பதிவு செய்த நாள்
19 ஜூலை2014
11:50
ஆட்டோ மொபைல் துறையில் அடுத்தடுத்து, பல புதிய கண்டுபிடிப்புகள் வந்த வண்ணம் இருப்பது தெரிந்ததே. இன்ஜினில், ட்ரான்ஸ்மிஷனில், சொகுசு மற்றும் பாதுகாப்பு அம்சங்களில், ஒவ்வொரு நிறுவனமும் மேலும், மேலும் மேம்படுத்திக்கொண்டே வருகிறது. அவ்வகையில், இன்றைய முன்னணி நிறுவனங்கள் தங்கள் வாகனங்களில் கொண்டு வரவிருக்கும், புதிய தொழில்நுட்பங்களை இக்கட்டுரையில் காணலாம்.
ஆடி அறிமுகப்படுத்த இருக்கும் கிளாஸ் பாலிமர் சஸ்பென்ஷன்:
ஜெர்மானியர்கள் புதுப்புது தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் வல்லவர்கள். ஆடி நிறுவனம் தங்கள் வாகனங்களின் மொத்த எடையை குறைக்கும் வகையில், எடையில் லேசாய் இருக்கும் கண்ணாடி நார்கள் இணைக்கப்பட்ட பாலிமர் (கிளாஸ் பைபர் ரீஇன் போர்ஸ்ட் பாலிமர்) சஸ்பென்ஷன் ஸ்பிரிங்குகளை அறிமுகப்படுத்தவுள்ளது.
பருமன் கூடுதலாகவும், விட்டம் சற்றே கூடுதலாகவும் இருந்தாலும், ஸ்டீல் ஸ்பிரிங்குகளை விட, இவை 40 சதவீதம் எடை குறைவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது மிகத்துல்லியமாக ஓட்டும் நிலைக்கேற்ப மாறுதல்களை செய்ய உதவுகிறதாம். இந்த சஸ்பென்ஷன்கள் எடைக்குறைவாக இருப்பதுடன், அதிக வலிமையாகவும், ரசாயன மற்றும் தட்பவெப்ப மாற்றங்களை தாங்கக்கூடியதாகவும், பராமரிப்பு குறைவாகவும், நீண்டநாள் உழைக்கக் கூடியதாகவும், இருக்கும் என்று கூறப்படுகிறது.
போர்ட் கொண்டு வரவிருக்கும் அடாப்டிவ் ஸ்டியரிங்:
தற்போதைய பயணியர் கார்கள் மட்டுமின்றி, வணிக வாகனங்களில் கூட, பலர் ஸ்டியரிங் பொருத்தப்பட்டு ஓட்டுனரின் தோள்களை பெரிதும் காத்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்க போர்ட் நிறுவனம் சிறப்பான அடாப்டிவ் ஸ்டியரிங் என்ற தொழில்நுட்பத்தை கொண்டு வந்துள்ளது. ஓட்டுனரின் அசைவு மற்றும் வேகத்திற்கு ஏற்ப தானாக மாற்றிக்கொள்வதால், இதற்கு ‘அடாப்டீவ்’ ஸ்டியரிங் என்று பெயர். மிகத் துல்லியமாக அசைவு மற்றும் வேகத்தை கணிக்கக்கூடிய ஆக்சுலேட்டரை ஸ்டியரிங் வீலில் பொருத்தப்படுவதே இதற்குக்காரணம். இந்த ஆக்சுலேட்டர் என்பது மின்சார மோட்டாரும், கியரிங் சிஸ்டமும் சேர்ந்த ஒன்றாகும்.
ஸ்டியரிங் வீலின் அசைவிற்கு ஏற்ப, சக்கரங்களின் அசைவை இது கட்டுப்படுத்துகிறது. வேகம் குறைவாக வண்டி செல்லும் போது, ஸ்டியரிங் அசைவு குறைவாக இருந்தாலும், சக்கரங்களின் அசைவு, வேகமாக இருக்கும். இதனால், திருப்பங்களில், நகரச்சாலைகளில் ஓட்டுவது சுலபமாக இருக்கும். இதுவே, நெடுஞ்சாலையில் வேகமாக செல்லும் போது, ஸ்டியரிங் அசைவு வேகமாக இருந்தாலும், சக்கரம் திரும்புவது தேவைக்கேற்பவே இருக்கும். இப்படி ஓட்டுனரின் வேலையை சுலபமானதாகவும், பாதுகாப்பானதாகவும் அளிப்பதே இந்த அடாப்டீவ் ஸ்டியரிங்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|