித்துள்ளது. இதனால், 60 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்திய ஆட்டோமொபைல் சந்தையில், ஆதிக்கம் செலுத்தி வந்த அம்பாசிடர் கார்கள், பிரியா விடை பெறுவதாக தெரியவந்து உள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|